காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளின் தச ஆண்டு சமாதி தின சிறப்பு மகா யாகம்

(த.அழகானந்தம்)
மட்டக்களப்பு மண்டூர் பால முனையில் அமைந்துள்ள ஸ்ரீ பேரின்ப ஞான பீடத்தின் கிளையான ஸ்ரீ ஆத்ம ஞான பீடத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது 24/09/2017 அன்று மகா சமாதியடைந்த பஹவான் காயத்திரி சித்தர் டாக்டர் ஆர்.கே. முருகேசு சுவாமிகளின் தச (பத்தாண்டு) ஆண்டு சமாதி தின உலக சேமத்துக்கான சிறப்பு மகா யாகம் முருகேசு சுவாமிகளின் சீடரான ஆன்மீகக் குரு மகா யோகி திரு எஸ். புண்ணியரெத்தினம் சுவாமிகளின் தலைமையில்  நடை பெறவுள்ளது.

சாதாரண குடும்பத்தில் பள்ளேகலையில் பிறந்து வளர்ந்து சிறு வயதிலேயே ஈஸ்வரப்பட்டர் மகரிஷியின் ஆன்மீக அருளாசி பெற்று பின்னர் கண்டி திரித்துவக் கல்லூரியில் கல்வி பயின்று குடும்ப சுமை ஏழ்மை காரணமாக கணக்காளராக வேலையில் சேர்ந்து கஸ்ரப்பட்டு ஆன்மீக ஈடுபாடு இந்தியாவரை அழைத்துச் சென்றது.

அங்கு மூல குரு அகஸ்தியரின் நேரடி ஆசியும் அருட்கடாட்சமும் பெற்று ஈற்றில் அவரின் உத்தரவின் பேரில் கண்ணையாயோகி மகரிஷியினை குருவாகப் பெற்று அவரிடம் ஆன்மீக சாதனைகள் பயின்று தனது அவதார நோக்கம் புரிந்து குரு தேவரின் ஆசியுடன் தாய்த் திருநாட்டில் நுவரெலியாவில் பாதம் பதித்து இந்திரஜித் தவம் புரிந்த இடத்தில் காயத்திரி ஆலயம் அமைத்து சிவபாலயோகி மகரிஷியினை வைைைத்து லிங்கமும் பிரதிஸ்டை செய்தார்.

அதன் பின்னர் தனக்குரிய சீடர் மட்டக்களப்பில் உள்ளதை ஞானத்தால் உணர்ந்து மட்டு மண்ணில் கால் பதித்தார் காரணத்தை உருவாக்கி காரியத்தை நிறைவேற்ற காயத்திரி சித்தர் மட்டு நாவலடியில் சப்தரிஷி ஆலயம் மகா மேரு ஆலயம் அமைத்தார் அவருடைய நோக்கம் உலகத்தில் ஏற்படவிருக்கும் இயற்கை அழிவுகளை தடுத்து மக்களை நல்வழி வாழச் செய்வதே அவரின் பிரதான நோக்கம்.

தன்னையொரு அவதார புருஷர் என்பதனை எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர் வெளிக்காட்டவில்லை அதே போன்று தனது சீடரையும் அறிமுகம் செய்யவில்லை அடிக்கடி அவர் கூறுவார் சித்தன் ஞானி மகரிஷி இறைவன் அனைத்துமே உள்ளுக்குத்தான் அப்பா ரெத்தினம் போன்ற குரு உங்களுக்கு வழிகாட்ட வர வேண்டும் என்று காயத்திரி அன்னையிடம் பிரார்த்திப்பதாகவும் கூறுவார்.

சூட்சுமம் புரியாத மக்கள் இதை அறிந்து கொள்ளவுமில்லை புரிந்து கொள்ள முயற்சிக்கவுமில்லை அவரை ஒரு சாதாரண ஆலய பூசகராகவும் சாத்திரம் கூறுபவர் என்ற அளவிலேயே சிந்தித்தார்கள் ஒரு நாள் பௌர்ணமி யாகத்தில் யாகம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது  அவரது சீடர் ஆத்ம சக்தி வெளிப்பட்டு தன் குரு நாதரின் தெய்வீக திருக்கோலம் கண்டு கதறி அழுதார் உலகிற்கு உரக்கக் கூறினார் "மகா புருஷர் மகா விஷ்ணு காயத்திரி அன்னை வந்துள்ளார் அவரைப் பற்றிக் கொள்ளுங்கள்" என்று ஒற்றைக் கால் கட்டை விரலில் நின்று இரு கைகளையும் தூக்கி விஷ்வரூபத்தினை தரிசித்து கதறினார்.

அவர்தான் இன்று மகா யோகி எஸ். புண்ணிய்ரெத்தினம் சுவாமிகளாக மக்கள் பாவங்கள் தீர்க்க முருகேசு சுவாமிகள் அடிக்கடி கூறியதைப் போன்று ரெத்தினம் போன்ற குருவாக இருந்து குரு இட்ட கட்டளையினை சிரம்மேற் தாங்கி இந்த ஆன்மீகப் பணியினை எந்த விதமான எதிர்பார்ப்புகளுமின்றி உலக சேமத்துக்காக தன் குருவின் பத்தாவது சமாதி தினத்தினை ஸ்ரீ ஆத்ம ஞான பீடத்தில் சனிக்கிழமை (23.09.2017) மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகும். 

மிக சக்தி வாய்ந்த சஞ்சீவினி மூலிகைகளுடன் அபிசேகத்திரவியங்கள் நிரப்பப்பட்ட1008 சங்குகள், 108 பூரணகும்பங்கள் என்பன வைக்கப்பட்டு, பக்தர்களினால் இரவு முழுவதும் இடைவிடாது1008 தடவைகள் காயத்திரி மஹா மந்திர பாராயணம் செய்யப்பட்டு, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.00 மணி பிரம்ம முகூர்த்த வேளையில் பகவான் காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளின் திருப்பாதங்களுக்கு பூரண கும்பம் மற்றும் சங்குகளில் நிரப்பப்பட்டிருந்த அபிஷேக திரவியங்கள் கொண்டு பக்தர்களின் கரங்களினாலேயே திருப்பாத அபிஷேகம் இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து காலை 10.00 மணிக்கு இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட மிக சக்தி வாய்ந்த 108 உயிர் மூலிகைகள் கொண்டு, பீடத்தின் குரு சித்தர் மகாயோகி ஸ்ரீ சற்குரு புண்ணியரெத்தினம் சுவாமிகளினால், குருபரம்பரையினரான மூலகுரு அகஸ்திய மாமகரிஷி, அருட்திரு பண்டிட் ஸ்ரீ கண்ணையா யோகி மகரிஷி, மகா அவதார புருஷர் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகள் அவர்களுடன் சப்தரிஷிகள், பதிணெண் சித்தர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், ரிஷி முனிவர்களின் அருள் வேண்டி உலக சேமத்திற்கான மகா யாகம் நடைபெறவுள்ளது. மகாயாகத்தினைத் தொடர்ந்து ஸ்ரீ சற்குரு புண்ணியரெத்தினம் சுவாமிகளின் ஆன்மீக அருளுபதேசம், ஆசீர்வாதம் என்பன நிகழ்த்தப்பட்டு, அன்னதானமும் இடம்பெறும்.

இந்த சிறப்பு வாய்ந்த நன் நாளிலே அனைத்து பக்தர்களும் கலந்து பிரார்த்தித்தால் சகல சௌபாக்கியங்களும் பெற்று இன்புற்று வாழலாம்.