![]() |
By- கெளரி புண்ணியமூர்த்தி , மைலம்பாவெளி, தன்னாமுனை மட்டக்களப்பு.
இலங்கையின் கிழக்குக் கரை யோரத்தில் முருக வழிபாடு மிகத் தொன்மைக் காலம் முதலாக நிலைபெற்று வந்துள்ளது. அப்பகுதியிற் காணப்பட்ட பிராமிச் சாசனங்கள் இதற்குச் சான்றாக அமைகின்றன.
மட்டக்களப்பு மான்மியமானது கிழக்கிலங்கை முருகனாலயங்கள் பற்றியும் அவற்றிற்கான மன்னர்களது திருப்பணிகள் மற்றும் மானியங்கள் பற்றியும் குறிப்பிடுகின்றது. அவ்வாலயங்களில் காணப்படும் சாசனங்கள் சற்றுப் பிந்திய காலத்திற்குரியனவாக காணப் படுகின்ற போதிலும், அக்கோயில்களிலே பின்பற்றப்படுகின்ற வழிபாட்டு முறைகள் பாரம்பரியமிக்கனவாகவும், கதிர்காமத்துடன் தொடர்புடையன வாகவும் அமைகின்றன. கிழக்கிலங்கையில் உள்ள பழமை வாய்ந்த முருகனாலயங்கள் 'திருப்படைக் கோயில்கள்' என அழைக்கப்படுகின்றன. கிழக்கிலங்கைத் திருப்படைக் கோயில்கள் என்று அடையாளங் காணப்படுபவை வடக்கே, வெருகல் முதல் தெற்கே குமண வரையான பிரதேசத்திலுள்ள ஐந்து தலங்களாகும். அக்கோயில்கள் மட்டக்களப்பிற்குரிய திருப்படைக் கோயில்காளகவே அடையாளப் படுத்தப்பட்டு வந்துள்ளன.
எனினும் வெருகல் சித்திரவேலாயுதர் கோயில் திருகோணமலை மாவட்டத்திலும், திருக்கோயில் சித்திர வேலாயுதர் கோயில் அம்பாறை மாவட்டத்திலும் அடங்கியுள்ளன.
![]() |
| திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி |
"மட்டக்களப்பில் பழமையும் பிரசித் தமும் உடையனவான முருகன் கோயில்களைத் திருப்படைக் கோயில்கள் என்று கூறுவர். பண்டைய அரசர்களின் மதிப்பும், மானியமும், சீர்வரிசைகளும் பெற்ற கோயில்களே திருப்படைக் கோயில்களாகும்" என வி. சி. கந்தையா தனது மட்டக்களப்புத் தமிழகம் எனும் நூலில் குறிப் பிடுகின்றார். இவர் கொக்கட்டிச்சோலை தான்தோன்aஸ்வரர் கோயிலையும் திருப்படைக் கோயில்களுள் ஒன்றாக கருதுகின்றமை அவதானத்திற்குரியது.
கோயிலின் மூலஸ்தானத்தில் முருகனது படையாகிய வேல் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில்களே திருப்படைக் கோயில்களாகும். முருக வழிபாட்டின் தோற்றமாக வேல் வழிபாடு அமைந்திருந்தது. பழந்தமிழ் இலக்கியங்களான திருமுருகாற்றுப் படையிற் காணப்படும் 'வேல் கெழு தடக்கைச் சால் பெருஞ் செல்வ', 'செவ்வேற் சேஎய்' (திருமுருகாற்றுப்படை- 61) போன்ற குறிப்புகளும், பரிபாடலிற் காணப்படும் 'செருசேற்றானைச் செல்வ' (பரிபாடல் 18: 54) என்ற குறிப்பும் முருக வழிபாட்டில் வேல் பெறும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றது. வேல் மிகப் பழைய வழிபாட்டம் சமாகும். படைவீடு என்பது முருகனது ஆறு வீடுகளுடன் இணைத்துக் கூறப்பட்டாலும், இதில் வரும் படை (ஆயுதம்) முருக வணக்கத்தின் தோற் றமாக வேல் அமைந்ததை எடுத்துக் காட்டுகின்றது.
பழந்தமிழ் இலக்கியங் களின் மூலம் முருகனின் அடையாளமாக (சின்னமாக) வேல் வணங்கப்பட்ட செய்தியை அறிய முடிகின்றது. எனவே முருகனது படையாகிய வேலினை மூலஸ்தானத்தில் கொண்டிருந்த கோயில்கள் 'படைக்கோயில்கள்' எனப்பட்டன. தெய்வீகத்தைக் குறிக்க பயன்படும் 'திரு' என்ற அடைமொழியை இணைத்துக்கொண்டு இக்கோயில்கள்
'திருப்படைக் கோயில்கள்' என்ற நாமத்தினைப் பெற்றுக்கொண்டன. திருப்படைக் கோயில்களின் தொன்மையை எடுத்துக்காட்டுவனவாக இவற்றின் பெயர்களிலே 'வேலாயுதம்' என்ற அடைமொழி சேர்க்கப்பட்டுள்ளமை கவனத்திற்குரியது. இக்கோயில்களில் வேலே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆயினும் வெருகல் சித்திர வேலாயுதர் சுவாமி கோயிலில் இன்று மூலமூர்த்தியாக முருகனதும் அவரது தேவியரதும் திருவுருவங்கள் பிரதிஷ்டை செய் யப்பட்டுள்ளன. எனினும் இக்கோயிலின் பெயரில் இடம்பெறும் 'வேலாயுதர்' என்னும் அடைமொழி முன்பு முருகனது படையான வேலே அங்கு வழிபாட்டுப் பொருளாகக் காணப்பட்டது என்பதைத் தெளிவாக்குகின்றது. வேல் வைத்து வழிபடப்பட்ட இடமே இப்போது கதிர்காமசுவாமி கோயில் என்று வழங்கி வருகின்றது என்பது மரபு. இந்த விளக்கத்தின் அடிப்படையில் நோக்குகின்றபோது கொக்கட்டிச்சோலை தான்தோன்aஸ்வரர் கோயில் திருப்படைக் கோயில் என்ற வரையறைக்குள் அடங்க மாட்டாது. அது தேசத்துக் கோயிலாகும். ஏனெனில் அங்கு மூலவராக அருவத் திருமேனியான (சிலர் அருவுருவம் என்பர்) சிவலிங்கமே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முற்காலங்களிலே மட்டக்களப்பு தேசத்தவர்களாற் தலை சிறந்தனவாகக் கொள்ளப்பட்டவை தேசத்துக் கோயில்களாகும். தேசத்திலுள்ள சைவர்கள் எல்லோரும் அத்தலங்களுக்கு யாத்திரை செல்வது வழக்கம். விழாக்காலங்களில் ஆலயங்களில் நடைபெற்ற வைபவங்களும் அவற்றிலே அனுசரிக்கப்பட்ட சம்பிரதாயங்களும் சமுதாயக் கட்டுக்கோப்புகளுக்கும் பந்தங்களுக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் அமைந்திருந்தன. தலயாத்திரைகளும் ஆலய வழமைகளும் மட்டக்களப்புப் பிராந்தியம் முழுவதிலும் வாழ்ந்த மக்களிடையே சமய வழிபாடுகள், சம்பிரதாயங்கள், இலக்கிய மரபுகள், சடங்குகள் முதலானவற்றில் ஒரு பொதுவான பாரம்பரியம் ஏற்படுவதற்கு ஏதுவா யிருந்தன. அதன் விளைவாகவே மத்திய காலத்தில் மட்டக்களப்பு தேசம் என்ற சிந்தனை உருவாகியது.
முருக வழிபாட்டைப் பொறுத்த வரையில் தமிழகம் மற்றும் ஈழத்தின் ஏனைய இடங்கள் போலல்லாது கிழக்கில் சற்று வித்தியாசமான நடை முறைகள் பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. புராதன காலம் முதலாக அப்பகுதிகளில் வேல் வழி பாடு நிலை பெற்று வந்துள்ளமைக்குத் திருப்படைக் கோயில்கள் சான்றாக அமைகின்றன. இக்கோயில்களில் வேடர் பூசை முறைகளும் பாரம் பரியங்களும் சேர்ந்து நடைபெறுவதும் முக்கிய அம்சமாகும். இத்துடன் கப்புகன் வழிபாட்டு முறையையும் அங்கு காணமுடிகின்றது. கப்புகன் என்பது சிங்களத்தில் கப்புறாளை எனக் கூறப்படுகின்றது.
மட்டக்களப்பில் கப்புகன் வழிபாடானது மெளன வழிபாட்டைக் குறிக்கும். இதற்கு அறிகுறியாக கப்புகன்மார் வாய் திற வாத நிலையில் வாய்ச்சீலை கட்டிக் கொள்வதைக் காணலாம். கந்தழி வழிபாடு (உருவமற்ற தெய்வத்திற்கு பிராமணரல்லாத கப்புறாளையால் இயற்றப்படும் வழிபாடு) பண்டைய வேலன் வழிபாட்டை நம் மனக்கண் முன்பு நிறுத்துகிறது. வேலன் வழி வந்த பூசாரிகளே காலகதியில் சிங்கள மொழி மாற்றத்தால் கப்புறாளை என அழைக்கப்பட்டனர். இவ்வழிபாட்டு முறை மண்டூர் முருகன் ஆலயத்திலும் கதிர்காமத்திலும் இன்றும் தொடர்ந்து இருந்து வருகின்றது.
வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி கோயிலில் அமைந்துள்ள கதிர்காமசுவாமி கோயிலிலும் இம்முறையை அவதா னிக்க முடிகின்றது. மட்டக்களப்புத் திருப்படைக் கோயில்கள் கதிர்காமத்துடன் தொடர்புடையனவாகக் காணப்படு கின்றன. அவ்வாலயங்கள் கதிர்காமத்தை யொட்டி உபய கதிர்காமம், சின்னக் கதிர்காமம் என்று அழைக்கப்படும் மரபு இப்பகுதிகளில் உண்டு கதிர்காமத்தைப் பின்னணியாகக் கொண்டதோர் வழிபாட்டு முறையே மட்டக்களப்புத் திருப்படைக் கோயில்கள் அனைத்திலும் இழையோடுவதைக் காணமுடிகின்றது. எனவே இவற்றினை கதிர்காமத்தினை ஒத்த வரலாற்று மரபு சார்ந்த கோயில்கள்.
மட்டக்களப்புத் திருப்படைக் கோயில்களில் முதன்மைக் கோயிலாக திருக்கோயில் சித்திரவேலாயுதர் சுவாமி கோயில் காணப்படுகின்றது. அது மட்டக்களப்பிற்குத் தெற்கே நாற்பத்தாறு மைல் தொலைவில் அமைந்துள்ளது. திருக்கோவில் பண்டைக் காலத்தில் நாகர்முனை, உன்னரசுகிரி, கண்டபாணந்துறை முதலிய பெயர்களால் குறிப்பிடப்பட்டது. ஆதியான முருக வழிபாட்டின் அம்சமான வேல் வழிபாட்டைக் கொண்ட இவ்வாலயம் ஆதிக்குடிகளான வேடுவரின் வழிபாட்டிலேயே தொடங்கப்பட்டது. இவ்வாலயத்தின் தோற்றம் தொடர்பில் பல ஐதிகக் கதைகள் காணப்படுகின்றன. திருக்கோயில் புவனேகயபாகு என்னும் கலிங்க இளவரசனது காலத்திலும், அவனது மகன் மனுநேயகயபாகு காலத்திலும் இருமுறை சோழ நாட்டுச் சிற்பிகளாலே திருத்திய மைக்கப்பட்டமை பற்றி மட்டக்களப்பு மான்மியம் கூறுகின்றது. மாகனது திருப்பணி அவ்வாலயத்திற்கு இடம் பெற்றுள்ளமையையும் இந்நூல் கூறும்.
திருக்கோயில் சித்திரவேலாயுத சுவாமி கோயில் போர்த்துக்கேயரால் தகர்கப்பட்டமை பற்றி குவேரோஸ் தமது நூலிற் கூறியுள்ளார். அக்கோயிலில் மூன்று கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. அதில் தம்பிலுவில் அம்மன் கோயிலிற் காணப்பட்ட கல்வெட்டானது 16 ஆம் நூற்றாண்டுக்குரியது என அடையாளங் காணப்படுகின்றது.கெளரி புண்ணியமூர்த்தி
மைலம்பாவெளி,
தன்னாமுனை மட்டக்களப்பு.
--














.jpeg)
