
கம்பஹா விக்ரமாராச்சி தேசிய சுதேச மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை இடம்பெறுவதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் மறுப்பு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக புதன்கிழைமை (04) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த நவம்பர் 2ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் தேசிய சுதேச மருத்துவ விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் வருட மாணவர்கள் சிலருக்கும், அவர்களை விட மூத்த வருடங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலருக்கும் இடையில் தனிப்பட்ட பிரச்சினையொன்று ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தின்போது பதிவு செய்யப்பட்ட காணொளியை அடிப்படையாகக் கொண்டு, பல்கலைக்கழகத்தில் பகிடிவதை இடம்பெறுவதாகச் சித்தரித்து சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.
எனினும், குறித்த காணொளி பகிடிவதைச் சம்பவத்துடன் தொடர்புடையதல்ல. தற்போது முதலாம் மற்றும் இரண்டாம் வருட மாணவர்கள் எவ்வித இடையூறுகளுமின்றி சுதந்திரமான கல்விச் சூழலில் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதுவரை பல்கலைக்கழகத்தில் பகிடிவதைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. மேலும், கடந்த பல வருடங்களாகப் பகிடிவதையற்ற பல்கலைக்கழகமாகத் திகழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த காணொளியைப் பகிடிவதையுடன் தொடர்புபடுத்தி பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதுடன், தவறான தகவல்களைப் பரப்பி சில தரப்பினர் தங்களது தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்ற முயற்சிகின்றனர். இதனிடையே, குறித்த சம்பவத்தில் ஒழுக்க விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட அனைவருக்கும் எதிராகப் பல்கலைக்கழகத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கைப் பொலிஸாரும் தனியான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனவே, சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளியைப் பகிடிவதைச் சம்பவமாகக் கருத வேண்டாம் என பல்கலைக்கழகம் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.












