மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்திற்கு புதிய நிருவாக சபை, தலைவராக றஞ்சிதமூர்த்தி




மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் புதிய நிருவாகசபைத் தெரிவு நேற்று (19.05.2018) மு.ப 9.30 மணிக்கு நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. செயலாளராக ஓய்வுநிலை ஆசிரியர் வே.தவராஜா தெரிவு செய்யப்பட்டார். தலைவரைத் தெரிவு செய்யும் வேளையில் பலர் எழுந்தபோதும் அனைவரும் ஒருவரையே தெரிவு செய்ய எத்தனித்தார்கள் என்பது பின்னர் தெரிய வந்தது. அந்தவகையில் கடந்த 8 ஆண்டுகளாக தமிழ்ச் சங்கத்தின் பொருளாளராக செயற்பட்டுவந்த தேசகீர்த்தி, சைவப்புரவலர் வி.றஞ்சிதமூர்த்தி அவர்கள் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பொருளாளராக தேசபந்து மு.செல்வராஜா தெரிவு செய்யப்பட்டார். மேலும் 4 உப தலைவர்களும், 2 உப செயலாளர்களும், 50 நிருவாகசபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர். உப தலைவர்கள் தெரிவில் சிறிது போட்டி நிலை காணப்பட்ட போதும் ஏனைய அனைத்து தெரிவுகளும் ஏகமனதாக இடம்பெற்றன.

புதிய தலைவர் றஞ்சிதமூர்த்தி பேசுகையில்,
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் எனும் போது உயிர்கள் தோன்றமுன் மொழி எவ்வாறு தோன்றியது என்ற கேள்வியும் எழவே செய்கின்றது. இதில்  ஓம் எனும் ஒலியினால் ஓங்காராமாய் தோன்றிய தமிழ் மொழிக்கு முழு முதற்கடவுள் சிவபெருமானும் ஆஸ்த்தானப் புலவர் நக்கீரர் போன்றவர்களும் சங்கம் அமைத்து வழிநடத்திய சங்கங்கள் தொன்று தொட்டு மன்னராட்சி முதல் மக்களாட்சி வரையிலும் தொடர்ந்து வருகின்றது. உலகளாவிய ரீதியில் தமிழ் சங்கங்கள் செயற்பட்டு வருகின்ற வரிசையில் மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்திற்கும் நீண்டகால வரலாறும், பாரம்பரியமும் உள்ளது.  1967ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத் தமிழ்ச் சங்கம் எமது நாட்டில் கடந்த காலங்களில் நிலவிய அசாதாரண நிலைமை காரணமாக செயலிழந்திருந்து. 2010 ஆம் ஆண்டு எமது ஆசான் தமிழ் ஒளி, வித்துவான் க.செபரெத்தினம் அவர்கள் கனடாவில் இருந்து வந்து மீண்டும் இதனை செயற்படுத்தி எம்மிடம் ஒப்படைத்துச் சென்றார். அதனைத் தொடர்ந்து முன்னாள் கலாசார பணிப்பாளர் செ.எதிர்மனசிங்கம், பேராசிரியர் மா.செல்வராஜா, சட்டத்தரணி மு.கணேசராஜா ஆகிய மூன்று பெருந்தலைவர்களினால் வழி நடத்தப்பட்டு வந்து, தற்போது எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தம்மிடம் இருந்த வளங்களைக் கொண்டு சிறந்த முறையில் செயற்பட்டு வந்தார்கள். நாம் தற்போது எம்மிடம் உள்ள வளங்களையும், எமது மக்களின் உதவி, ஒத்தாசைகளையும் இணைத்துக் கொண்டு எம்மால் இயன்றவரையில் இத் தமிழ் சங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம்.

மட்டக்களப்பு தேசத்தின் பண்டைய எல்லைகளை உள்ளடக்கிய பிரதேசங்களில் இருந்தும், உலகளாவியரீதியில் வாழும் எமது பிரதேசம் சார்ந்தோரையும் உள்ளடக்கிய 271 அங்கத்தவர்களைக் கொண்டு இத் தமிழ்ச் சங்கம் செயற்பட்டு வருகின்றது. இத்தகைய சூழலில் தமிழ்ச் சங்கம் ஏன் வேண்டும் என்ற கேள்வி எம்மத்தியில் எழாமல் இல்லை. அன்று தொட்டு இன்று வரையில் தமிழ்ச் சங்கங்கள் இயங்குகின்றன என்றால் அதற்கு தேவை உள்ளது என்பதையே இது சுட்டி நிற்கின்றது. அந்த வகையில் தமிழில் இருந்தும், பின் தோன்றியதுமான பல மொழிகள் காலம் காலமாக தமிழை கீழோங்கச் செய்து வருகின்றன. இந்தியாவில் தமிழின் பின் தோன்றிய ஹிந்தி மொழி ஆட்சி மொழியாக உள்ளது. தமிழ் நாட்டில்கூட ஹிந்தி படித்தால் மட்டுமே தொழில் என்ற நிலை இன்று உருவாகியுள்ளது. இது போன்று சில நாடுகளில் தமிழில் இருந்து தோன்றிய மொழிகள் ஆட்சி மொழியாக மாறி தமிழை விழுங்கி ஏப்பமிடுவதை பார்க்கமுடிகின்றது. அத்தோடுகூட ஏனைய மொழிகளின் கவர்ச்சியில் நம்தமிழர்கள் உள்வாங்கப்பட்டு நாகரிகம் என்ற போர்வையில் நமது மொழி சிதைக்கப்பட்டும் வருகின்றது. மேலும்; தமிழர்களின் கலை கலாசாரங்கள், விழுமியங்கள், தொன்று தொட்டு பயின்று வரும் வேளாண்மை போன்ற தொழில்கள், பாரம்பரியங்கள், எங்களுக்கான வளங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டும், மறுக்கப்பட்டும் வருகின்றன. இவ்வாறாக பெரும் விருட்சமான தமிழின் கிளைகளெல்லாம் ஒவ்வொன்றாக வெட்டப்பட்டு வருகின்றது. இவற்றினையெல்லாம் பாதுகாக்கின்ற வகையில் உலகளாவிய ரீதியில் தமிழ்ச் சங்கங்கள் போன்றவை போராடியும் வருகின்றன. எனவேதான் மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் விரிவாக்கமும் வீச்சு அதிகரிப்பும் அவசியமாகின்றது. இதில் அனைவரதும் ஒற்றுமையும், ஒத்துழைப்பும் அவசியம் எனக் குறிப்பிட்டார்.