
ஆனமடுவ - முதலக்குளிய விஜய மகா வித்தியாலயத்தின் அதிபருக்கு வழங்கப்பட்ட முறையற்ற இடமாற்றத்தை இடைநிறுத்தி, புத்தளம் மேல் நீதிமன்றத்தினால் வடமேல் மாகாண பிரதம அமைச்சுச் செயலாளருக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, புத்தளம் மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயலத் சி. சில்வா, மனுதாரரான அதிபருக்கு இடமாற்றம் வழங்கி வடமேல் மாகாண பிரதம அமைச்சுச் செயலாளர் விடுத்த கடிதத்தை வலுவற்றதாக்கும் வகையில் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் அத தெரண நீதிமன்றச் செய்தியாளர் தெரிவித்தார்.
இம்மனு தொடர்பான எதிர்ப்புகளை எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, அன்றைய தினம் வழக்கை மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
இம்மனுவின் பிரதிவாதிகளாக வடமேல் மாகாண பிரதான அமைச்சுச் செயலாளர் டப்.எம்.சி.கே. வன்னிநாயக்க, வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர் ஜே.ஏ.எம்.பி. ஜெயதிலக, புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.எம்.டி.என். பிரசாத் மற்றும் ஆனமடுவ கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.என். கலபட ஆகியோரும் சட்டமா அதிபரும் பெயரிடப்பட்டுள்ளனர்.
மனுதாரர் சார்பில் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்து ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரருக்கு இந்த முறையற்ற இடமாற்றமானது அதிபர்களுக்கு இடமாற்றங்களை வழங்க வேண்டிய முறையான வழிமுறையிலிருந்து விலகி, சட்டத்திற்கு முரணாக வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்கமைய, முதல் பிரதிவாதியான வடமேல் மாகாண பிரதம அமைச்சுச் செயலாளரின் இடமாற்றக் கட்டளையானது தன்னிச்சையானது, இயற்கையான நீதி நெறிமுறைகளுக்கு முரணானது மற்றும் சட்டவிரோதமானது, அதிகார வரம்பை மீறி மேற்கொள்ளப்பட்ட ஒரு தீர்மானம் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரிய சட்டத்தரணி, அத்தீர்மானத்தை இரத்துச் செய்து தள்ளுபடி செய்யும் வகையிலான ரிட் ஆணை மூலம் அக் கட்டளையைச் வலுவற்றதாக்கி, இடைக்காலத் தடை உத்தரவை முதல் பிரதிவாதியான வடமேல் மாகாண பிரதம அமைச்சுச் செயலாளருக்கு எதிராக வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.












