சம்பந்தன் ஐயா ஐ.தே.க , ரணிலை பாதுகாப்பதில் காட்டும் ஆர்வத்தை தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதிலும் காட்டியிருக்கலாம்

திரு.சம்பந்தன் ஐயா அவர்கள் கடந்த மூன்றரை வருட காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களையும் பாதுகாப்பதில் காட்டிய ஆர்வத்தையும், தற்போது காட்டிவரும் ஆர்வத்தையும், இருக்கின்ற ஓருவருடம் பத்து மாத காலத்தில் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஆளும் கட்சியை பாதுகாத்து எதுவும் செய்யாமல் இருப்பதை விட ஜனாதிபதியின் அழைப்பின்பேரில் கிழக்கு அபிவிருத்தி அமைச்சைப் பெற்றுக் கொண்டமைக்காக என்னை உறுப்பினர் பதவியிலிருந்து விலக்குவதில் காட்டும் ஆர்வத்தை கடந்த காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதிலும் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் காட்டியிருந்தால் ஓரளவு மக்களின் தேவைகள் நிறைவு செய்யப்பட்டிருக்கும்.



ஆளும் கட்சியில் அமைச்சுப் பொறுப்பை எடுத்தமைக்கு பணம் வழங்கப்பட்டது என்றால், மூன்று வரவு செலவுத்திட்டத்திற்கும், பிரதமரைப் பாதுகாப்பதற்கும் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஆதரவு வழங்கியமைக்கு எவ்வளவு பணம் பெறப்பட்டதோ என்ற சந்தேகம் எழுகின்றது. ஆளும் கட்சியில் இணைந்து அமைச்சுப்பொறுப்பை எடுத்து தற்போது வாக்களிக்காமலும் இருப்பது துரோகம் என்றால், எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஆளும் கட்சியைப் பாதுகாத்து வாக்களித்தமை தியாகமா? மகா துரோகமா? என்பதை மக்கள் அறிவார்கள்.

“பிச்சைக்காரனின் புண் போல்” தமிழ் மக்களின் பிரச்சினையை வைத்துக்கொண்டு அரசியல் நடத்துவது மனச்சாட்சிக்கு துரோகமானது. என்பதை மூன்றரை வருடகாலத்திற்குள் உணர்த்திய கடவுளுக்கும் நன்றி.

அத்துடன் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தால் தங்களுக்கு அரசியல் செய்ய முடியாது என நினைத்து எனது பதவியை நீக்க முற்படும் திரு. சம்பந்தன் ஐயா உட்பட்ட அனைவருக்கும் எனது நன்றிகள். துரோகப்பட்டம் வழங்கும் ஓவ்வொருவரும் தங்களை சுய பரிசோதனை செய்யவேண்டும். மட்டக்களப்பில் முடிசூடா மன்னனாக இருந்த இராசதுறை MP அவர்கள் இருபது வருடத்திற்கு பின்புதான் ஞான உதயம் பெற்று ஆளும் கட்சியில் இணைந்து செய்த சேவைகள்  என்ன என்பதை அங்குள்ள கட்டிடங்கள் பறைசாற்றும். சிலருக்கு வீட்டுச் சின்னத்தில் மறைந்தே வாழ்க்கை நடத்த விருப்பம் அதை விட்டு வெளியே வருவதற்கும் ஒரு தைரியம் வேண்டும்.

அவ்வாறு வந்தால் சிலரின் நிலைமை கவலைக்கிடமாகும். எனக்கு அவ்வாறு அல்ல. அரசியிலில் இருந்தால் மக்களுக்கு எதாவது செய்யவேண்டும் இல்லாவிட்டால் அதைவிட்டு ஒதுங்கவேண்டும்.

இப்பொழுது சிலர் மிகப்பெரும் உத்தமர்களாக காட்டிக்கொள்வதற்காக கையாளுகின்ற மிகப்பெரிய உத்தி, எங்களை அவர் அழைத்தார், இவர் அழைத்தார். பணம் தருவதாகக் கூறினார். என்று பீத்திக்கொள்வது அது உண்மை என்றால் அவர் யார்? அவருடைய பெயர் என்ன? அவருடைய தொலைபேசி இலக்கம் என்ன? எப்போது பணம் தருவதாக் கூறினார்? என்பவற்றை மக்கள் முன் தெளிவுபடுத்தவேண்டும். ஆனால் நான் பின் கதவால் செல்பவன் அல்ல. எம்மைப் பற்றி விமர்சிக்கும் போது அவர்கள் யார் என்பதை முழுவிபரத்துடன் வெளிப்படையாக வெளிப்படுத்துவேன்.