திருகோணமலையில் மனித எச்சங்கள் கண்டெடுப்பு

(கதிரவன்  ) திருகோணமலை மக்கெய்ஸர் விளையாட்டரங்கை அண்மித்த பகுதியில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நேற்று  (06) மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது மனித எச்சங்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதி திருகோணமலை மக்கெய்ஸர் விளையாட்டரங்கின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மனித எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.


இந்த விடயம் தொடர்பில் திருகோணமலை நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டதை அடுத்து, மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்கு
தடை விதிக்கப்பட்டதுடன் அந்த இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நேற்று  (06) திருகோணமலை நீதவான் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது மனித எச்சங்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த மனித எச்சங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற இடத்திற்கு அரச இரசாயனப் பகுப்பாய்வாளர்கள், நில அளவியலாளர்கள் உள்ளிட்ட மேலும் பல அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.