போரதீவுப்பற்றில் தைப்பொங்கல் விழா முன்னாயத்த கலந்துரையாடல்





பா.மோகனதாஸ்

மட்டக்களப்பு மாவட்டச் செயலக தைப்பொங்கல் விழா போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பலாச்சோலை கருணைமலைப் பிள்ளையார் ஆலயத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளதால் அதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் செயலக கேட்போர்கூடத்தில் ( 07) இடம்பெற்றது.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் இ.ராகுலநாயகியின் ஏற்பட்டிலும் மேலதிக மாவட்டச் செயலாளர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்தின் தலைமையிலுமான இக்கலந்துரையாடலில், உதவி மாவட்டச் செயலாளர் வ.நவேஸ்வரன், மாவட்ட கணக்காளர் க.ஜெகதீஸ்வரன்,
மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆ.சுதாகரன், மாவட்ட இந்து, கலாசார உத்தியோகத்தர், போரதீவுப்பற்று உதவி பிரதேச செயலாளர் சி.புவனேந்திரன் ஆகியோரின் இணைப்பாக்கத்திலும் இடம்பெற்றது.

போரதீவுப்பற்று செயலகத்தை மையமாக கொண்டு நிகழ்த்தப்படும் இவ்விழாவில் மட்டு மாவட்டத்திலுள்ள ஏனைய செயலகங்களும் மாவட்டச் செயலகமும் மற்றும்அரச திணைக்கள நிறுவனங்களும் இதன்போது பங்குகொள்ளவுள்ளது.

காக்காச்சிவட்டை மாரியம்மனாலயத்திலிருந்து கருணைமலை பிள்ளையார் வரைக்குமான மாட்டு வண்டியுடனான மேளதாள வாத்தியங்களுடனான கலை கலாசார பண்பாட்டு பவனி, வயல் அறுவடை, பாரம்பரிய மாதிரி வீடு, நெல் குற்றுதல், பதினான்கு செயலக பிரிவுகளுடன் மாவட்ட செயலக பொங்கல், காவியம் பாடுதல், தைப்பொங்கல் பூசை, பாரம்பரிய கலை ஆற்றுகை விளையாட்டு நிகழ்வுகள், கவியரங்கு ஆகியன இதன்போது இடம்பெறவுள்ளது.

செயலகப் பிரிவுக்குட்பட்ட கோட்டக் கல்வியதிகாரி, பாடசாலைகளின் அதிபர்கள், சுகாதார வைத்திய அதிகாரி, ஆலய அறங்காவலர்கள், பிரதேச சபை, கழகங்கள், அமைப்புகள், சங்கங்கள் ,சபைகள் ,கலைஞர்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு திறன்பட செய்வதற்கான கடமைகளை இதன்போது பொறுப்பேற்றுக்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.