இலங்கைவாழ் காப்பிரி இனமும் பண்பாடும் - சிரம்பியடி பிரதேசம் பற்றிய ஒரு சமூகவியல் பார்வை

பரந்துவிரிந்து கிடக்கின்ற இவ்வுலகில் வாழ்க்கையோடு தினம் போராடிக் கொண்டிருக்கின்ற மக்கள் தம் வாழ்வினை அர்த்தப்படுத்தும் ஒரு செயன்முறையாக கருதுவது தமது கலாசாரத்தினையும் பண்பாட்டு நடைமுறைகளையும் தான். தம்மை உலக அரங்கிற்கு பல்வேறு கோணங்களிலும் வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் ஓர் இனமே காப்பிரி இனமாகும். வடமேற்கே புத்தளம் மாவட்டத்தின் சிரம்பியடியில் இவர்களில் பெரும்பான்மையானவர்களும் கிழக்கே மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் ஆங்காங்கே சிலரும் வாழ்கிறார்கள்.


காப்பிரி என்ற சொல்லானது காப்பிரி சமூகத்தின் பூர்வீக கண்டமாகக் கருதப்படுகின்ற தென்னாபிரிக்க, மத்தியாபிரிக்க நிலப்பரப்பின் பழங்குடிகளான 'பண்டு' இனத்தை குறிக்கும் பழமையான சொல்லிலிருந்து வந்தது என்றும் இப்பூர்வீக இனமே போர்த்துக்கீசரால் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு காலனித்துவ இலங்கையின் பல வரலாற்றுப் பக்கங்களை நிரப்பியது என்றும், அவர்கள் இன்றைய இலங்கையின் சிறுபான்மைச் சமூகமாகக் காணப்படுகின்ற ஆபிரிக்கர்களாகவுள்ளனர்.

இக்காப்பிரி என்ற சொல்லுக்கு மற்றொரு விளக்கமும் உள்ளது. அதாவது ஆபிரிக்கா கண்டத்திற்குள் ஐரோப்பியரின் ஊடுருவல் ஆரம்பமாவதற்கு முன்பே ஆபிரிக்கர்கள் இஸ்லாத்தை தழுவியிருந்ததாகவும்,போர்த்துக்கீசரின் வசம் ஆபிரிக்கா சிக்கிக்கொள்ள அவர்களில் கணிசமானவர்கள் கத்தோலிக்க மதத்தை தழுவியிருந்ததாகவும் கூறப்படுகின்றது. இஸ்லாத்தை நிராகரித்தவர்களைக் குறிக்கும் 'கபிர்' என்ற அரபுச்சொல் 'மயக்கை' ஆகி அதுவே தமிழில் காப்பிரியாக வந்திருக்க வேண்டும் என்கிறார்கள் சிலர்.

கி.பி 5ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசரினால் ஆபிரிக்காவிலிருந்து சிப்பாய்களாக இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டவர்களாக இக்காப்பிரி சமூகத்தவர்கள் காணப்படுகின்றனர். போர்த்துக்கீச மாலுமிகள் முதற் தொகுதிக் காப்பிரியர்களை அப்போதைய சிலோனுக்கு 1500ம் ஆண்டு கொண்டு வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் மொசாம்பிக் நாட்டைச் சேர்ந்தவர்களாவர். கி.பி 5ம் நூற்றாண்டில் எத்தியோப்பிய வணிகர்கள் மாதோட்டத் துறைமுகத்தில் வணிகம் செய்திருக்கின்றார்கள். அதன் பின்னர் முதன்முறையாக 1631.10.13இல் நூறு காப்பிரியர்கள் கோவா துறைமுகம் வழியாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டார்கள் என வரலாற்று சான்றுகள் எடுத்தியம்புகின்றன. காப்பிரி மக்கள் அங்கோலாவிலும், மொசாம்பிக்கிலும் ஆபிரிக்கக் கண்டத்தின் வேறு சில பகுதிகளிலிருந்தும் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளார்கள்.



இவ்வாறு வேலைகளுக்காகக் கொண்டு வரப்பட்டவர்கள் ஆரம்பத்தில் கோட்டைகள் அமைத்தல், பாதுகாப்பு வழங்குதல், கடற்படையின் ஓர் அங்கமாக செயற்படல், வீட்டுவேலைகள் செய்தல் மற்றும் படைத் துறையிலும் வேலைக்காக நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அத்தோடு போத்துக்கீசப் படைத்தளபதி 'Diego de Mello de Castro' 1638ஆம் ஆண்டு கண்டி மீது படையெடுத்த போது அதில் 300காப்பிரிகள் பங்கேற்றதாக இலங்கை வரலாறு கூறுகின்றது.இதைத் தொடர்ந்து இலங்கை போத்துக்கீசரிடம் இருந்து டச்சுக் காரர்களின் ஆட்சியில் சிக்க, காப்பிரிகளும் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியில் இணைக்கப்பட்டார்கள்.

டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியும் மேலும் ஆபிரிக்க மக்களை இலங்கைக்குள் கொண்டு வந்து சேர்த்தது. 1675-1680 காலப்பகுதியில் டச்சுத்தளபதியாக பணியாற்றிய “Van Goens Jr”' இனுடைய காலத்தில் டச்சுப் படையில் இருந்த காப்பிரிகளின் எண்ணிக்கை 4000ஆகக் காணப்பட்டது.போர்த்துக்கீசர் மற்றும் ஒல்லாந்தர்களைத் தொடர்ந்து ஆங்கிலேயருக்கும் அடிமைமோகம்
உருவாகியது. இக்காலத்தில் இலங்கை ஆயுதப் படையினருக்கு எதிராக காப்பிரிப்படைப் பிரிவுகளில் போரிடுவதற்காக பிரித்தானியக் குடியேற்ற வாசிகள் ஏனைய காப்பிரிகளை இலங்கைக்கு அழைத்து வந்தனர்.

பிரித்தானியாவின் முதலாவது ஆளுனர் “Frederick North” என்பவர் ஒருவருக்கு 125 ஸ்பானிய டொலர் என்ற விலைப்படி மொசாம்பிக் அடிமைச் சந்தையில் கறுவாவும்  பணமும் கொடுத்து ஒரு பண்டமாற்றுப் பொருள் போல ஆபிரிக்க மக்களை விலைபேசி வாங்கிக் கொண்டார்.அவரைத் தொடர்ந்து இலங்கை ஆளுனராகப் பதவியேற்ற “Bestowed” மேலும் பல காப்பிரியர்களை இலங்கைக்குக் கொண்டு வந்தார். அத்தோடு போர்த்துக்கீசரின் கோவா அடிமைச் சந்தையில் பணத்திற்கும், பண்டத்திற்கும் காப்பிரி மக்கள் விற்கப்பட்டதால் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு தேவையான போதெல்லாம் கோவாவிலிருந்து காப்பிரியர்களை திருகோணமலை வழியாக இலங்கைக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

1815இல் பிரித்தானிய படைத்தலைவராக இருந்த 'அல்விஸ் ஜெமாடர்' தென்னாபிரிக்கச் சந்தையில் இருந்து பெருந்தொகையில் காப்பிரிகளைக் கொண்டுவந்து சேர்த்தார். அதற்குப் பின்னரான காலத்தில் பிரித்தானியப் படையின் 3ம், 4ம் படைப்பிரிவுகள் முழுமையான கருநிறத்தோடு காப்பிரிகளை மட்டுமே கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தன. முன்னிருந்த
காலங்களைக் காட்டிலும் “Bertolacci” இனுடைய காலத்திலே 9000இற்கும் அதிகளவான காப்பிரிகள் கொண்டுவரப்பட்டனர். இதைத் தொடர்ந்து 1815-1817 காலப்பகுதியில் பிரித்தானியருக்கு ஏற்பட்ட நிதிப்பற்றாக்குறை காரணமாக காப்பிரிகள் இருந்த படையணிகள்
கலைக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து இலங்கை நாடானது சுதந்திரம் பெற்றுக் கொண்டதன் பின்னர் ஆபிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட காப்பிரி மக்களை திருப்பிக் கொண்டுசெல்ல யாருக்கும் துணியவில்லை. அதனால் அவர்கள் இலங்கையிலேயே தங்கி தம் வாழ்க்கையினை நடாத்த வேண்டிய
கட்டாயத்திற்கு ஆளாகினர்.  இதனால் இம்மக்கள் எதற்காக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டார்களோ அதிலிருந்து கைவிடப்பட்டதனால் மீண்டும் சொந்த ஊருக்குச் செல்லாமலும் வேறு எந்தத் தொழிலும் செய்ய முடியாமலும் இவர்கள் தமது வயிற்றுப் பசியைத் தீர்த்துக்கொள்வதற்காக
சிறுசிறு வேலைகளைச் செய்து இலங்கையிலேயே திருகோணமலை, புத்தளம், நீர்கொழும்பு, மட்டக்களப்பு, கண்டி உள்ளிட்ட பல இடங்களில் தமது வாழ்க்கையினை தொடர்ந்தார்கள்.

இலங்கையில் நீர்கொழும்பு, புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் வாழுகின்ற இம்மக்களது கலாசாரமும் பண்பாட்டு   செல்நெறியும் எவ்வாறாக காணப்படுகின்றது என்பதனை நோக்கினால், பல்லினக் கலாசாரத்தின் மடியில் தவழ்ந்து கொண்டிருக்கும் இவ்வுலக நாடுகளின் சரித்திரங்களும், நியமங்களும் அந்தந்த நாட்டின் இனங்களுக்கிடையே தொன்று தொட்டுக் காணப்பட்டு வருகின்ற கலாசாரங்களினதும் பண்பாட்டு நடைமுறைகளினதும் வெளிப்பாடாகும்.

இவ்வாறான வெளிப்பாடு ஒவ்வொரு சமூகங்களுக்கிடையேயும் நிலவி வருகின்ற பழக்கவழக்கங்கள், கலை, கலாசாரம், பண்பாடுகள், விழுமியங்கள், வாழ்க்கை நடைமுறைகள், நம்பிக்கைகள், ஒழுக்கக் கோட்பாடுகள் என்பவற்றோடும் ஒவ்வொரு தனிமனித வாழ்க்கையின் சிந்தனையோடும் தொடர்புடையதாக காணப்படுகின்றது. ஆசியாவின் அதிசயம்  என்று இலங்கை  தம்மை சர்வதேச அளவில் பறைசாற்றிக் கொண்டிருக்கும் வேளையில் இலங்கைக்குள்ளேயே சிறுபான்மையினரிலும் சிறுபான்மையாக இருக்கும் ஓர் இனம்  உள்நாட்டிலும்  வெளிநாட்டிலும் பெரிதாக பேசப்படாமல் இருப்பது வியக்கத்தக்கது.

அக்காலகட்டத்தில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து ஒரு தொகுதியினர் இலங்கைக்கு அடிமைகளாக கொண்டுவரப்பட்டனர். இவர்களே இன்று பெருவாரியாகப் பேசப்படும் காப்பிரி இனத்தவராவர். இவர்கள் மொசாம்பிக் நாட்டிலிருந்து வந்ததாக தமது முன்னோர் கூறக் கேட்டதாகக் கூறினாலும், அது முற்றிலும் சரியா, அப்படியென்றால் மொசாம்பிக் நாட்டின் எப்பகுதியிலிருந்து வந்தார்கள் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் அருந்தலாக காணப்படுகின்றமை கவலைக்குரியதே.

1505 ஆம் ஆண்டுகளுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் தமது குடியேற்றங்களை அமைத்துக் கொண்டதாக கருதப்படும் இவர்களில் இன்று எத்தனைப் பேர் இலங்கையில் வசிக்கின்றனர் என்பது தொடர்பான புள்ளிவிபரங்கள் இல்லை. இருப்பினும் இவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர், வடமேற்கே புத்தளம் மாவட்டத்தின் சிரம்பியடி பகுதியிலும் சிறு எண்ணிக்கையானோர் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் உள்ளனர்.

இவர்களின் கலாசார பண்பாட்டு கோலங்களை நோக்கும் போது மொழியானது காப்பிலி மொழி, சிங்களம், தமிழ், மற்றும் இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழியினை பேசுபவர்களாகவும் சமயத்தினை பொறுத்தமட்டில் இஸ்லாம், உரோமன் கத்தோலிக்கம், பௌத்தம் ஆகிய சமயங்களை பின்பற்றுபவர்களாகவும்  பறங்கியர், சிங்களவர், இலங்கைத் தமிழர் ஆகிய
இனக்குழுக்களுடன் தொடர்புள்ளவர்களாகவும் காணப்படுகின்றனர்.
மக்களது வாழ்வியலை பிரதிபலிக்கின்ற பல்வேறு அம்சங்களில் பிரதானமாக காணப்படுவது மொழி ஆகும். இவர்களது மொழி போர்த்துக்கீசம் கலந்த காப்பிலி (ஆப்பிரிக்க) கிரியோல் மொழியாக இருந்தபோதிலும் தற்போது சிங்களமே இவர்களின் தாய்மொழியாக மாறிவிட்டது.

மேலும் போர்த்துகீச மொழியானது தற்போது மிக குறைந்தளவிலே காணப்படுகின்றது என்றும் ஆபிரிக்காவில் இருந்து இராணுவ நடவடிக்கைகளுக்காக அழைத்து வரப்பட்ட இம்மக்களது பழமையின் எச்சமாக எஞ்சி நிற்பது தமது போர்த்துக்கீச மொழியிலான பாடல்கள் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. காரணம் பண்பாட்டு மாற்றம், பண்பாட்டு பரவல், பண்பாட்டு நகர்வு என்பனவற்றின் ஊடுருவல் காரணமாகவும் பல்வேறு உலகமயமாக்கல் செயற்பாடுகளின் விளைவுகள் குறித்தும் வாழ்வியல் அம்சங்களில் ஏற்பட்ட மாற்றம் காப்பிரி இனத்தவரின் மொழியிலும் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது.

ஆயினும் பழமையின் எண்ணமும் அவர்களது பண்பாட்டு விடயங்களும் அழிந்து விடக்கூடாது என்பதில் அவர்கள் இன்றும் தம் தனித்துவத்தை பேணி பாதுகாக்க முயற்சிக்கின்ற போக்கினை காணக்கூடியதாக இருந்தது. அதாவது போர்த்துக்கீச மொழியில் பரீட்சியமாக இருப்பது பாடல்கள் தான் என கூறிய
இவர்கள் அப்பாடல்களுக்கான அர்த்தத்தினையும் தாம் தற்போது கற்று வருவதாக கூறினர். மற்றும் சில போர்த்துக்கீச மொழியிலான சொற்களும் புழக்கத்தில் காணப்படுகின்றன எடுத்துக்காட்டாக (ஹாகு - தண்ணீர், பெபே-குடித்தல், குமே - சாப்பிடுதல், மாஞ்சா - பைலா பாட்டு, மம்மா - அம்மா, பப்பா - அப்பா) போன்ற சொற்களை
குறிப்பிடலாம்.

புத்தளத்தில் ஆபிரிக்க காப்பிரிய இன குடும்பங்கள் 50 அளவில் வாழ்கின்றன.
திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் ஆபிரிக்க காப்பிரி இனத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். திருகோணமலையில் வாழும் ஆபிரிக்க காப்பிரியர்களுடன் இவர்களுக்குத் தொடர்புகள் இருக்கின்றன. ஆனால் மட்டக்களிப்பில் வாழும் ஆபிரிக்க காப்பிரியர்களுடனான தொடர்புகள் இவர்களுக்குக் குறைவு என்றே கூற வேண்டும். காரணம் மட்டக்களப்பில் வாழும்; இவ்வினத்தவர்கள் தமிழ் மொழியையே பேசுகின்றவர்களாக காணப்படுவதனால் திருகோணமலை மற்றும் புத்தளம் போன்ற பகுதிகளில் வாழும் ஆபிரிக்க காப்பிரியர்களுக்கும் மட்டக்களிப்பில் வாழும் ஆபிரிக்க காப்பிரியர்களுக்கும் இடையிலான சமூக இடையூடாட்டம் என்பது குறைவானதாகவே காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்காப்பிரி இனத்தவர்களது திருமண நடைமுறைகளை நோக்கும்போது ஆரம்ப காலங்களில் ஒருமண முறை மட்டுமே காணப்பட்டதாக கூறப்பட்டது. தற்காலத்தில் இவ்வினத்தவர்கள் சிங்களவர்களுடன் கலப்புத் திருமணங்களை  செய்து வருகின்றனர். மேலும் சிரம்பியடியில் வாழும் காப்பிரி இனத்தவர்களிடையே மறுமணம் என்பது மறுக்கப்பட்ட ஓர் விடயமாக காணப்படுகின்றமை வியக்கத்தக்க ஓர் உண்மையாக காணப்படுகின்றது. இம்முறை ஏனைய பிரதேசங்களில் வாழும் காப்பிரி
இனத்தவர்களிடம் இருந்து இப்பிரதேச மக்களது கலாசாரத்தின் தனித்துவத்தினை எடுத்தியம்புவதாக காணப்படுகின்றது.

மேலும் இவ்வாறான கலப்புத் திருமணங்களை செய்து கொள்வதனால் அவர்களது இளம் தலைமுறையினரின் முகத் தோற்றத்தில் வித்தியாசங்களை அவதானிக்க கூடியதாக உள்ளது. எனவே ஆபிரிக்க இனத்தவர் என்பதற்கான அடையாளங்கள் இளம் தலைமுறையினரில் படிப்படியாக குறைந்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. மற்றும் வேறு இனத்தவர்களை திருமணம் செய்த போதும் அதனால் எவ்வித பிரச்சினைகளோ பூசல்களோ காணப்படவில்லை எனவும் இந்த வாழ்க்கை முறையில் தாம் மிகவும் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

பண்பாட்டு விடயங்களில் அதீத ஆர்வமும் அக்கறையும் கொண்ட இம்மக்களது மதமானது உரோமன் கத்தோலிக்க மதமாக காணப்படுகின்றது. மற்றும் மதம் இம்மக்களை சமூகத்தில் ஒற்றுமையாகவும் நல்ல இடைவினை புரியத் தூண்டும் ஊடகமாகவும் காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மதம் ஒரு முரண்பாட்டு காரணியாக காணப்படும் இவ்வுலகில் காப்பிரியர்களின் மதமானது சில கட்டுப்பாடுகளைக் கொண்டு காணப்பட்ட போதும் அது வாழ்வை நெறிப்படுத்துவதற்கான ஒரு மார்க்கம்
தான் என்றும் மதமே தம்மை ஒற்றுமையாகவும் சமூகத்தில் நல்ல பிரஜையாகவும் வாழ வழிசெய்கின்றது என்றும் இவ்வினத்தவர்கள் கூறுகின்றமை பாராட்டத்தக்க விடயமாகும்.

காப்பிரி இனத்தவர்களின் உணவு பழக்கவழக்கங்களை எடுத்துக்கொண்டால் இலங்கையரின் பிரதான உணவான நெல் அரிசிச்சோறு தான் இவர்களதும் பிரதான உணவாக காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி சிரம்பியடியில் வாழும் காப்பிரி மக்கள் மாட்டிறைச்சியினை உண்பதை பாவச்செயலாக கருதுகின்றமையும் ஆதலால் தாம் அதனை உண்பது இல்லை எனவும் கூறுகின்றனர். இவ்வின மக்கள் இசை மற்றும் நடனத்தை மிகவும் நேசிப்பவர்களாகவும் அவர்களின் இசையின் அடிநாதத்தில் ஆப்பிரிக்க  இசை வடிவத்தின்  தாக்கம் இருந்தாலும் தற்போது உள்ளூர் இசையின் கலப்பும் உள்ளது. இசையும் நடனமும் இவர்கள் வாழ்வில் ஒரு அங்கம் என்றே கூறவேண்டும்.

அவர்களின் சமூக ஒன்றுகூடல்களில் இசையும் நடனமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் புகழ்பெற்ற 'பைலா' என்ற இசை ஆட்டத்திலிருந்து 'கப்ரிஞ்சா' மற்றும் 'மஞ்சா' என்னும் அவர்களது ஆடல் பண்பாட்டுத் தனித்துவம் மிக்கதாகக் காணப்படுகிறது. இசை எனும் போது தமக்கான இசை கருவிகளை தாமே தயாரித்துக் கொள்கின்ற தன்மையும் இசைக்கருவிகளாக டோல், றபான், சிரட்டைகள், கண்ணாடி போத்தல்கள், மற்றும் கரண்டிகள் போன்றவற்றினை பயன்படுத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

எனினும் இம்மக்களும் அவர்தம் பண்பாட்டு கலாசார நடைமுறைகளும்; எந்தளவிற்கு இலங்கை சமூகத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து அறியப்பட வேண்டியது அவசியமாகும்.இலங்கையில் பல்லினக் கலாசாரத்தின் வருகை மிக வேகமாக இருந்துள்ளது என்பதற்கு எமது நாட்டில் காணப்பட்டு வருகின்ற இருபது வகை சமூகங்களை உதாரணமாகக் கூறலாம். இலங்கையின் வரலாற்றுப் பக்கங்களிலும் பல்லினக்கலாசாரம் வேரூன்றிக் காணப்படுகின்றது. இவ்வாறானதொரு வரலாற்றுப் பின்னணி எமது நாட்டில் தற்போதும் நிலவி வருகின்றது என்பதற்கு இங்கு வசிக்கின்ற முக்கியமான சமூகங்கள் ஆதாரமாக விளங்குகின்றன.



இக்காப்பிரிச் சமூகமானது பல ஆண்டுகளுக்கு முன் இலங்கை நாட்டுக்கு வந்தபோதிலும் அவர்கள் தம்முடைய கலாசார பண்பாடுகளைத் தாண்டி இலங்கையில் காணப்பட்ட பிரதான சமூகங்களுக்குள் ஊடுருவி தமது வாழ்வை மாற்றிக் கொண்டதால் இவர்களை வேறுபடுத்திப் பார்க்கின்ற நிலை தென்படவில்லை. அதாவது எமது நாட்டில் காணப்படுகின்ற தமிழ், சிங்களம், முஸ்லிம், பறங்கி என்ற சமூகத்திடையே தமது கலாசாரங்களை ஊடுருவ விடாவிட்டாலும் கலப்புத் திருமணம், சமூக ஒருமைப்பாடு என்ற ரீதியில் காப்பிரி சமூகம் இலங்கை மக்களின் சமூக சரித்திரங்களைப் பின்பற்றி இணைந்து வாழ்கின்றார்கள் என்பது எமது நாட்டு கலாசார வரலாறுகளில் காணப்படுகின்றஉண்மையாகும்.

மேலும் ஆரம்ப காலங்களில் எவராலும் அறியப்படாத இனமாக காணப்பட்ட இவ்வினக்குழுவிற்கென தனியான ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளமையும் இலங்கை வாழ் சிறுபான்மை சமூகங்களில் ஒன்றாக இவ்வினமும் இணைத்துக் கொள்ளப்பட்டமையும் காத்திரமான சமூகக் கட்டமைப்பினை கட்டியெழுப்புவதற்கான அடித்தளமாக அமைகின்றதென்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.காப்பிரி என்ற ஓர் சமூகக்குழு இருப்பதே எம்மில் பலருக்கு தெரியாது. இன்று பல்கலைக்கழகம், பாடசாலை மாணவர்கள் அவர்களை கற்கச் சென்று பார்த்து வருகின்ற நிலைப்பாடு அவர்கள் மீதான தேடலையும், வெளிப்பார்வையையும் எமக்கு எடுத்துரைக்கின்றது.

காப்பிரியர் என்று வர்ணிக்கப்படும் இவர்கள் குறிப்பாக இளம் தலைமுறையினர் மிகுந்த பிரயத்தனத்துடன் தமது வெளித்தோற்றங்களை மாற்றிக் கொள்கின்ற தன்மை இன்று பரவலாக காணக்கூடியதாக உள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளால் அச்சமூகத்தின் தனித்துவமான அடையாளங்கள் மாற்றப்பட்டு வருவது அவர்களின் எதிர்கால இருப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்துகின்றது.

ஈழத்துச் சூழலில் விபத்தாக கிடைத்த பெரும் சொத்தே காப்பிரியரகள். இவர்களின் பண்பாடும் கலாசார அடையாளங்களும் எமது நாட்டின் பண்பாடுகளுக்கு வளம் சேர்ப்பதாக இருக்கின்றன. இந்நிலையில் அவர்கள் மீதான எமது கவனம் மிக முக்கியமானது. அவர்களின் பண்பாடுகளை பற்றியும் அடையாளங்களைப் பற்றியும் கலந்தரையாடுவதும் அதற்கான அவசியப்பாட்டையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதும்  அவசியம்.

அத்துடன் சொந்த  கலாசார பண்பாட்டு விடயங்களுக்கு  மதிப்பளிக்கின்ற அதேநேரம், பிறபண்பாட்டு விழுமியங்கள், கலாசாரம் மீதான அக்கறையும், நம்பிக்கையும்; மதிப்பும் பற்றிய எண்ணத்தை சிரத்தையில் கொண்டு நடப்பது பல்லின, மொழி, சமய,  கலாசார மக்களையுடைய ஒரு நல்ல இலங்கைத் திருநாட்டை கட்டியெழுப்ப துணைபுரியும் என்பது திண்ணம்.

இராமலிங்கம் தயாணி
சமூகவியல் விடுகை வருடம்
கிழக்குப்பல்கலைக்கழகம்
சமூக விஞ்ஞானங்கள் துறை