இலங்கையில் பாரிசவாத நோயாளர்களுக்கான முதலாவது புனர்வாழ்வு நிலையம் வாழைச்சேனையில்

(ஏ.எச்.ஏ. ஹிஸைன் ) இலங்கையில் பாரிசவாத நோயாளர்களுக்கான  முதலாவது புனர்வாழ்வு  நிலையம் மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை  ஆதார  வைத்தியசாலையில் ஞாயிறன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடைகளுடன்   இந்த  பாரிசவாத நோய்க்கான புனர் வாழ்வு  நிலையத்தில் சிகிச்சையுடன்  ஆற்றல் படுத்தும்  வகையிலான சுற்றுச் சூழல்களையும் பொழுது போக்கு அம்சங்களையும் கொண்டுள்ளது.

2011ம் ஆண்டு இலங்கையில் ஆசிய பாரிசவாத மாநாட்டில் கலந்து கொண்ட அப்போது சுகாதார அமைச்சராகவிருந்த தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பாரிசவாத  நோயின் தாக்கம் பற்றி குறிப்பிட்டு கவலையும் வெளியிட்டிருந்தார்.

போதானா,  பொது மற்றும் தள வைத்தியசாலைகளில் பாரிசவாத நோய்க்கான தனியான சிகிச்சை பிரிவுகள் ஆரம்பிக்கப்பட வேண்டியதன் தேவை பற்றியும் அவர் கூறியிருந்தாலும் புனர்வாழ்வு நிலையங்கள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

இலங்கையில் 110 பேரில் ஒருவர் பாரிசவாத நோயால் பாதிக்கப்படுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட ஆய்வொன்றை மேற்கோள் காட்டிய வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் சிரேஷ்ட உள நல மருத்துவரான டாக்டர்  ஜுடி ரமேஸ் ஜெயக்குமார் தொரடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்

இலங்கையில் ஆறு அரசாங்க  வைத்தியசாலைகளில் மட்டுமே  பாரிசவாத நோய்கான  அதி தீவிர சிகிச்சை பிரிவுகள் உள்ள போதிலும்  தனியான  புனர்வாழ்வு  நிலையங்கள் எதுவும் இதுவரையில்  இல்லை 

பதுளை மாவட்டத்திலுள்ள தியத்தலாவை  அரசாங்க வைத்தியசாலையில் ஆரம்பிப்பதற்கு ஏற்கனவே சுகாதார அமைச்சினால் நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வரழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் தற்போது செயல்படும் புனர்வாழ்வு நிலையத்தில் 10 பேர் தங்கிருந்து சிகிச்சையுடன் இணைந்த புனர்வாழ்வு பெறுவதற்கான வசதிகள் மட்டுமே உள்ளது

மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை  பிரிவில்  சிகிச்சை பெற்ற  பின்னரே   புனர்வாழ்வு  நிலையத்தில்  பாரிசவாத நோயாளியொருவர் இணைத்துக் கொள்ளப்படுவர்.  இந்த நிலையத்தில் அதி தீவிர சிகிச்சை வழங்கப்படமாட்டாது

புனர்வாழ்வு என்பது கால வரையறைக்கு உட்பட்டது அல்ல. அவர் தானாக  இயங்கும் வரை வழங்கப்படும் என்றும்  வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பாரிசவாத புனர்வாழ்வு நிலையத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட உள நல மருத்துவர்  டாக்டர்  ஜுடி ரமேஸ் ஜெயக்குமார்  தெரிவித்தார்.