பறிபோன கிராம சபையை மீளத் தந்து விடுங்கள்!

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள பழந் தமிழ்ப் பிரதேசம் மல்வத்தை ஆகும்.

அங்கு 1968 ஆம் ஆண்டு காலம் முதல் 1987 ஆம் ஆண்டு காலம் வரை கிராமசபை சிறப்பாக இயங்கி வந்தது. பின்பு அது சம்மாந்துறை பிரதேச சபையுடன் இணைக்கப்பட்டது.

அந்த மல்வத்தை கிராம சபையை மீண்டும் மல்வத்தை பிரதேசசபையாக அமைக்கக் தற்போது கோரிக்கை விடப்பட்டுள்ளது.

மல்வத்தை பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்புகளின் ஒன்றியம் இதற்கான மனுவை புதிய பிரதேச சபை ஸ்தாபிக்கும் சபையின் தலைவரும் அம்பாறை அரச அதிபருமான துசித பி. வணிகசிங்கவிடம் கையளித்தது.

அமைப்பின் தலைவர் பி.நடராஜா, செயலாளர் வி.ஜெயச்சந்திரன், உபதலைவர் காந்தன் உள்ளிட்டோர் அதனைக் கையளித்தனர்.

இது தொடர்பில் காந்தன் கருத்துத் தெரிவித்ததாவது:

"1968 முதல் 1987 வரை தனியாக இயங்கி வந்த பழம் பெரும் மல்வத்தை கிராமசபை, 1987 முதல் அரசின் சட்டப்படி சம்மாந்துறை பிரதேசசபைக்குள் உள்ளீர்க்கப்பட்டது.

அதாவது தற்சமயம் மல்வத்தைப் பிரதேசம் சம்மாந்துறை பிரதேசசபைக்குள் இருக்கிறது. எனினும் தற்போது சம்மாந்துறை பிரதேசசபையை நகரசபையாக்கும் முயற்சி நடைபெற்று வருவதனால் புதிய பிரதேசசபையொன்று அமையும். அது மல்வத்தையை மையாமாகக் கொண்ட மல்வத்தை பிரதேசசபை அமைய வேண்டுமென்பதே எமது வேண்டுகோளாகும்.

சம்மாந்துறையை நகரசபையாக்குவதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையுமில்லை. அதற்கு எமது பரிபூரண ஆதரவை வழங்குகின்றோம்.

அதேவேளை உத்தேச மல்வத்தை பிரதேசசபையானது எமது அறிக்கையிலுள்ளவாறு மூவின மக்களும் வரக் கூடியவாறு அமைய வேண்டும். நாம் இல்லாத ஒன்றைக் கேட்கவில்லை. ஏற்கனவே இருந்த பழம்பெரும் சபையையே கேட்கின்றோம்.

உண்மையில் அந்தக் காலத்தில் அதாவது 1968 முதல் 1987வரை மல்வத்தை கிராமசபை இயங்கி வந்தது. அந்த பழம்பெரும் சபையை மீண்டும் இந்தச்சந்தர்ப்பத்தில் உருவாக்கித் தர வேண்டும் என்பதே எமது அவா".

இவ்வாறு கூறுகிறார் காந்தன்.

இதுபோன்ற கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன், காரைதீவு அமைப்பாளர் கி.ஜெயசிறில் உள்ளிட்ட பலரும் மாத்திரமன்றி பொதுநலஅமைப்புகளும் கையளித்துள்ளன.

இதற்கான தர்க்கரீதியான நியாயங்களை இங்கு ஆராய வேண்டியது அவசியம்.

மல்வத்தை பிரதேசமானது அம்பாறை மாவட்டத்திலுள்ள மிகப் ப​ைழமையான பிரதேசம் என்பதுடன் 1956 ஆம் ஆண்டு கல்லோயா ஆற்றுப்பள்ளத்தாக்கு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் போதுஅதன் விநியோக பிரதேசமாக இயங்கி வந்தது. பல சிறப்புக்களைக் கொண்டிருந்த அப்பிரதேசத்தில் மூவின மக்களும் வாழ்ந்தனர்.

அதாவது அங்கு அடிப்படை அரசகட்டமைப்புகளாக பின்வருவன காணப்பட்டன.

மல்வத்தை கிராம சபை (1968), மல்வத்தை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (1971), இலங்கை வங்கி (1977, எரிபொருள் நிரப்பு நிலையம் (1958), மல்வத்தை விவசாயப் பண்ணை (1972), மல்வத்தை கமநல மத்திய நிலையம் (19657), மல்வத்தை தபால் நிலையம் (1924), பிரிவு வளத்தாப்பிட்டி நீர்த்தேக்கம், கூட்டுறவுக்கடை (1960), நீர்ப்பாசனத் திணைக்களப் பிராந்திய அலுவலகம், அரச கால்நடைப் பண்ணை, பதிவாளர் பிரிவு சம்மாந்துறைப்பற்று, மல்லிகைத்தீவுப் பற்று, மஜீட்புர விவாக பதிவாளர்

இவையெல்லாம் இருந்து வந்தன.

இவ்வாறு பல்வேறுபட்ட சிறப்புக்களுடன் விளங்கிய இப்பிரதேசத்தின் முதுகெலும்பாக மல்வத்தை கிராமசபை இயங்கிவந்தது. அதன் ஊடாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வந்ததுடன், அன்று மல்வத்தை பிரதேசம் எட்டு வட்டாரங்களைக் கொண்டு இயங்கி வந்தது.

அன்றிருந்த வட்டாரங்கள் 1. மல்வத்தை (பழைய மல்வத்தை) 2. கணபதிபுரம் 3. மஜீட்புரம் 4. புதுநகரம் 5. மல்லிகைத்தீவு 6. ஆறாம் கொளனி 7. சொறிக்கல்முனை 8. வளத்தாப்பிட்டி ஆகியவையாகும்.

பின்னர் 1987 ஆம் ஆண்டு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் பிரதேச செயலகப் பிரிவுகளாக தரமுயர்த்தப்பட்டதுடன், மல்வத்தை பிரதேசமும் அப்பிரதேசசெயலாளர் பிரிவுக்குள் உள்ளடக்கப்பட்டதுடன். ஒரு பிரதேச செயலாளர் பிரிவுக்கு ஒரு பிரதேச சபை என்ற கொள்கை வகுக்கப்பட்டது. அந்த அடிப்படையில் இக்கிராம சபை கலைக்கப்பட்டு சம்மாந்துறை பிரதேசசபையுடன் மேலதிகமாக உள்வாங்கப்பட்டது.

இவ்வாறு உள்வாங்கப்பட்ட நிலையில் 1980_1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இப்பகுதியில் இடம்பெற்ற ஆயுதக்குழுக்கிடையிலான மோதல்கள் காரணமாக இப்பிரதேச புத்திஜீவிகளும் கல்விச் சமூகத்தினரும் இப்பிரதேசத்தை விட்டு வெளியேறினர்.

இந்நிலையிலேயே வரலாற்றில் மறக்க முடியாத 1990 ஆம் ஆண்டு யுத்தம் வடகிழக்கு பிரதேசங்களில் ஏற்பட்டது. இதன் காரணமாக இம்மக்கள் பிரதேசங்களை விட்டு சுமார் நான்கு வருடங்கள் அகதி வாழ்க்கையை வாழ்ந்தனர்.

பின்னர் 1994ஆம் ஆண்டு இப்பிரதேசத்தினுள் மீள்குடியேற்றப்பட்டனர். அக்காலகட்டத்தில் தமது வாழ்க்கையை தக்கவைத்துக் கொள்ள, வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டிய சூழ்நிலையில் தமது உரிமைகள் பற்றி கேட்கவோ குரல் எழுப்பவோ முடியாத நிலையில் யுத்த பாதிப்புக்களுடன் இம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அந்நிலையில், 2004 சுனாமி, 2009 யுத்த சம்பவங்கள் காரணமாக மக்கள் முற்றாக நிலைகுலைந்தனர். இதேவேளை 2009 ஆம் ஆண்டு புதிய பிரதேசசபைகள் உருவாக்குதல் சம்பந்தமாக கோரப்பட்ட முன்மொழிவுகளுக்கு அமைவாக மல்வத்தை பிரதேசத்திற்கென தனியான பிரதேசசெயலகப் பிரிவொன்றை மக்கள் கோரினர். அந்நிலையில் அக்கோரிக்கை கொள்கையளவில் ஏற்கப்பட்டதுடன் பின்னர் தீயசக்திகளால் மழுங்கடிக்கப்பட்டது. இருப்பினும் இவ்வாணைக்குழுவில் மல்வத்தை பிரதேசசபையின் தேவைப்பாடு சம்பந்தமாக மக்கள் பதிவு செய்தனர்.

அந்நிலையில் கடந்த காலத்தில் ஏற்பட்டஆட்சி மாற்றங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் தெளிவற்ற சிந்தனை காரணமாக இக்கோரிக்கைகள் உரிய வகையில் முன்னெடுக்கப்படவில்லை.

இந்நிலையில் சம்மாந்துறை பிரதேசசபை சம்மாந்துறை நகரசபையாக தரமுயர்த்த முன்மொழியப்பட்டதாக அறிய வருகிறது.

"இவ்வாறு சம்மாந்துறை பிரதேச சபை நகரசபையாக தரமுயர்த்தப்படுகின்ற சந்தர்ப்பத்தில் எமக்கென தனியான, ஆனால் மூவினங்களும் வாழக் கூடியதான பிரதேசசபை தரப்பட வேண்டும். இன்றேல் மல்வத்தை பிரதேசமும் நாமும் பல்வேறு புறக்கணிப்பபுகளுக்கும் அநீதிகளுக்கு உட்படுத்தப்படுவோம்.

அதாவது அபிவிருத்தியில் பின்னடைவு, வளப்பங்கீடுகளின் போது புறக்கணிப்பு, இனங்களுக்கிடையே சமநிலை பேணப்படாமை, வளங்கள் சூறையாடப்படுதல், உள்ளக வேலைத் திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தாமை, (உதாரணம் திண்மக்கழிவு அகற்றல் முறையாக செயற்படுத்தப்படாமை, டெங்குஒழிப்பு, தெருவிளக்கு மற்றும் இவை போன்ற பல விடயங்கள்.), பிரதேசத்திற்கு ஒவ்வாத வேலைத் திட்டங்களை அனுமதித்தலும் அங்கீகரித்தலும், பிரதேசங்கள் இருண்ட நிலையில் இருந்து வருதலும் இதேநிலையினைத் தொடர்ந்து கடைப்பிடித்தலும், சுமார் 11 கி.மீக்கு அப்பால் சம்மாந்துறை பிரதேசம் அமைந்துள்ளதால் பிரயாண அசௌகரியங்களும், காலவிரயமும், தொழில் வழங்கல், பதவிஉயர்வு கடமைகளின் போது பாரபட்சத்துடன் செயற்படுதல்.

எமது மல்வத்தை கிராமசபையை சம்மாந்துறை பிரதேசசபையுடன் இணைத்ததன் காரணமாக எமது அலுவலகத்தின் ஆளனிமற்றும் வளங்களை இழக்கச் செய்து அதன் செயற்பாடுகளை முடக்கச் செய்து தற்போது அலுவலகம் மூடப்படும் நிலையில் உள்ளது" என்று இம்மக்களின் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

"இது போன்ற பல்வேறுபட்ட கண்களுக்கு புலப்படக் கூடியஅநீதிகளும், கண்களுக்குப் புலராத இன்னும் எத்தனையோ அநீதிகளும் எமக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இக்குறைபாடுகளையும் அநீதிகளையும் எடுத்துக் கூற யாரும் இல்லாத நிலை கவலைக்கிடமான விடயமாக உள்ளது.

இந்நிலையிலேயே நாம் தொடர்ந்து போராடும் மல்வத்தை பிரதேச சபை கோரிக்கையை வலுவாக முன்வைக்கின்றோம். அதாவது நாம் தமிழர்களுக்கென தனியானதோர் பிரதேசசபையினை கோராமல் தழிழ்,முஸ்லிம்,சிங்களம் ஆகிய மூவின மக்களும் உள்ளடங்கக் கூடியதாக ஓர் பிரதேசசபையை கோருகின்றோம்.

உத்தேச மல்வத்தை பிரதேச சபைக்குள் உள்ளடங்கும் கிராமசேவகர் பிரிவுகள் வருமாறு:

1. மல்வத்தை கிராமசேவகர் பிரிவு

(தமிழ் மக்கள்)

2. புதுநகரம் கிராமசேவகர் பிரிவு

(தமிழ் மக்கள்)

3. மஜீட்புரம் கிராமசேவகர் பிரிவு

(முஸ்லிம் மக்கள்)

4. கணபதிபுரம் கிராமசேவகர்

பிரிவு (தமிழ் மக்கள்)

5. மல்லிகைத்தீவு கிராமசேவகர்

பிரிவு (தமிழ் மக்கள்)

6. வளத்தாப்பிட்டிகிராமசேவகர்

பிரிவு (தமிழ் மக்கள்)

7. புதிய வளத்தாப்பிட்டி கிராம

சேவகர் பிரிவு (தமிழ் மக்கள்)

8. இஸ்மையில் புரம் கிராம

சேவகர் பிரிவு (முஸ்லிம் மக்கள்)

9. வீரமுனை_ 01 கிராம சேவகர்

பிரிவு (தமிழ்,முஸ்லிம் மக்கள்)

10. வீரமுனை_ 02கிராம் சேவகர்

பிரிவு (தமிழ் மக்கள்)

11. வீரமுனை-_ 03 கிராமசேவகர்

பிரிவு (தமிழ் மக்கள்)

12. வீரமுனை_ 04 கிராமசேவகர்

பிரிவு (தமிழ்,முஸ்லிம் மக்கள்)

13. வீரச்சோலை_01 கிராம

சேவகர் பிரிவு (தமிழ் மக்கள்)

14. குமுதுகமகிராமசேவகர் பிரிவு

(சிங்கள மக்கள்)

15. சடயந்தலாவ கிராம சேவகர்

பிரிவு (சிங்கள மக்கள்)

16. ஹிஜ்றாபுரம் கிராமசேவகர்

பிரிவு (முஸ்லிம், தமிழ் மக்கள்)

இவ்வாறான கிராமசேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய நிலத்தொடர்புகளுடன் கூடிய மூவின மக்களையும் உள்ளடக்கிய பிரதேச சபையை நாம் கோருகின்றோம்.

இது புதியதோர் பிரதேசசபை என யாரும் கருத வேண்டிய அவசியம் இல்லை. நாம் ஏற்கனவே இருந்த மல்வத்தை கிராம சபையையே எமது தேவைகளை இலகுபடுத்த, எமது உரிமைகளை நியாயமாக தீர்த்துக் கொள்ளவே பிரதேச சபையாக நாம் கோருகின்றோம்.

எப்பொழுதும் ஓர் வளர்ந்த சமூகம் வளர்ந்து வரும் சமூகத்தை அடக்கி ஆள்வது உலகநியதியாகும். இந்த நியதிக்கு நாமும் விதிவிலக்கல்ல. நாம் முகம் கொடுக்கும் பாதிப்புக்கள் ஒன்றல்ல இரண்டல்ல.

தற்போது நாடு பூராகவும் புதிய எல்லை நிர்ணயங்களும், புதிய பிரதேச சபைகளும் உருவாக்கும் நடவடிக்கைகள் இடம் பெற்றுவருகின்றன. ஆகவே எமது பிரதேசத்தில் நடைமுறையில் இருந்த மல்வத்தை கிராம சபையை புதியமல்வத்தை பிரதேச சபையாக தரமுயர்த்தித் தருமாறு மல்வத்தை பிரதேச மக்களாகிய நாம் கோருகின்றோம்" என்கின்றனர் மக்கள் பிரதிநிதிகள்.

உத்தேச பிரதேச சபையினால் இப்பிரதேசத்திற்கு ஏற்படும் நன்மைகள் வருமாறு.

1. எமது சகோதர சிங்கள மக்கள் வாழும் குமுதுகம மற்றும் சடயந்தலாவ மக்கள் பல கஷ்டத்தின் மத்தியில் 20 கி.மீ தூரம் சென்று உகன பிரதேச சபையில்தான் தமது சேவைகளை பெற்றுக் கொள்கின்றனர். எனவே இவர்களையும் 02 கி.மீ தூரத்திலுள்ள உத்தேசிக்கப்பட்ட மல்வத்தை பிரதேசசபையுடன் இணைத்து அவர்களுக்கும் இலகுவான சேவையை வழங்க முடியும்.

2. வீதிகளைஅபிவிருத்திசெய்தல்.

3. கிராமிய பாலங்களை அமைத்தல்.

4. திண்மக்கழிவுகளை முறையாக அகற்றச் செய்தல்.

5. வீதியோரங்களில் பசுமைப் புரட்சியைஏற்படுத்தல்.

6. பொதுச்சந்தைகளை அமைத்தல்.

7. பஸ்தரிப்புநிலையம், தாகசாந்தி(தண்ணீர்பந்தல்) நிலையங்களை அமைத்தல்.இது போன்ற இன்னும் பல்வேறுபட்ட அபிவிருத்தி வேலைகளை செய்ய முடியும்". இவ்வாறு கோருகின்றனர் மல்வத்தை மக்கள்.