கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்தக் கோரி திருக்கோவில் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டப் பேரணி

கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்தக் கோரிய மதகுருமார்கள் மற்றும் மாநகர சபை உறுப்பினர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வலுசேர்க்கும் வகையில் திருக்கோவில் பிரதேசத்தில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இவ் ஆர்ப்பாட்டப் பேரணியானது திருக்கோவில் பிரதேச பொது மக்கள், இளைஞர் கழகம் மற்றும் தமிழர் ஒன்றியம் ஆகிய அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று திருக்கோவில் விஸ்வதுளசி வித்தியாலயம் முன்பாக இருந்து ஆரம்பமாகி பிரதான வீதியூடாக சென்று திருக்கோவில் தம்பிலுவில் பொது சந்தை கட்டடத்திற்கு முன்பாக பேரணி நிறைவடைந்தது.

அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்.

வடக்கு தமிழ் உப பிரதேச செலயக தரம் உயர்த்தும் போராட்டமானது தமிழர்களின் 30வருட நிருவாக ரீதியான உரிமை போராட்டம், இதனை யாரும் இனரீதியான போராட்டமாக கருத வேண்டாம்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தினை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களும் ஒன்றுமையுடன் இணைந்து கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டு விரைவாக இந்த பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்க வேண்டும். இல்லாதவிடத்து இப்போராட்டமானது விஸ்தரிக்கப்பட்டு நாடுபூராகவும் முன்னெடுக்கப்படும் சூழ்நிலையும் உருவாக்கூடியதாக அமையும். என தெரிவித்தனர்

கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலக தரம் உயர்த்தக் கோரிய உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மதகுருமார் மற்றும் இளைஞர்களுக்கு என்றும் துணையாக திருக்கோவில் பிரதேச இளைஞர்கள் கரம் கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்து இருந்தனர்.

இவ் ஆர்ப்பாட்ட பேரணியின் நிறைவில் திருக்கோவில் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினரும், உதவி தவிசாளருமான எஸ்.விக்னேஸ்வரன், பிரதேசசபை உறுப்பினர் என்.ரமேஷ், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.செல்வராசா, மற்றும் திருக்கோவில் பிரதேச இளைஞர் கழகம் சார்பாக யோ.மயூரன் ஆகியோரும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து இருந்தனர்