மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

(சிவம்) மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் தங்களுக்கு வேலை கிடைக்காததைக் கண்டித்து நகர மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்பு 26.01.2015 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2012 மார்ச் மாதம் 31 ம் திகதிய வர்த்தமானி அறிவிப்பின் படி அரசாங்க அலுவலகங்களில் பட்டதாரிகளுக்கு வேலை வழங்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் எஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்காததற்குக் கண்டனம் தெரிவித்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர்.

முன்னைய அரசாங்கம் தமக்கு வேலைவாய்பு நியமனங்களை வழங்க தவறிவிட்டது எனவும், இப் புதிய அரசாங்கம் தமது நூறு நாள் வேலைத்திட்டத்தில் தமக்கு அரச நியமனத்தினை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கையினை எடுக்கவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தொரிவித்தனர்.

குறித்த காலத்தில் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்கள் தங்களது சேவைகள் பகிஷ்கரிப்பின் காரணமாக தங்களது பட்டமளிப்பு தாமதமானதால் இந்நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.

தங்களது பிரச்சினைகள் குறித்த மகஜரை சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா. அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான மா. நடராஜா, இந்திரக்குமார் பிரசன்னா, ஞா. கிருஷ்ணபிள்ளை ஆகியோருக்கு வழங்கியதோடு மாவட்டச் செயலகத்திக்குச் சென்று அரச அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ்சிடமும் கையளித்தனர்.

இதன்போது மகஜரைப் பெற்றுக் கொண்டவர்கள் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு இதுகுறித்து அறிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்தனர்.
குறித்த மகஜரின் பிரதிகள் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கருஜயசூரிய, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், தமிழ் தேசியக் கூட்டடைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளனர்.

இதேவேளை மாவட்டத்தில் 2014 ஆம் ஆண்டு வரை  800 பேர் வரை வேலையில்லாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.