பாடசாலை சமூகத் தொடர்புகளும் கல்வி விருத்தியும்


சமூகத்தில் நிலவுகின்ற பல்வேறு நிறுவனங்களுள் ஒன்றாக பாடசாலை விளங்குகின்றது. இந்த வகையில் இப்பாடசாலைக்கும் சமூகத்திற்குமான தொடர்பானது நெருக்கமானதாகக் காணப்பட வேண்டும். இவ்வாறு காணப்படுகின்ற போதே பாடசாலை வளர்ச்சியினுடாக கல்வி விருத்தி ஏற்பட வழியேற்படுகின்றது. பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தினுடைய பிரதான குறிக்கோளாக காணப்படுவது சமூகத்துடனான நெருங்கிய தொடர்பாகும். இன்றைய சூழலில் இத் தொடர்பானது பெரும்பாலும் இல்லை என்ற கருத்து பலராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றரமையினை காண முடிகின்றது இதற்குக் காரணம் பாடசாலையானது சமூகத்தினால் கவனிக்கப்படாமையாகும்.

இவ் குறைபாட்டை நிவர்த்திக்கும் வகையில் எமது நாட்டில் பாடசாலையில் பெற்றோர்களையும் நலன் விரும்பிகளையும் இணைக்கும் வகையில் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்ட்டு வருகின்றன. குறிப்பான இன்று பாடசாலைகள் தோறும் அபிவிருத்திக் குழுக்கள் அமைக்கப்பட்டு அடிக்கடி இக் குழுக்கள் ஒன்று கூடி தீர்மானங்களை எடுக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றது. இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் போன்றோர் உள்ளடங்கும் வகையில் அமையப்பட்டதாக காணப்பட வேண்டும் என்று கூறப்படுகின்றது. இதைத் தவிர பழைய மாணவர் சங்கங்கள் போன்றன செயற்பட்டு வருவதைக் காணலாம்.
எமது நாட்டைப் பொறுத்தவரையில் பாடசாலை மற்றும் சமூகத் தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் காலத்திற்கு காலம் பல்வேறு செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டமையினை காணமுடிகின்றது. 1960ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட  வேலை அனுபவம் எனும் திட்டம், 1972ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட தொழில் முன்னிலை பாடம், 1984 இல் பாடசாலை மட்டத்தில் அபிவிருத்தி திட்டங்களை உருவாக்கல், 1979 பெற்றோர் சாசனம், 1976 ம் ஆண்டு 100 பிள்ளைகளையும் ஒரு அல்லது இரு ஆசிரியர்களைக் கொண்ட சிறிய பாடசாலை அபிவிருத்தி திட்டம் போன்ற பல செயற்பாடுகளைக் கூறலாம்.

ஒரு பாடசாலை சிறப்பாக இயங்க வேண்டுமானால் அப்பாடசாலை அமைந்துள்ள சமூகத்தினுடைய பங்கானது மிகவும் இன்றியமையாதது. அது நிதி, பாதுகாப்பு, மனித வளம் போன்ற பல்வேறு செயற்பாடுகளில் வேண்டப்படலாம். வெறுமனே பாடசாலை நிர்வாகத்தினால் மட்டும் பாடசாலைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது. மாறாக இதற்கு சமூகத்தினுடைய தேவை பாரிய அளவில் வேண்டப்படுகின்றது. இதற்கு பாடசாலை சமூகத் தொடர்புகள் சிறப்பாக அமைதல் முக்கியமானதாகும். பாடசாலையில் துரித அபிவிருத்தி ஏற்பட வேண்டுமானால் அங்கு சமூகத்தினுடைய பங்கு அவசியம் என்றால் மிகையில்லை என்றே கூறலாம்.

பாடசாலையுடன் சமூகமானது தொடர்பினை ஏற்படுத்துகின்ற போது பாடசாலை நிர்வாகத்தில் சமூத்தினர் பங்க கொள்ள வழி ஏற்படகின்றது. இதனால் பாடசாலை நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் யாதேனுமொரு விடயம் தொடர்பாக ஏற்படுத்தப்படும் தீர்மானங்கள் போன்றவற்றில் பங்கு கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இதனால் சமூகம் சார்பாக வேண்டப்படுகின்ற நிர்வாக செயற்பாடுகள் மற்றும் கற்றல் விடயங்களை ஏற்படுத்த துணை புரிகின்றது. அத்தோடு பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கல்வி தெதாடர்பாக அறிய முடிவதுடன் காலத்திற்கு காலம் எற்படுத்தப்படுகின்ற கல்விக் கொள்கைள் பற்றிய அறிவையும் பெற்றுக் கொள்கின்றனர்.

இதன் வாயிலாக பாடசாலை பல்வேறுபட்ட நன்மைகளைப் பெற்றுக் கொள்வதுடன் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் வருத்தியடையவும் வழி வகுக்கின்றது. குறிப்பாக பெற்றோர்கள் பாடசாலை செயற்பாடுகள் தொடர்பாக அறிவதனால் தமது பிள்ளைகளினுடைய கல்வி செயற்படுகள் பாடசாலை செயற்பாடுகளுடன் தொடரப்படுகின்றதா என அறிந்து செயற்பட வழி செய்கின்றது பிள்ளைகள் எதிரான செயற்பாடுகளைக் கொண்டுள்ளனரா என அறியவும் உதவுகின்றது. அத்துடன் ஒவ்வொரு பிள்ளைகளினுடைய நடத்தை முறைகளை பெற்றோரிடத்தில் பாடசாலை நிர்வாகம் தெரியப்படுத்தி பிள்ளையினுடைய செயற்பாடுகளை ஒழுங்கான முறையில் சீர்படுத்தவும் உதவுகின்றது.

இதைத் தவிர ஒரு பிள்ளை சிறப்பான கற்றல் செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டுமென்றால் சூழல் மிக முக்கியமானது. இச் சூழல் தன்மையானது பாடசாலைச் சூழல் மற்றும் வீட்டுச் சூழல் என இருவகையாகக் காணப்படும். எனவே இங்கு வீட்டுச் சூழல் சிறப்பாக காணப்படும் போது பிள்ளையானது கற்றலில் தெளிவையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தும் வீட்டுச் சூழல் சிறப்பாக அமைய பெற்றோர்கள் பாடசாலையுடன் கொண்டுள்ள தொடர்பு காரணமாக கொண்டுள்ள அறிவினைப் பயன்படுத்தி பிள்ளைக்கு சிறப்பானவொரு கற்றல் சூழலை ஏற்படுத்த இத் தொடர்பு காரணமாக அமைகின்றது. பிள்ளையிடம் கேள்விகளைக் கேட்டல், பிள்ளைக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டுப்பாடங்கள் சில நேரங்களில் மறந்திருக்கலாம் பெற்றோர் ஆசிரியருடன் கொண்டுள்ள தொடர்பின் வாயிலாக அதனை அறிந்து பிள்ளையின் கற்றலுக்கு உதவலாம்.

இன்று பெரும்பாலான பெற்றோருக்கு பாடசாலையில் நடைபெறுகின்ற செயற்பாடுகள், பாடசாலையில் கற்பிக்கின்ற ஆசிரியர்கள், பிள்ளைகள் பாடசாலையில் செயற்படுகின்ற தன்மைகள் என்பன தெரிவதில்லை. இதனால் பாடசாலை பெற்றோர்களுக்கிடையிலான தொடர்பு விரிவடைந்து செல்கின்றது. இது பிள்ளைகளினுடை கற்றல் செயற்பாட்டில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தவும் வழிவகுக்கின்றது. பிள்ளை பெற்றுக்கொண்ட கற்றல் மேம்பாடு(பெறுபேறு) பற்றி கேட்டால் சில பெற்றோருக்கு தெரிவதில்லை இதற்கு பாடசாலை சமூகத் தொடர்பு பெரிதும் வேண்டப்படுகின்றது.

ஒரு ஆசிரியர் கற்பித்தலில் ஈடுபடும் போது தாம் கற்பிக்கின்ற மாணவர்கள் தொடர்பான குடும்ப சூழலை அறிந்திருத்தல் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை மேலும் வலுப்படுத்தும். இதற்கு ஆசிரியர் மாணவர்களின் பெற்றோர்கள் பற்றியும் சமூகச் சூழல் பற்றியும் அறிந்திருத்தல் வேண்டும். அவ்வாறு அறிந்திருக்கும் பட்சத்தில் தமது கற்பித்தல் முறைகளை பிள்ளைகளுக்கு ஏற்றால் போல் மாற்றியமைத்து மாணவர்களின் கற்றல் தன்மையினைக் கூட்டிக் கொள்ளலாம்.

அதே போல் பாடசாலை சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பினை வழங்குகின்ற போது சமூகத்தினால் பல்வேறுபட்ட வழிப்புணர்வு கருத்தரங்குகள், கற்றல் தொடர்பான கருத்தரங்குகள் சமூகம் ஏற்பாடு செய்யவும் அதனூடாக மாணவர்கள் அறிவுத்திறனைக் கூட்டிக் கொள்ளவும் முடியும். அதே போல் மாணவர்களினுடைய வீடுகளில் ஏற்படும் மரணச் சடங்கில் கலந்து கொள்ளல், பாடசாலையை சுற்றியுள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லுதல் மற்றும் அங்கு சிரமதானம் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுதல் போன்றவற்றின் மூலமாக  பாடசாலை சமூகத் தொடர்பு நன்கு விருத்தியடைய உதவும்.


இவ்வாறு பல்வேறு பயன்களை விளைவிக்கின்ற இவ் தொடர்பு முறையானது ஏற்படுவதில் சில சிக்கல் முறைமை தோன்றுவதும் உண்டு. அதற்கு பல்வேறுபட்ட காரணங்கள் காரணமாக அமையலாம் குறிப்பாக சிலரினுடைய புரிந்துணர்வு தவறாக அமையும் போது தொடர்பின் தன்மை பாதிப்படைகின்றது. பாடசாலை தொடர்பாக சமூகம் கொள்ளும் புரிந்துணர்வுகள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினுடைய தன்மை, பாடசாலை மீது சமூகத்தினோர் கொண்டுள்ள எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றமடைதல், பாடசாலை நிர்வாகம் சமூக தொடர்புகளின் முக்கியத்துவம் பற்றி கருத்தில் கொள்ளாமை போன்ற விடயங்களை கூறலாம்.

தரமான கல்வியே தரமான சமூதாயத்திற்கு அடித்தளம் என்பதை இரு பாலாரும் உணர்ந்து செயற்படும் போது இத் தொடர்புகள் சிறப்பாக அமையும். சமூகம் சிறப்புற உருவாக பாடசாலையிலிருந்து உருவாகும் மாணவர் சமூகம் மிகவும் முக்கியமானது. அதே போல் பாடசாலை ஒன்று சிறப்பாக செயற்பட சமூத்தின் தேவை அன்றியமையாதது என்றால் அது மிகையில்லை எனவே பாடசாலை சமூகத் தொடர்பு சிறப்பான கல்வி விருத்திக்கு மிகவும் முக்கியமானதாகும்.

செல்வராசா லோகிதன்
2ம் வருட சிறப்பு கற்கைநெறி
கிழக்குப் பல்கலைக்கழகம்.