பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகைதரு முனையத்தில் (Arrival Terminal) வெளிநாட்டு நாணய மாற்றலுக்கான கருமபீடங்களை (Currency Exchange Counters) முன்னெடுக்க 5 நிறுவனங்களுக்கு 3 ஆண்டு காலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Commercial Bank, Bank of Ceylon, Thomas Cook Lanka, Sampath Bank மற்றும் People’s Bank ஆகியன இதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
எமது நாட்டுக்கு வருகை தருகின்ற விமானப் பயணிகளுக்கு நாணயமாற்றுத் தேவைகளுக்கான வசதிகளை ஏற்பாடு செய்வதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் நாணயமாற்றுக் கருமபீடம் இயங்கி வருகின்றது.
விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் முயற்சியின் ஒரு அங்கமாக, வருகைதரு முனையத்தை மீளமைப்பு நடவடிக்கையின் போது, அங்கு இயங்கிய நாணயமாற்று கருமபீடம் வேறு இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் நாணயமாற்றுக் கருமபீடத்தை இயக்கும் போது மாதாந்த வாடகை பற்றிய உடன்பாட்டுக்கு எட்டுவதற்கு சிரமமாக இருப்பதால், அப்போதிருந்த ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதற்கு வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (ஸ்ரீலங்கா) (தனியார்) கம்பனி நடவடிக்கை எடுத்துள்ளது.
பின்னர், வருகைதரு முனையத்தில் புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் 3 ஆண்டுகள் ஒப்பந்த காலத்திற்கு வெளிநாட்டு நாணயமாற்று கருமபீடத்தை நிறுவுவதற்கு இலங்கை மத்திய வங்கியால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிறுவனங்களிடமிருந்து மட்டுப்படுத்தப்பட்ட போட்டி விலைமுறி முறைமையின் கீழ் விலைமனுக்களைக் கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதற்கமைய, கிடைக்கப் பெற்றுள்ள 5 விலைமனுக்கள் தொடர்பாக உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவால் வழங்கப்பட்டுள்ள விதப்புரையின் பிரகாரம் மேற்படி 5 வங்கிகளுக்கு, 3 வருடங்களுக்கு வெளிநாட்டு நாணயமாற்று கருமபீடத்தை இயக்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.




.jpg)








.jpg)