இன்றைய கிழக்கு ! உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்விளைவுகள்


 • பேராபத்தில் இருந்து காப்பாற்றிய சாய்ந்தமருது பள்ளி  சமூகம்
 • இயல்பு நிலையை இழந்த கிழக்கும் மற்றும் இலங்கையும் 
 • நல்லாட்சியில் இறுதியாய் இருந்த நன்மையையும்  இழந்த மக்கள் 
 • மீண்டும் சுற்றிவளைப்பு வீதி சோதனைகள்  
 • தின தொழிலாளிகளின் வாழ்க்கையையே போராட்டமாக   மாற்றிய…
 • சுற்றுலாதுறையை இழந்த  கிழக்கு  
 • பீதியுடன் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் பெற்றோர் 
 • ஊடகம் , சமூகவலைத்தளங்கள் மற்றும் சமூகத்தின் பாரிய பொறுப்பு   
 • காலத்தின் கட்டாயம்  சமூகங்களுக்குள் முரண்பாடாக உள்ள விடயங்களை களைதல்

பல இன மக்கள் வாழும் ஒரு நாட்டின் வெற்றியானது அந்த நாடு எப்போது தமது நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களையும் ஒருநாட்டு மக்களாகவும் சகோதரத்துவத்துடனும் நடத்துகின்றதோ அப்போதுதான் அந்த நாடு வெற்றியின் பாதையை நோக்கி செல்லும் என்பதில் ஐயமே இல்லை. மேலும் இத்தன்மையை பல அபிவிருத்தியடைந்த மேற்கைத்தைய நாடுகளிலும் காணக்கூடியதாகவுள்ளது ஆனால் இலங்கை இவற்றுள் எங்கு நிற்கின்றது என்று பார்ப்பது ஒரு பக்கம் இருக்க. 

மறுபக்கம் இலங்கையில் முஸ்லீம் அடிப்படைவாதிகள் என்று தம்மை கூறிக்கொண்டு இப் பாரிய பயங்கரவாத தாக்குதலை நடத்திய வேளையில் பல சர்வதேச ஊடகங்களின் ஒருமித்த கருத்தோ ‘ இத் தாக்குதல்தாரிகளின் நீண்ட நோக்கோ ஒட்டு மொத்த முஸ்லீம் சமூகத்தையும் மற்றய சமூகங்களிடம் இருந்து பிரிப்பதேயாகும்’ என இருந்தது . சர்வதேச ஊடகங்கள் கூறியது போன்று ஒரு சிறிய குழு  இப்  பயங்கரவாத தாக்குதலை நடாத்த இந் நாட்டில் வாழும் சகல முஸ்லிம் மக்களையும் பயங்கரவாதிகளாக காட்ட பெரும்பாலான ஊடகங்கள் முற்படுகின்றன என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹகீம் மற்றும் பல அரசியல் தலைவர்களும் கூறுவதை அவதானிக்ககூடியதாகவும் உள்ளது 


பேராபத்தில் இருந்து நாட்டையே காப்பாற்றிய சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் மக்கள்சப்ரான் காஸிமின் தற்கொலை குழுவிற்கு தனது வீட்டை வாடகைக்கு அமர்த்திய வீட்டின் உரிமையாளர் மற்றும் சாய்ந்தமருது பள்ளிவாசல் சமூகம் எடுத்த  முயற்சியானது வரவேற்கதக்கது. வீட்டின் உரிமையாளரிடம் காத்தான்குடியை சேர்ந்த தொலைத்தொடர்பு பொறியலாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திய ஒருவர் 5000/= மாதாந்த வாடகையாக 10 மாதங்களுக்கு 50,000/= முற்பணத்தை கொடுத்து உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுக்கு இரு தினங்களுக்கு முன்னர் 5 பேர்கள் வரை தங்குவதற்கு என வீட்டை வாடகைக்கு பெற்றுள்ளார் . ஆனால் வீட்டு உரிமையாளருக்கோ தனது குடியிருப்பாளர்களில் முழு திருப்தி அளிக்கவில்லை. குறிப்பாக சம்பவ தினமான வெள்ளியன்று இன்னொரு தொகையினர் வீட்டில் தங்கியுள்ளதை அவதானித்த அவர் வெள்ளித்தொழுகையின் போது வீட்டு குடியிருப்பாளர்களிடம் பள்ளிவாசலில்  வைத்து கதைக்க முற்பட்டுள்ளார்  அவ் முயற்சி பயனளிக்கவில்லை. அதை தொடர்ந்து அவர் பள்ளிசமூகத்திடம் முறையிட்டுள்ளார் அதன் தொடர்ச்சியே அவர்கள் அப்பகுதி வீதி போக்குவரத்து போலீசாரிடம் முறையிட்டுள்ளனர். அந்த போலீஸ் அதிகாரியோ குறிப்பிட்ட குடியிருப்பிற்கு சென்று குடியிருப்பாளர்களோடு கதைக்க முற்பட்ட வேளை அவர்கள் அந்த போலீஸ் அதிகாரி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் அதன் தொடர்சியாக பாதுகாப்பு படையால் குறிப்பிட்ட வீடு சுற்றிவளைக்கப்பட்டது.

சாய்ந்தமருதில் 26 ஏப்ரல் 2019 அன்று மாலை இடம் பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் அன்று இடம்பெறாமல் இருந்திருந்தால், தற்கொலை தாக்குதல்காரிகளான முக்கியமாக சப்ரான் காஸிமின் குடும்பத்தினர் இத் தாக்குதலை எங்கு வேன்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நிகழ்த்தி இருக்கலாம். அத்தோடு உயிர்த்த ஞாயிறு அளவில் பாரிய மனித அவலத்தை ஏற்படுத்திய இன்னுமொரு தாக்குதலாகவும் இருந்திருக்கலாம். மேலும் இத் தாக்குதல் இடம்பெற்றிருந்தால்
 • நாட்டின் மக்களும் மற்றும் உலக சமூகமும் இலங்கையின் பாதுகாப்பில் நம்பிக்கையை முற்றிலும் இழந்திருக்கும் 
 • இந்தவகையான இன்னுமொரு தாக்குதல் நாட்டை பெரும் பொருளாதர நெருக்கடிக்குள் இட்டு சென்று இருக்கலாம்
 • மேலும் குண்டு வெடிப்புக்கள் நிகழுமா என்ற பெரும் பீதியுடன் மக்கள் நம்பிக்கையையே இழந்த நிலையில் வாழவேண்டிய நிலை தோன்றி இருக்கும்
 • இன ரிதியான வன்முறையையும் தூண்டி இருக்கலாம்
ஆனால் இவ்வளவு பாரிய அளவிலான பயங்கரவாத முயற்சிக்கான நடவடிக்கைகள் பல வருடங்களாக காத்தான்குடி பகுதியில் நடைபெற்றும் அவை எந்த ஒரு விதத்திலும் சமூகத்திர்க்கு பொறுப்பானவர்களுக்கோ அல்லது பாதுகாப்புதுறைக்கோ தெரியாமல் இருந்துள்ளதுள்ளமையே தற்போதைய நாட்டின் நிலமைக்கு காரணமாக  அமைந்துள்ளது. மேலும் இத் தாக்குதல்கள் நாட்டை 10 வருடங்களுக்கு பின்னோக்கியும் தள்ளியுள்ளது. இந்த ஆதங்கத்தையே எமது போன வார கட்டுரையில் மூலம் தெரியப்படுத்தியுள்ளோம்.


நிம்மதியை இழந்து  நிற்கும் கிழக்கும் இலங்கையும் 

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் மற்றும் அதனை தொடர்ந்து தோல்வியில் முடிந்த தற்கொலை தாக்குதல்கள் முயற்சி, மேலும் கிழக்கில் பல இடங்களில் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள், கைதுகள் என்பனவும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலிலுள்ள மக்களின் இயல்பு வாழ்கையை பெரிதும் பாதித்துள்ளது . அதாவது தேவை ஏற்படின் ஊரடங்கு சட்டங்கள், வீதி மறிப்பு சோதனைகள், சுற்றிவளைப்பு சோதனைகள், மற்றும் சந்தேகத்திற்க்கு உரியவர்கள் என்று பாதுகாப்பு படையினருக்கு தென்படுபவர்கள் கைது போன்ற நடவடிக்கைகளால் மக்கள் தமது இயல்பான வாழ்கை முறையை இழந்த நிலை குறிப்பாக இப் பகுதிகளில் காணப்படுகின்றது. மேலும் இதனால் மக்கள் தமது வீடுகளிலே முடங்கி கிடக்கும் நிலையும் பொதுவாக தென்படுகின்றது . . கிழக்கு மாகாணத்தில் கின்னியாவில் இருந்து பொத்துவில் வரையும் தமிழ் முஸ்லீம் மக்கள் ஒரு குறிப்பிட்ட அளவு தூர இடைவெளியில் இரு சமூகமும் மாறி மாறி வாழ்வதனால் குறிப்பாக இரு சமூகமும் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.


நல்லிணக்க அரசின் ஒரே ஒரு நன்மையையும் இழந்துள்ள மக்கள் 

மைத்திரி ரணில் அரசு என்றால் பல பிரதிகூலமான விடயங்களுக்கு மத்தியிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை ஒன்றுதான் குறிப்பிடக்கூடிய ஒரேஒரு நன்மையான விடயமாக தென்பட்டது . ஏனெனில் பாதுகாப்பு கெடுபிடி உடன் தளர்த்தப்பட்ட நிலையும், மக்களுக்கு முன்னைய ஆட்சிக்காலத்தில் இருந்த அச்ச நிலையும் முற்றாக அற்ற நிலையுமே நாடு முழுவதும் காணப்பட்டது மற்றும் நாட்டின் எந்த பாகத்திற்கும் எந்த நேரமும் போகக்கூடிய நிலையும், உயிர்த்த ஞாயிறு 2019 வரையும் மட்டுமே தொடர்ந்தது அதுவும் மைத்திரி ஆட்சியின் இறுதி எட்டு மாதகாலம் எஞ்சியுள்ள வேளையில் இறுதி நன்மையாக இருந்த மக்களின் இயல்பு வாழ்க்கையும் தொலைந்துள்ளது 


வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உல்லாச துறை வருமானத்தை இழந்த கிழக்கு 


உயிர்த ஞாயிறு படுகொலையை தொடர்ந்து கிழக்கு மாகாணத்திற்கு பெரும் வருவாயை ஈட்டி தந்த உல்லாசத்துறை முற்றிலும் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளது. கிழக்கில் உள்ள திருகோணமலை மாவட்டத்தில் நிலாவெளியும் , மட்டக்களப்பு மாவட்டத்தில் பாசிக்குடாவும் , அம்பாறை மாவட்டத்தில் உள்ளை அறுகம்பேயும் சுற்றுலா காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு உல்லாச பயணிகளை உள்வாங்கி கொண்டிருந்தன அத்தோடு இவற்றில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பை நேரடியாகவும் மறைமுகமாகவும் பெற்றுக்கொண்டிருந்தனர் ஆனால் இவர்களில் 80% மேற்பட்டோர் தமது வேலைவாய்ப்பை தாக்குதல் நடைபெற்று ஒரு சில நாட்களுக்குள் இழந்து விட்டனர். மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் தமது நாளாந்த வருமானத்தை இழந்தது மட்டுமல்லாது தங்களுடைய பல கோடி ரூபாய்கள் முதலீடும் பெறுமதி அற்றதாக மாறியுள்ளது. முக்கியமாக பாசிக்குடா பகுதியில் உள்ள 10 இற்கும் மேற்பட்ட 4 அல்லது 5 நட்சத்திர ஹோட்டல்களும் அதன் பெறுமதி பல நுறு கோடிகளும் இன்று பெறுமதியற்றதாக மாறியுள்ளது அதேவேளை உல்லை  பகுதி என்றால் பெருந்தெருவில் இரு மருங்கும் இரு கிலோமீட்டர்  வரை பெருந்தொகையான சிறு உல்லாச விடுதிகளும்  மனதில் தென்படுகின்றது ஆனால் இவற்றின் எதிர்காலம் முற்றிலும் கேள்விக்குறியாக மாறியுள்ளது

நாளாந்த தொழிலாளிகளின் வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தாக்குதல் 


நாளாந்த தொழிலாளிகள் மற்றும் சிறு வியாபார ஸ்தாபனங்களின் வருமானத்தில் பெரும் தாக்கத்தை இத்தாக்குதல் ஏற்படுத்தியுள்ளது. முக்கியமான உல்லாச துறையோடு மேலும் ஒரு சில துறைகளை குறிப்பிட வேண்டியுள்ளது
 • ஆட்டோ ஓட்டுனர்களின் வருமானம் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது மக்கள் பெரும்பாலும் வீடுகளுக்குள் முடங்கி கிடப்பதாலும் மற்றும் பிற்பகலுடன் பெருந்தெரு பகுதிகள் மற்றும் நகரகங்கள் உறங்கி போவதனாலும் மேலும் இவர்களில் பெரும்பாலனவர்கள் கடன் அடிப்படையில் ஆட்டோக்களை பெற்றுள்ளதாலும் இவர்களின் பெரும்பாலோனோரின் நிலை பெரும் திண்டாடத்திற்கு உள்ளாகியுள்ளது
 • தின தொழிலாளிகளின் நிலைமையும், இவர்களில் பெரும்பாலானோர் நகரப்பகுதிகளிலும், மற்றும் தமிழர்கள் முஸ்லீம் பகுதிகளில் தொழிலாற்றுவோர்களும், மற்றும் முஸ்லிம் வர்த்தகர்களின் சிறு வியாபார நிலையங்களை தமிழ் பகுதிகளில் உள்ளதாலும் தமது ஜீவனோபய நாளாந்த வருமானம் கேள்விக்குறியாகியுள்ளது
மற்றும் மட்டக்களப்பு மாவட்டம் வறுமை சுட்டன் அடிப்படையில் 25 மாவட்டங்களிலும் 25 ஆவதாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னொருவகையில் மிககூடுதலான அளவு தின தொழிலாளிகளையும் கொண்ட ஒரு மாவட்டமாகும். இந்த வகையில் இங்குள்ள மக்களில் ஏழ்மையில் உள்ளவர்களை மேலும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுவதோடு மற்றும் இந் நிலை மேலும் பல சமூக பிரச்சினைகளையும் உருவாக்கலாம்.

பீதியுடன் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் பெற்றோர்


இரண்டு வாரகால தாமதத்துடன் கடந்த திங்கள் கிழமை ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளின் வரவுகளில் பெரும் வீழ்ச்சி காணப்படுவதாக   செய்திகள் தெரிவிக்கின்றன. கிராமப்பகுதிகளில் வரவு 50% அளவில் காணப்படுவதாகவும் முக்கியமாக நகரை அண்டிய, மற்றும் எல்லை புற கிராமங்களில் வரவு மிகவும் மந்தமாக காணப்படுவதாகவும் தெரியவருகின்றது. மற்றும் தற்கால கல்வியில் பிரத்தியேக கல்வி நிலையங்கள் முக்கிய பங்கு வகிக்கும்  இவ் வேளையில் இவ் வகுப்புகள் ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் தற்போது அறவே தென்படவில்லை என்றும். இந் நிலை தொடருமாயின் ஏற்கனவே மாகாணமட்டத்தில் 9 மாகாணங்களில் இறுதி நிலையில் உள்ள மாகாண கல்வி நிலை மேலும் கீழ் நிலைக்கு தள்ளப்படலாம் என்று கல்வி ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றார்கள்.


பெற்றோரை பொறுத்த அளவில் முக்கியமாக
 • சேயோன் தேவாலயத்தில் பெருமளவு சிறுவர்களை மையப்படுத்திய தற்கொலைத்தாக்குதல் நடாத்தப்பட்டமையாலும் 
 • கிறிஸ்தவ பாடசாலைகளே  நகர் புறங்களில் அதிகமாக காணப்படுவதாலும் மற்றும் 3 தாக்குதல்களும் தேவாலயங்களை மையப்படுத்தி நடைபெற்றதாலும் 
 • குண்டு புரளி எழுமாயின் முக்கியமாக நகர் பகுதிகளில் உள்ள சிறு வயது மாணவர்களின் பாதுகாப்பை கையாளுவதில் உள்ள நடைமுறை பிரச்சினைகள்
பெற்றோர்களின் குழப்பமான நிலைக்கு முக்கிய காரணமாக உள்ளன


ஊடகம் , சமூகவலைத்தளங்கள் மற்றும் சமூகத்தின் பாரிய பொறுப்பு

ஊடகங்கள், சமூகவலைத்தளங்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து பல சந்தர்ப்பங்களில்
 • செய்திகளை மிகை படுத்தியும்
 • பல வேளைகளில் நடவாத செய்திகளை நடந்ததாகவும்
 • மற்றும் ஏற்கனவே பல ஊடகங்களின் ஊடாக ஏற்கனவே குறிப்பிட்டது போன்று ஒட்டு மொத்த சமூகத்தையும் பயங்கர வாதிகளாக காட்டுவதையும்
 • சில   ஊடகங்கள்  தங்களது செய்திகளை பார்ப்பவர்களின் எண்ணிக்கையை கூட்டும்  நோக்கோடும்  
இன்றும் சில ஊடகங்கள் ஊடக தர்மத்திற்கு அப்பால்சென்று செய்திகளை பிரசுரிப்பத்தனை காணக்கூடியதாகவும் உள்ளது இவை எவற்றை உருவாக்கும் எனில்
 • ஏற்கனவே உயிர்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களினால் உயிர்களை இழந்த மக்கள் ஒரு பக்கத்திலும் இன்னொரு தொகுதி மக்கள் நாளாந்த வருமானத்தை நம்பி குடும்பம் நடத்துபவர்களாகவும் , இவர்கள் தற்போதைய நிலைமைகளால் தமது நாளாந்த வருமானத்தை இழந்த நிலையிலும் நாங்கள் இக் கட்டுரை எழுதும் போதும் மற்றும் நீங்கள் வசிக்கும் போதும் அவர்களோ தங்களது மூன்று வேளை உணவிற்கும் திண்டாடவேண்டிய நிலையிலும் மேலும் குழப்பங்கள் ஏற்படும் பட்சத்தில் இவர்கள் உண்ணும் ஆகாரத்தின் அளவை மேலும் குறைப்பதாகவும் அமையும்
 • தற்போதைய நிலைமைகளின் படி ஒரு சில அடிப்படை வாதிகளே இப் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு காரணமாக உள்ள வேளையில் ஒட்டு மொத்த சமூகத்தையும் சுட்டி காட்டுவதன் மூலம் இன முறுகலை  ஏற்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகவே உள்ளன.
 • கிழக்கை பொறுத்தவரையில் ஏற்கனவே பல முறை குறிப்பிட்டது போன்று இரு சமூகமும் மாறி மாறி வாழ்வதாலும் மற்றும் பொருளாதாரத்திலும் அவ்வாறு ஒரு நிலை காணப்படுவதாலும் குரோதத்தை தூண்டும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின் தற்போது அடிமட்ட மக்களை மட்டும் பொருளாதார ரீதியாக தாக்கும் இப் பிரச்சினை வெகு விரைவில் மேல்மட்ட மக்களையும் தாக்கும் என்பதில் ஐயமில்லை  
ஏற்கனவே நீண்ட யுத்தத்தால் பாதிக்கப்பட்டு சுமுகமான நிலைக்கு திரும்பிய வேளையில் மீண்டும் யுத்தகால கால நிலைக்கு செல்லாமல் இருப்பதில் ஊடக துறை , சமூக ஊடகங்கள்  பெரும் பங்கு உள்ளது என்பதை நாங்கள் எல்லோரும் மனதில் கொண்டு பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் 


காலத்தின் கட்டாயத்தை கருத்திற்கொண்டு சமூகங்களுக்குள் உள்ள முரண்பாடான விடயங்களை களைதல்

வட கிழக்கில் நடைபெற்ற மிக நீண்ட யுத்தம், இயற்கை அனர்த்தங்கள் இவற்றையும் கடந்து கிழக்கில் உள்ள சமூகங்கள் வாழ்க்கையை முன் கொண்டு செல்ல முற்படும் போது தற்பொழுது புதிதாக எழுந்துள்ள முஸ்லீம் அடிப்படைவாதம். முக்கியமாக இரு சமூகங்கள் கிழக்கின் கரையோரமாக கலந்து வாழ்கின்ற நிலையில் ஒரு சமூகம் மற்றைய சமூகத்தை தாக்காத வகையில் தத் தமது சமூகங்களை முன்னெடுத்து செல்வது மிக முக்கியமாக அமைந்துள்ளது. இந்த வகையில் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கடசிகளின் தலைவர்கள், மற்றும் மத தலைவர்களின் பங்கும், மேலும் அரசின் பாரிய பங்கும் இந்த விடயங்களில் முக்கியமாக உள்ளது மேல் நிலை பதவிகளுக்கு நியமனங்களை வழங்கும் போது சமூகங்களுக்கும் முரண்பாட்டை ஏற்படுத்தும் விடயங்களில் பொறுப்பு வாய்ந்த முறையில் கையாளவேண்டும். தற்போது உள்ள முறுகல் நிலைக்கு ஆளுநர் நியமனமும் ஒரு காரணமாகவுள்ளது.

ஒரு வலுவான இலங்கையை கட்டி எழுப்புவது என்பது அடி மட்டத்தில் இருந்து ஆரம்பிக்கவேண்டும். இதில் சமூகம், மத தலைவர்கள் மேலும்  அரசியல் தலைவர்களின் பங்கு மிக முக்கியமாக உள்ளது இலங்கையை பொறுத்தவரை இந் நிலையை அடைவதற்கு தற்போதைய நிலைமையும் கருத்திற்கொண்டு பார்ப்போமாயின் அது ஒரு மிக நீண்ட பயணமாக அமைவது போல் தென்படுகின்றது இந்த வகையில் இலங்கை கிறிஸ்தவ சபையின் தலைவர் ஆண்டகை ரஞ்சித் மல்கம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் உள்ளார் என்று கூடுதலான ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

  - ஆர்.சயனொளிபவன் & TEAM