எச்சரித்தும் கேட்காமல் காட்டினுள் சென்றதால் நடந்த சம்பவம் !


திருகோணமலையில் தேன் எடுக்கச் சென்ற நபர் ஒருவரை கரடி ஒன்று கடுமையாகத் தாக்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

மொறவெவ காட்டுப்பகுதிக்குள் தேன் எடுப்பதற்காக சென்ற நபரே கரடியால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளானவர் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

திருமலையின் ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், மொறவெவ காட்டுப்பகுதிக்கு சக நண்பர்களுடன் தேன் எடுக்கச் சென்றுள்ளார். இவர்களுடன் முதியவர் ஒருவரும் சென்றுள்ளார்.

இந்த நிலையில் அவருடன் சென்ற மற்றொருவரை குளவி தாக்கியதையடுத்து உடனடியாக வீடு திரும்பும்படி முதியவர் எச்சரித்துள்ளார்.

ஆனாலும் அவரது பேச்சைத் தட்டிக்கழித்த குறித்த நபர் தான் தேன் எடுத்தே திரும்புவேன் என்று சூழுரைத்துச் சென்றுள்ளார்.

இதன்போது மறைந்திருந்த கரடியொன்று அவர்மீது பாய்ந்து கடுமையாகத் தாக்கத்தொடங்கியது. இதனையடுத்து ஏனையோரால் காப்பாற்றப்பட்ட அவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார்.

கண் பகுதியை கரடி பிறாண்டியுள்ளதால் கடும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தற்பொழுது கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.