மட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதாரப் பிரிவினரால் டெங்கு வேட்டை


(சிவம்)

மட்டக்களப்பு நகரில் டெங்கு தொற்று அதிகரித்துள்ளதோடு உயிரிழப்புகளும் அண்மையில் இடம்பெற்றுள்ள நிலையில் டெங்கு பரவும் இடங்களை இனங்கண்டு இன்று புதன்கிழமை (16) காலை முதல் மாலை வரை மட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதாரப் பிரிவு மற்றும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து புகை விசிறும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியக் கலாநிதி கிரிசுதனின் ஆலோசனைக்கிணங்க மனித உயிர் கொல்லியான டெங்கு நுளம்பு இனங்காணப்பட்ட பகுதிகளான தாமரைக்கேணி, கோட்டைமுனை, கல்லடி, புன்னச்சோலை, மாமாங்கம் ஆகிய பிரதேசங்களில் டெங்கு வேட்டையில் ஈடுபட்டனர்.

மாநகர சபையின் சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், சிரேஷ;ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜெயரஞ்சன் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான எஸ்.சகாதேவன் மற்றும் எஸ்.கிருசாந்தராஜா, தெளி கருவி இயக்குனர்களான பி.நிர்மலராஜ், எம்.ராசலிங்கம், வி.ரகுநாதன் ஆகியோர் குறித்த நடவடிக்கைகளில் பங்குபற்றினர்.

மாநகர சுகாதாரப் பிரிவினர் எவ்வகையான தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் பொது மக்களிடம் டெங்கு பரவும் சூழலை உருவாக்காமல் இருப்பதற்கான விழிப்புணர்வுடன் செயற்படா விட்டால் இதனை முற்றாகக் கட்டப் படுத்த முடியாமல் போகும் அபாயமுள்ளது.

கொழும்பிலிருந்து டெங்கு கட்டப்படுத்தும் சுகாதாரப் பிரிவினர் எதிர்வரும் தினங்களில் உங்கள் குடியிருப்பு பிரதேசங்களுக்கு வருகை தந்து பரிசோதனை நடாத்தவுள்ளார்கள் எனவே தங்களின் வீடுகளையும் சுற்று வளாகத்தினையும் தூய்மையாகவும் டெங்கு உற்பத்தியாகும் இடமாக கருதும் மூலங்களை அழிக்குமாறும் மாநகர சுகாதாரப் பிரிவினர் வேண்டுகின்றனர்.