அக்கரைப்பற்றில் இடம்பெற்ற அம்பாரை மாவட்டத்தின் கலாசார அபிவிருத்தி பற்றிய விஷேட கலந்துரையாடல்

ஏ.ஜி.ஏ.கபூர், அக்கரைப்பற்று.
அம்பாரை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்திலுள்ள தமிழ் முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவுகளில் செயற்படும் கலை மன்றங்களின் உறுப்பினர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள் மற்றும் கலாசார உத்தியோகத்தர் முதலியோர்களுடனான மாவட்டத்தின் கலாசார அபிவிருத்தி பற்றிய விஷேட கலந்துரையாடலொன்று அக்கரைப்பற்று கலாசார மத்திய நிலையத்தில் நேற்று (01.08.2014) வெள்ளிக்கிழமை நடைபெற்றது


அம்பாரை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக் தலைமையில் நடைபெற்ற இவ் விஷேட கலந்துரையாடலில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் டபிள்யூ.ஏ.விக்ரம ஆராச்சி, தலiமைக் காரியாலய கலாசார உத்தியோகத்தர் கே.அன்பழகன், அம்பாரை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்திலுள்ள தமிழ் முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள கலை மன்ற உறுப்பினர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள் மற்றும் கலாசார உத்தியோகத்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அம்பாரை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக் அவர்களின் ஆரம்ப உரையினை அடுத்து கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் டபிள்யூ.ஏ.விக்ரம ஆராச்சி அவர்கள் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் செயற்பாடுகள் பற்றி விளக்கியதோடு இந்த வருடம் செயற்படுத்தப்பட்டு வருகின்ற செயற்றிட்டங்கள் பற்றியும் விளக்கமளித்தார்.

கலாசார அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்துவதில் கலாமன்றங்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறிப்பாக நிதிப் பிரச்சினைகள், கலைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் கலைஞர்கள் தங்களது ஆக்கங்களை ஆவணப்படுத்துவதில் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றியும், அருகி வருகின்ற மற்றும் அருகும் நிலையிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் பாரம்பரிய கலை, கலாசார பண்பாடுகள் குறிப்பாக பொல்லடி, சீனடி, சிலம்படி, நாட்டுக் கூத்துஈ போர்த் தேங்காய் அடித்தல் முதலிய பண்பாட்டு நிகழ்ச்சிகளை உயிர்ப்பிப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், கலாசார அபிவிருத்தி செயற்றிட்டங்களுக்கு கூடுதலான நிதிகளை ஒதுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல், எமது பண்பாட்டுத் திறன்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள்பற்றியும் மூத்த கலைஞர்கள் கலை மன்ற உறுப்பினர்கள் மற்றும்  கலாசார உத்தியோகத்தர்கள் முதலியோர் காத்திரமான ஆலோசனைகளை முன்வைத்தனர்.

பெறுமதியான ஆலோசனைகளை முன் வைத்த அனைவருக்கும் பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் டபிள்யூ.ஏ.விக்ரம ஆராச்சி நன்றி தெரிவித்தார்.