ஒரு பொலிஸ் அதிகாரியின் கை துண்டிக்கப்பட்டுள்ளது : மட்டக்களப்பு சம்பவத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி


மட்டக்களப்பில் துப்பாக்கிச்சூட்டில் இரு பொலிஸார் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கி பிரயோகம் செய்தவர்கள் ஒரு பொலிஸ் அதிகாரியின் கையை துண்டித்துள்ளனர். எமது மூன்றறை வருட ஆட்சியில் இவ்வாறாதொரு சம்பவம் இடம்பெறவில்லை என முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

இதேபோன்றே எமது ஆட்சியில் 27 இடங்களில் மட்டுமே மாவீரர் தினங்கள் கொண்டாடப்பட்டன. ஆனால், கடந்த 27ஆம் திகதி 38 இடங்களில் மாவீரர் தினம் கொண்டாடப்பட்டுள்ளது. இதேவேளை, மகஜர் கையளிக்கச் சென்ற பிக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவமும் தற்போதைய ஆட்சியில் இடம்பெற்றுள்ளது.

அரசியல் செய்யும் தேரர்கள் தற்போது இதுதொடர்பில் மௌனம் காத்து வருகின்றனர். அத்துடன், சிறிசேன , மஹிந்த அரசு இராணுவத்தினரையும் சிறையில் அடைக்க ஆரம்பித்துள்ளது

அத்துடன் எமது ஆட்சியில் வடக்கில் சிறிய சம்பவங்கள் இடம்பெற்றாலும் அதனை பெரிது படுத்திய தேசப்பற்றாளர்கள் தற்போது மௌனம் காக்கின்றனர். ஆவா குழுவை பாரியதொரு பிரச்சினையாக்கிய இவர்கள் தற்போது அதுகுறித்து வாய் திறப்பதில்லை என்றார்.

இதேவேளை மட்டக்களப்பு சம்பவம் தொடர்பில் நளின் பண்டார கருத்து தெரிவிக்கையில், மட்டகளப்பு வவுணதீவு பிரதேசத்தில் இரு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் கருணா அம்மான் இருக்கின்றார் என்ற சந்தேகம் இருக்கின்றது. மகிந்த ராஜபக்ஷவின் தூண்டுதலிலேயே இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம். இதுதொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்றார்.


முக்கிய செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல்  தெரிந்துகொள்ள 
  +94771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள் 
 உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்