மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் மெய்வல்லுனர் திறனாய்வு இல்ல விளையாட்டுப் போட்டி

(க.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு  கல்வி  வலயத்திற்குட்பட்ட   மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 2018 ஆண்டுக்கான  மெய்வல்லுனர்  திறனாய்வு இல்ல விளையாட்டுப் போட்டி    கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் கல்லூரியின் முதல்வரும்,மட்டக்களப்பு பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவருமான ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில்  மட்டக்களப்பு வெபர்  மைதானத்தில் மிகவும் சிறப்பான முறையில்  நடைபெற்றது.


கோலாகலமான முறையில் நடைபெற்ற கல்லூரியின் விளையாட்டுப்போட்டிக்கு முதன்மை விருந்தினராக கிழக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டவூல்யூ.ஜீ.டீ திசாநாயக்க, மட்டக்களப்பு கல்லடி  38 வது தேசிய மாணவ படை  அணியின்  லெப்டினல் கேணல் ஜே.ஏ.யூ. ஜே.பி . ஜெயசூரிய அவர்களும்,கௌரவ அதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,கல்லூரியின் முன்னாள் அதிபருமான பிறின்ஸ் காசிநாதர், மட்டக்களப்பு  வலயக் கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் அவர்களும்,விஷேட அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் உடற்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் வீ.லவக்குமார்,
மண்முனை வடக்கு  கோட்டக்கல்வி பணிப்பாளர் ரீ.அருள்பிரகாசம்,  கல்லூரி அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் டீ.ஏ.பிரகாஸ் , கல்லூரி பழைய மாணவ சங்க தலைவர் எஸ் .சசிகரன்,உப-தலைவரும்,வைத்தியருமான என்.மௌலீசன்,செயலாளர் என்.திருவருட்செல்வம்,மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலையின் அதிபர் திருமதி. தரணியா சுபாகரன், புனித மிக்கல் கல்லூரியின் முதல்வர் பயஸ் ஆனந்தராசா,பிரதி அதிபர்களான இ.பாஸ்கர், கே.சசிகாந், உப-அதிபர்களான எஸ்.சதீஸ்வரன், எஸ்.லோகராசா, ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

இதன்போது அதிதிகள்  கல்லூரி  மாணவர்களால்  அதிதிகளுக்கு  கலர்பூமாலை  அணிவித்தும், தேசிய மாணவர் படையணியின் அணிவகுப்பு மரியாதையுடன், கண்டியன் நடன நிகழ்வுகளுடனும் மகத்தான வரவேற்புடன் அழைத்து வரவேற்கப்பட்டார்கள். புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபையின் முகாமைக்குரு ஜே.டவூல்யூ,யோகராசா அவர்களின் இறை ஆசியுரையுடன் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி ஆரம்பமானது.

அதனை   தொடர்ந்து  தேசியக்கொடி,வலயக்கொடி, கல்லூரி கொடி,சாரணர்கொடி மற்றும் இல்லக்கொடிகள்  ஏற்றப்பட்டு  தேசிய கீதம்  இசைக்கப்பட்டதுடன்   மாணவர்களின்  இல்ல  அணிவகுப்பு மரியாதை அதிதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து  இல்லத்தின் மாணவதலைவர்களால்  ஒலிம்பிக்  சுடர்  ஏற்றப்பட்டு, மாணவ  தலைவர்களின்  சத்திய பிரமாண  நிகழ்வுகளுடன் விளையாட்டுக்கள் ஆரம்பமானது.

இவ் விளையாட்டு  நிகழ்வுகளில்  மாணவர்களின் சுவட்டு நிகழ்ச்சிகள், ஓட்டப்போட்டி,மாணவர்களின்   உடற்பயிற்சி கண்காட்சிகள், ஆசிரியர்களுக்கான போட்டிகள்  நடைபெற்றது .இந்த வருடத்திற்கான இல்லவிளையாட்டு போட்டிகளை அர்ப்பணிப்புடனும், மிகவும் சிறப்பான முறையிலும் பார்ப்போரையும், பார்வையாளரையும் கைதட்டவைத்து கவர்ந்திழுக்கச்செய்தது. இதற்காக உழைத்த உடற்கல்வி ஆசிரியர்களான கே.ரவீந்திரன், ஏ.ஜேசுசகாயம், கே.ஸ்ரீமுருகன் ஆகியோர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த மூன்று ஆசிரிர்களுக்கும் இறைவனின் ஆசியுடன் அதிதிகள் உட்பட ஏனைய சொந்தங்களால் "மகிழ்ச்சி பரிசு",
"நன்றி பரிசு' கொட்டி குவிக்கப்பட்டது. இது புலமையாளர்களை இன்னும் புலமையாக்க வைத்துள்ளது.

கல்லூரி இல்ல  விளையாட்டு  போட்டியின்  இறுதி  நிகழ்வாக   வெற்றி பெற்ற  இல்லமாணவர்களுக்கு கலந்துகொண்ட அதிதிகளால் பரிசில்களும், சான்றிதழ்களும், வழங்கப்பட்டு பிரதியதிபர் இராசதுரை-பாஸ்கரன் அவர்களின் நன்றியுரையுடன்  விளையாட்டு  நிகழ்ச்சிகள்  சிறப்பாக  நிறைவு  பெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள் , கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , கல்லூரி பழைய மாணவர்கள் என பலர்  கலந்துகொண்டார்கள்.