இலங்கை சிங்களவர்களின் நாடு. தமிழர்கள் இதனால் கோபிக்கக் கூடாது; ஞானசார தேரர்



இலங்கை சிங்களவர்களின் நாடு. தமிழர்கள் இதனால் கோபிக்கக் கூடாது. எல்லாவற்றுக்கும்போல் நாட்டுக்கும் ஒரு சொந்தக்காரன் இருக்க வேண்டும். நாங்கள்தான் இலங்கையின் வரலாற்றைக் கட்டியெழுப்பிய இனம். நாங்கள் கள்ளத்தோணி அல்ல. உலகில் சிறுபான்மை என்றாலும் நாங்கள் கெளரவமான இனம் என்று பொதுபலசேனா அமைப்பின் மாநாட்டில் அதன் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“இன்று எமது வீட்டுக்குள் விஷப்பாம்பு வந்துவிட்டது. வீட்டுக்குள் இருக்கும் பாம்பை நாங்கள் வெளியேற்ற வேண்டும். வீட்டுக்குள் எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் இவ்வருடம் இதுவரை எட்டாயிரம் பேர் வரை உலகில் கொல்லப்பட்டுள்ளனர். அப்படியான அடிப்படைவாதம் இது.

சிங்கள அரசை அமைப்போம். சிங்களவர்கள் விரும்பும் அரசை ஏற்படுத்துவோம். நாடாளுமன்றத்தில் சிங்களவர்கள் கோலோச்சும் நிலையை ஏற்படுத்துவோம். சிங்களவர்கள் முதுகெலும்புடன் இருக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் இருக்கும் 225 பேரில் குற்றம் செய்யாதவர்களைக் காண முடியாது. இனத்துக்குத் தலைமை வழங்கக் கூடிய ஒரு அரசியல் கலப்பற்ற தலைவன் எமக்கு வேண்டும்.

ஜனநாயகத்தின் காப்பரணான நாடாளுமன்றத்தில் செயற்படும் ஒருவர் – சிங்களவரின் நாடாளுமன்றம் இன்று தேவை. சிங்களவருக்கு ஏற்ற சட்டங்கள் தேவை. நமக்கான நாடாளுமன்றம் வேண்டும்.

காவிகளின் பலத்துடன் நாம் இந்த நாட்டை வெற்றியை நோக்கி கொண்டு செல்லலாம். நாட்டில் 10 ஆயிரம் விகாரைகள் உள்ளன.7 ஆயிரம் விகாரைகளை நாம் ஒன்று சேர்த்தால் பிரிவினைகளை மறந்தால் நாம் எதிர்பார்க்கும் வாக்குகள் கிடைக்கும். நாங்கள் கல்வி பயின்று அனுபவத்துடன்தான் வந்துள்ளோம்.

எங்களால் இந்த நாட்டை நல்ல இடத்திற்குக் கொண்டு செல்லலாம். 70 வருடம் இந்த நாட்டை வீணாக்கியவர்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும்.

ஆட்சியைக் கைப்பற்றுவது எமது நோக்கமல்ல. ஆனால், ஆட்சியாளர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் எமக்கு இருக்க வேண்டும்.

இன்று சிங்களவர்களை சிங்களவர்களாக இருக்கவைக்க எமக்கு அரசியல் அதிகாரம் வேண்டும். அதற்காக நாம் பாடுபட வேண்டும்” – என்றார்.