ஐபோன் X, ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் ஆப்பிள் கைப்பேசிகள் அறிமுகம்!

ஆப்பிள் ஸ்பேஸ்ஷிப் வளாகத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் ஆப்பிள் வாட்ச் 3, ஆப்பிள் டிவி 4K, ஐபோன் X, ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டன.

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2017 ஐபோன் சாதனங்கள் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்டீவ் ஜாப்ஸ் கனவு திட்டமாக இருந்த ஆப்பிள் ஸ்பேஸ் ஷிப் வளாகத்தின் முதல் விழாவில் பத்தாவது ஆண்டு விழாவை குறிக்கும் ஐபோன் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ்:

புதிய ஐபோன் 8 சீரிஸ் 4.7 மற்றும் 5.5 இன்ச் திரை கொண்டுள்ளது. இதுவரை வெளியான ஐபோன்களில் வழங்கப்படாத அளவு ரெட்டினா எச்டி டிஸ்ப்ளே மற்றும் அதிக உறுதியான ஹோம் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹோம் பட்டன் முன்பை விட வேகமாக இயங்கும் திறன் கொண்டுள்ளது.

ஆப்பிள் A11 பயோனிக் சிப் கொண்டுள்ள புதிய ஐபோன் 8 சீரிஸ் இதுவரை வெளியானதில் அதிக சக்திவாய்ந்த ஐபோன் ஆகும். இத்துடன் இவை முந்தைய ஐபோன்களை விட நீண்ட நேர பேட்டரி பேக்கப் கொண்டிருக்கிறது. இத்துடன் ஐபோன் 8 ஸ்மார்ட்போனில் 12 எம்பி பிரைமரி கெமராவும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போனில் டூயல் 12 எம்பி பிரைமரி கெமரா வழங்கப்பட்டுள்ளது

புதிய ஐபோன் 8 கெமராக்கள் குறைந்த வெளிச்சத்திலும் அதிக துல்லியமான புகைப்படங்களை வழங்கும் திறன் கொண்டுள்ளது.

மேலும் ஐபோன் 8 சீரிஸ் எந்த ஸ்மார்ட்போனும் வழங்காத அளவு துல்லியமான காணொளி பதிவு செய்யும் வசதி மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஐபோன் 8 ஸ்மார்ட்போன் கிளாஸ் பேக் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது

ஐபோன் 8 ஸ்மார்ட்போன் 64 ஜிபி விலை 699 டொலரிலும் மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் 64 ஜிபி மாடல் விலை 799 டொலரிலும் ஆரம்பிக்கிறது. ஐபோன் 8 சீரிஸ் 64 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.




ஐபோன் X:

ஐபோன் 8 சீரிஸ்களை தொடர்ந்து ஐபோன் X ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆப்பிள் கீநோட் நிகழ்ச்சியில் அதிநவீன சாதனமாக புதிய ஐபோன் X அமைந்தது. ஐபோன் X ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச், 2436x1125 பிக்சல் OLED சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய டிஸ்ப்ளே கொண்ட முதல் ஐபோன் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த டிஸ்ப்ளே எச்.டி.ஆர்.10 மற்றும் டாஸ்பி விஷன் சப்போர்ட் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோம் பட்டன் நீக்கப்பட்டுள்ள ஐபோன் X ஸ்மார்ட்போன் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அன்லாக் செய்யக் கூடிய வசதியை வழங்குகிறது. முக அங்கீகாரம் (face recognition) வழங்க டூயல்-கோர் சார்ந்த நியூரல் இன்ஜின், ஃபேஸ் ஐடி துல்லியமாக இயங்க வழி செய்யும் ட்ரூ டெப்த் கெமரா சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் A11 பயோனிக் சிப்செட் கொண்டு இயங்கும் ஐபோன் X 7000-சீரிஸ் அலுமினியம் ஃபிரேம், கிளாஸ் பேக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ள புதிய ஐபோன் 12 எம்பி பிரைமரி டூயலே கெமரா அமைப்பு செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளது.

இத்துடன் டூயல் OIS வசதியும், ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 7 மாடலை விட இரண்டு மணி நேரம் கூடுதல் பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஸ்பேஸ் கிரே மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கும் ஐபோன் X 64 ஜிபி மற்றும் 256 ஜிபி மாடல்களில் கிடைக்கிறது. ஐபோன் X 64 ஜிபி விலை 999 டொலர் எனவும் மற்றும் 256 ஜிபி 1,149 டொலர் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளில் ஐபோன் X முன்பதிவு அக்டோபர் 27 திகதி துவங்கி விற்பனை நவம்பர் 3-ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.


ஆப்பிள் வாட்ச் 3:

புதிய ஆப்பிள் வாட்ச் 3 பில்ட்-இன் செல்லுலார் கனெக்டிவிட்டி, மெசேஜஸ் மற்றும் சிரி வசதி கொண்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் வாட்ச் 3 ஆப்பிள் ஏர்பாட்ஸ் உதவியுடன் பாடல்களை இசைக்கும் திறன் கொண்டுள்ளது. அளவை பொருத்த வரை ஆப்பிள் வாட்ச் 2 போன்றே காட்சியளிக்கும் ஆப்பிள் வாட்ச் 3 முதல் முறையாக சிரி பேசும் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் W2 சிப்செட் கொண்டுள்ள ஆப்பிள் வாட்ச் ஒஎஸ் 4 ஆப்பிள் வாட்ச் வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் 19-ம் திகதி முதல் கிடைக்கும்.

பல்வேறு நிறங்களில் கிடைக்கும் ஆப்பிள் வாட்ச் 3 செப்டம்பர் 15-ம் திகதி முன்பதிவு துவங்கி வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் 22-ம் திகதி முதல் விநியோகம் செய்யப்படுகிறது. புதிய வாட்ச் 3 செல்லுலார் மாடல் விலை 399 டொலர் துவங்கும் நிலையில் செல்லுலார் வசதியில்லா மாடல் விலை 329 டொலர் முதல் துவங்குகிறது.

ஆப்பிள் டிவி 4K:

ஆப்பிள் வாட்ச் 3 சாதனத்தை தொடர்ந்து புதிய ஆப்பிள் டிவி 4K எச்.டி.ஆர். டிவியும் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஆப்பில் டிவி எச்.டி.ஆர். வசதியுடன் டால்பி தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ஆப்பிள் டிவியை விட இருமடங்கு வேகத்தில் புதிய 4K டிவி இயங்கும் என்பதோடு 4K திரைப்படங்களின் விலை எச்டி விலையிலேயே வழங்கப்படும்

ஆப்பிள் டிவி 4K விளையாட்டு போட்டிகளை நேரலையில் ஒளிபரப்பும் வசதி கொண்டிருக்கிறது. புதிய ஆப்பிள் டிவி 4K பிரத்தியேக ஸ்போர்ட்ஸ் செயலி வசதி கொண்டுள்ளதோடு, வாடிக்கையாளர்களுக்கு அதிகப்படியான கேம்களும் வழங்குகிறது. ஆப்பிள் டிவி செப்டம்பர் 15-ம் திகதி முன்பதிவு துவங்கி செப்டம்பர் 22-ம் திகதி முதல் விநியோகம் செய்யப்படுகிறது.

ஆப்பிள் டிவி 4K 32 ஜிபி மாடல் விலை 179 டொலரும், 64 ஜிபி மாடல் விலை 199 டொலர் முதல் துவங்குகிறது.