சுயேச்சைக்குழு வேட்பாளர் எண்மருக்கு சுழற்சிமுறையில் பதவி !

(காரைதீவு  நிருபர் சகா)

காரைதீவு சுயேச்சைக்குழு தமது வேட்பாளர்களுள் விரும்பிய எட்டுப்பேருக்கு தமக்குக்கிடைத்த இரண்டு ஆசனங்களையும் சுழற்சிமுறையில் பகிர்ந்தளிக்க முன்வந்துள்ளது. பிரதிவருடமும் இரண்டு உறுப்பினர்கள்வீதம் எண்மருக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என சுயேச்சைக்குழுத்தலைவர்சந்திரசேகரம் நந்தகுமார் தெரிவித்தார்.

நாம் தேர்தலுக்கு முன்பு மகாசபை கூட்டியகூட்டத்தில் எமது காரைதீவு தமிழ்மக்களின் இருப்பு மானம் காப்பாற்றும்வகையில் செயற்படுவதென்றும் எமக்குக்கிடைக்கின்ற ஆசனங்களை எம்மிடையே சுழற்சிமுறையில் அனைவரும் பகிர்ந்து சபையை அலங்கரிப்பது என்று தீர்மானமெடுத்திருந்தோம்.அதனை மேடைகளிலும் பகிரங்கமாக தெரிவித்திருந்தோம்.

அதற்கமைய  நேற்றுமுன்தினம் காரைதீவின் பொதுமக்களின் மகாசபை வழிநடாத்தல்குழுவின் முன்னிலையில் இக்கூட்டம் நடைபெற்றது.சுயேச்சை அணித்தலைவர் ச.நந்தகுமார் தலைமையிலான  வேட்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில்  வேட்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு தமது விருப்புக்களை தெரிவித்தன் அடிப்படையில் எண்மருக்கு சுழற்சிமுறையில் இப்பதவியை வழங்குவதென்று ஏகமனதாக சந்தோசமான தீர்மானமாகியது.என்றார்.

மேலும் தலைவர் ச.நந்தகுமார் சி.நந்தேஸ்வரன் மா.புஸ்பநாதன் உள்ளிட்ட அறுவர்  தாமாகவே சபைக்குச்செல்வதில்லையென்றும் எக்காரணம்கொண்டும் சபை பொறுப்பை எடுப்பதில்லை என்றும் பெருந்தன்மையுடன் கூறியதற்கமைவாக ஏனைய 8பேருக்கும் 4வருடத்தினுள் சுழற்சிமுறையில் அந்த 2 உறுப்பினர் பதவியை சுழற்சிமுறையில் வழங்குவதென்று தீர்மானமாகியமை பலரதும் வரவேறபையும் பெற்றுள்ளது.

பலரது பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது. பதவிகளுக்கு அடிபிடி இடம்பெறுகின்ற இந்தக்காலகட்டத்தில் இவ்வாறான விட்டுக்கொடுப்புகள் மற்றயவருக்கு பதவியை சுழற்சிமுறையில் வழங்குவதென்பது பதவிகளுக்கு ஆசைப்படாத ஆனால் சேவைசெய்யத்துடிக்கின்ற விருப்பினை எடுத்துக்காட்டி நிற்கின்றதென  மக்கள் பெருமையுடன் கூறுகின்றனர்.
.
 அடுத்தடுத்த வருடத்தில் யார் யார் சபைக்குச்செல்வது என்றும் சந்தோசமாக ஏகமனதாக  முடிவானது.

அதன்படி முதல்வருடத்தில் ஆ.பூபாலரெத்தினம் மற்றும் மு.மதிவதனி  இரண்டாம் வருடத்தில் இ.மோகன் மற்றும் சி.தேவப்பிரியன் மூன்றாம் வருடத்தில் கே.குமாரசிறி மற்றும் எஸ்.சசிக்குமார் நான்காம் வருடத்தில் என்.ஜெயகாந்தன் மற்றும் வை.சத்தியமாறன் ஆகியோருக்கு இரண்டு பதிகளும் வழங்கப்பட ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பேசத்தயார் என்றோம். பதில் இன்னுமில்லை !

கூட்டாட்சிக்காக  த.தே.கூட்டமைப்புடன் பேசத்தயார் என்றீர்கள்.பதில்வந்ததா? என்று கேட்டபோது  தலைவர் நந்தகுமார் இவ்வாறு தெரிவித்தார்.

காரைதீவு பிரதேசபைக்கான தேர்தலில் த.அ.கட்சி 4ஆசனங்களையும் சுயேச்சைக்குழு-1 அணி 2ஆசனங்களையும் ஸ்ரீல.மு.கா. 2ஆசனங்களையும் ஸ்ரீல.சு.கட்சி 2ஆசனங்களையும் அ.இ.ம.காங்கிரஸ் 1ஆசனத்தையும் சுயேச்சை 2 அணி 1ஆசனத்தையும் பெற்றுக்கொண்டன.இங்கு ஆட்சியமைப்பதானால் 7ஆசனங்கள் தேவை. அங்கு அறுதிப்பெரும்பான்மை ஆசனங்களை யாரும் பெறவில்லை. எனவே கூட்டாட்சிக்கான பேச்சுவார்த்தை நேரமிது.

நாம் எமது மண்ணின் கெளரவத்தையும் தனித்துவத்தையும் காப்பாற்றுவதற்காக த.தே.கூட்டமைப்புடன் பேசத்தயார் என்று 5  தினங்களுக்கு முன் பகிரங்கமாக அறிவித்திருந்தோம்.ஊடகங்களிலும் வெளிவந்திருந்ததை உலகறியும்.  எனினும் இதுவரை உத்தியோகபூர்வமாக என்னுடன் அந்த கட்சியிலிருந்து யாரும் தொடர்புகொள்ளவில்லை.

மக்களுக்கு பகிரங்கமாக வெளிப்படைத்தன்மையுடன் சொல்லவெண்டியதேவை கட்டாயம் எமக்குள்ளது. நாளை எம்மீது பழிவந்துவிடக்கூடாது. எதுவானாலும் மக்களின் விருப்பிற்கமையவே மகாசபையின் வழிநடாத்தலின்படிதான் எதனையும் வெளிப்படையாகச் செய்வோம். எனவே பொறுத்திருந்து எமது மக்களின் நன்மைக்காக தீர்மானமெடுப்போம். என்றார்.