கிழக்கு வாழ் தமிழ் மக்களும் அரசியல் தீர்வும்ஆர்.சயனொளிபவன் & TEAM   

 • இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததில் இருந்து வழங்கப்பட்ட அதிகார பரவலாக்கல்கள்
 •  1950 களில் இருந்து தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட அகிம்சை வழி மற்றும் ஆயுத போராட்டங்கள்
 • 1950 கள் முதல் கிழக்கில் ஏற்பட்ட இரு பாரிய மாற்றங்கள்
 • கிழக்கில் 1950 களில் வகுக்கப்பட்ட அரசியல் கொள்கை உடன் பயணிக்கும் தமிழ் தலைமை
இலங்கை தீவிற்கு சுதந்திரம் கிடைத்து ஏறத்தாழ 70 வருடங்களுக்கு மேலாகியும் தமிழ் சமூகத்தை பொறுத்த அளவில் ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பண்டா - செல்வா ஒப்பந்தம் முதல்,  ஒப்பந்தங்கள் வரையப்பட்டுவதும் பின்னர் அவை கிடப்பில் போடப்படுவதும் எமது முன்னோர் காலம் முதல் இன்று வரை அரங்கேறும் ஒரு வழமையான விடயமாகவே உள்ளது. மேலும் ஒரு முறையான அதிகாரபரவலாக்கள் ஆவது கிடைத்ததா என்று பார்ப்போமேயானால் இந்த நீண்ட கால வரலாற்றில் அதிகார பரவலாக்கல் என்ற வகையில் முதலில் ஒரு மிக சிறிய அளவிலான வெற்றி அளிக்காத மாவட்ட மட்டத்திலான அதிகார பரவலாக்களும் பின்பு மாகாண அளவிளான அரை அதிகார பரவலாக்கமும் உள்ள மாகாண சபைகளும்  உருவாக்கப்பட்டு அதனுடாக அதிகார பரவலாக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததில் இருந்து வழங்கப்பட்ட அதிகார பரவலாக்கல்கள்

1) 1979 களில் உருவாக்கப்பட்டு தோல்வியில் முடிந்த மாவட்ட சபைகள்

இச் சபையானது முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தவினால் உருவாக்கப்பட்ட மிகவும் அடிப்படையான அதிகார பரவலாக்களை கொண்டதாகவும் ஒரு பயனளிக்காத சபையாகவும் , மற்றும் இச் சபையானது மக்களையும் உலகையும் ஏமாற்றும் ஒரு முயற்சியாகவும் கருதப்பட்டது. இச் சபையின் தலைவர் ஆக மாவட்ட அமைச்சர் ஒருவரும் (தற்போதைய ஆளுநர் போல்) இவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும்  மற்றைய உறுப்பினர்கள் அந்த மாவட்டத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், மாவட்டசபை தேர்தல் மூலம் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களையும் அத்தோடு அந்த மாவட்டத்தில் அதி கூடிய வாக்குகளைப் பெரும் கட்சியில் உள்ள ஒருவருக்கு மாவட்டசபை தலைமை ( தற்போதைய முதல் அமைச்சர் போல் ஆனால் மாவட்ட அளவில் ) பொறுப்பும் வழங்கப்பட்டது. ஆனால் இந்த சபைக்கு எந்தவொரு அதிகார பரவலாக்கலும் வழங்கப்படாததால் இச் சபையானது தோல்வியிலேயே முடிவுற்றது.

2. 1987 களில் உருவாக்கப்பட்ட முழு அதிகார பரவலாக்கல் அற்ற மாகாணசபைகள்

ராஜீவ் - ஜெயவர்த்தன ஒப்பந்தம் இந்தியாவின் நிர்பந்ததத்தால் கிடைக்கப்பெற்ற மாகாண சபை ஒப்பந்தம்


மாகாணசபை உருவாக்கம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் கூட்டு உடன் படிக்கையை தொடர்ந்து முக்கியமாக வடக்கு கிழக்கு மக்களுக்கான அதிகார பரவலாக்கலை மையமாக கொண்டு வடக்கு கிழக்கை ஒரு மாகாணமாகவும் இவை தவிர்த்து இலங்கை முழுவதும் மேலும் ஏழு மாகாணங்களுமாக மொத்தம் எட்டு மாகாண சபைகளை கொண்ட ஒரு கட்டமைப்பாக உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை இந்த கட்டமைப்பிற்கு முக்கியமான அதிகாரங்களான பாதுகாப்பு (போலீஸ்), காணி மற்றும் நிதி அதிகாரங்கள் தவிர்த்த ஏனைய அதிகாரங்கள் வழங்கப்பட்டு ஒரு குறையான அதிகார சபையாக இயங்கிக்கொண்டு வருகின்றன. இவ்வாறு  இருக்கையில் 2006 இல் வழங்கப்பட்ட ஒரு நீதிமன்ற தீர்ப்பினை தொடர்ந்து வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டு அன்றிலிருந்து வடக்கும் கிழக்கும் இரு தனி மாகாணசபைகளாக இயங்கி கொண்டு வருகின்றன . இவை தான் இலங்கையில் சுதந்திரத்திற்கு பின்பிலிருந்து இன்றுவரை வழங்கப்பட்ட அதிகார பரவலாக்கலாகும்

1950 களில் இருந்து தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட அகிம்சை வழி மற்றும் ஆயுத போராட்டங்கள்

வடக்கு கிழக்கை பார்ப்போமேயானால் இப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்களும் தமிழ் அரசியல் தலைமைகளும் 1950 களில் இருந்து அரசியல் தீர்வுக்காக அகிம்சை வழியில் பல விதமான போராட்டங்களை ஆரம்பித்து 1980கள் வரை வெற்றி அளிக்காத மாகாண சுயாட்சி,மாநில சுயாட்சிகளுக்கான போராட்ட முயற்சிகளாகவும். பின்னர் 1980 களில் தனி நாட்டுக்கான ஆயுத போராட்டமுமாக மாறி 2009 வரை நீடித்து பின்னர் அப் போரட்டமும் மௌனித்த போராட்டமாக முடிவிற்கு வந்தது., தற்போது மீண்டும் அகிம்சை வழியில் அரசியல் தீர்வு என்ற முயற்சி தொடர்ந்த வண்ணமே உள்ளது.

எழுபது வருடங்களுக்கு முன் தந்தை செல்வா காலத்திலிருந்து ஆரம்பித்த அகிம்சை வழி போராட்டம் , அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் வரை சென்று பின்னர் சக்திவாய்ந்த ஆயுதப்போராட்டமாக வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் எடுத்து செல்லப்பட்டு தற்போது இரா.சம்பந்தன் தலைமையில் மீண்டும் அகிம்சை வழியில் ஒரு தீர்வில்லாத போராட்டமாக  இன்றும் தொடர்கின்றது 

1950 கள் முதல் கிழக்கில் ஏற்பட்ட இரு பாரிய மாற்றங்கள்

கிழக்கு மாகாணத்தை பொறுத்தளவில் சுதந்திரம் கிடைத்ததிலிருந்து இரு முக்கிய விடயங்களில் பாரிய மாற்றம் கண்டுகொண்டே வருகின்றது

   1.  இனங்களுக்கு இடையிலான சனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கொண்ட ஒரு மாகாணமாக தொடர்ந்து கொண்டே செல்கின்றது. அதாவது இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த வேளையில் இங்கு இரண்டு சமூகங்களான தமிழ் முஸ்லீம் ஆகிய இனங்களே 1950 ஆண்டு ஆரம்பம் வரை கணிசமான அளவு மக்களே வாழ்ந்தனர் . இவற்றுள் தமிழ் இனம் 52% மும் முஸ்லீம் இனம் 39% மும் ஏனையவை 9% மும் ஆக இருந்தது. ஆனால் இன்றுவரை இவ் இனம்களுக்கிடையே சனத்தொகை விகிதாசாரத்தில் பாரிய மாற்றத்தை கண்டுகொண்டே வருகின்றது. ஏற்கனவே எமது ஆய்வில் ஆராய்ந்தது போன்று தமிழ் மக்களை பொறுத்தவரையில் போர், இடம்பெயர்வு, சனத்தொகை கட்டுப்பாடு போன்ற முக்கிய காரணிகள் அவர்களின் சனத்தொகை வளர்ச்சியை குறைத்தது, முஸ்லீம் மக்களை பொறுத்தளவில் இயற்கையான சனத்தொகை மூலம் பெரு வளர்ச்சியும் , சிங்கள மக்களை பொறுத்தளவில் குடியேற்ற திட்டங்கள் மற்றும் எல்லைமாற்றங்கள் மூலமும் மூன்றாவது இனமாக உள்வாங்கப்பட்டுள்ளது தற்போதைய கிழக்கு மாகாண சனத்தொகையில் தமிழ் மக்களின் விகிதாசாரம் 38% - 39% ஆகவே உள்ளது.

2. 1950 களில் தமிழ் தேசிய கட்சிகளும் உருவாக்கப்பட்டன அத்தோடு அவற்றுள் முஸ்லீம் மக்களும் உள்வாங்கப்பட்டு அவர்களில் கணிசமானவர்கள் தமிழ் தேசியக்கட்சிகளினுடாக பாராளுமன்ற உறுப்பினர்களாவும் தெரிவாகி இருந்தனர். ஆனால் இந்த அரசியல்கலாச்சாரம் கிழக்கு மாகாணத்தில் 1960களின் முடிவு வரையும்தான் நீடித்தது. 1960 களின் பின்பு தமிழ் தேசிய கட்சிகளின் ஊடாக முஸ்லீம் சமூகத்தவர்கள் தேர்தல்களில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டும் எந்த ஒரு முஸ்லீம் சமூகத்தவரும் வெற்றி பெறவில்லை என்பதுதான் யதார்த்தம்.

முஸ்லீம் சமூகத்தை பொறுத்தளவில் மொழியால் ஒன்று பட்டாலும் அவர்களின் சமயம் மற்றும் கலாச்சாரத்தால், தமிழ் மக்களிடம் இருந்து முற்றாக வேறுபட்டதால் அவர்களது தேவைகளும் அபிலாசைகளும் காலம் கடந்து செல்ல செல்ல வேறுபட தொடங்கியது. இக்காரணங்களால் 

அவர்கள் தங்களுடைய சமூகத்திற்கு ஏற்ற வகையிலும் சமூகத்தின் அபிலாசைகளை நிறைவு செய்யும் வகையிலும் தமக்கென்று அரசியல் கட்சிகளை ஆரம்பித்து தங்களுடைய சமூகத்திற்கு பொருத்தமான வழியில் முன்னேற்றகரமாக சென்றவண்ணம் உள்ளனர். மேலும் அரசியலில் பல பரிமாணங்களை கடந்து கடந்த 25 வருடகாலமாக கூடிய சந்தர்ப்பங்களில் இலங்கையின் ஆட்சியையை நிர்ணயிக்கும் சக்தியாகவும் திகழ்கின்றனர்.

1980 களின் இறுதியில் இருந்து கிழக்கில் முற்றிலும் வித்தியாசமான முறையில் அபிவிருத்தியை மட்டும் நோக்காக கொண்டு அமரர் அஷ்ரபினால் ஆரம்பித்து ரவுப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் என , பல கிளைகளாக பிரிந்து அபிவிருத்தியில் பல பரிணாமங்கள் கண்டு முன்னேறி செல்லும் முஸ்லிம் சமூகம்


கிழக்கில் 1950 களில் வகுக்கப்பட்ட அரசியல் கொள்கை உடன் பயணிக்கும் தமிழ் தலைமை

தமிழ் தலைமையை பொறுத்த அளவில் கிழக்கில் தங்களுடைய அரசியல் பயணத்தை 1950 களில் எவ்வாறு ஆரம்பித்தார்களோ அதே வகையில் தான் இன்றும் தங்களுடைய அரசியல் கொள்கைகளை கொண்டு செல்ல முற்படுகின்றார்கள். இவ் அரசியல் கொள்கையானது கிழக்கை பொறுத்தளவில் இன்றைய காலகட்டத்திற்கு ஒரு ஒவ்வாததும் பொறுத்தமற்றதுமான கொள்கையாக உள்ளது. ஆனால் தமிழ் தலைமையோ இன்றுவரை அதே அரசியல் கொள்கையை தொடரும் ஒரு துர்பார்க்கிய நிலையை பார்க்கக்கூடியதாக உள்ளது. இவை எவற்றை பிரதிபலிக்கின்றது என்றால் தமிழ் தலைமையானது
 • கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் அதி முக்கிய தேவைகளை தெரிந்தும் தமது தன்மையை மாற்றாமல் இருக்க முற்படுகின்ற தலைமையாகவும்
 • கள நிலைமையை காலத்திற்கு காலம் ஆராயும் தன்மை அற்ற தலைமையாகவும்
 • கிழக்கை பற்றிய அக்கறை அற்ற தலைமையாகவும்
 • அல்லது இவை அனைத்தும் சேர்ந்த ஒரு தலைமையாகவும் கிழக்கு மக்கள் மத்தியில் தென்படுகின்றனர் .
எவை எவ்வாறு இருப்பினும். இதுவரை இந்த பாரிய மாற்றத்தை கருத்தில் கொள்ளாதிருப்பின் தற்போதைய காலத்தின் கட்டாயத்தால். கிழக்கு தொடர்பான தமது கொள்கையில் முக்கியமான மாற்றங்களை மேற்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளார்கள்.


கிழக்கின் அண்மைய சனத்தொகை விகிதாசாரத்தை பார்ப்போமாயின் (அண்ணளவானவிகிதாசாரம் )

தமிழ் மக்கள் - 38%
முஸ்லீம் மக்கள் - 39%
சிங்கள மக்கள் - 22%
ஏனைய மக்கள் 1%


இவ்வாறு மூன்று சமூகங்கள் வாழும் ஒரு மாகாணமாக கிழக்கு இருக்கும்போது அரசியல் தீர்வவிற்கு உள்ள சாத்தியக்கூறுகளை பார்ப்போமாயின். குறிப்பாக வட கல்முனை பிரதேச செயலகம் உருவாக்கத்தில் நீண்டகாலமாக தமிழ் முஸ்லீம் சமுகங்களுக்கு இடையேயான உள்ள இழுபறி நிலையை தொடர்ந்து கொண்டிருக்கும் இவ் வேளையில் யதார்த்த பூர்வமாக சிந்திப்போமாயின்

 • முதலாவதாக  70 வருட போராட்டத்தில் இதுவரை கிடைத்தது முழு அதிகார பரவலாக்கல் அற்ற மாகாணசபை ஒன்றுதான் தமிழ் மக்களுக்கும் மற்றும் அதனோடு சேர்த்து இலங்கையில் வாழ்கின்ற மற்றைய இன மக்களுக்கும் கிடைத்த ஒரு தீர்வாகும். மேலும் இவ் தீர்வானது இந்தியாவின் பாரிய அழுத்தத்தாலும் தலையீட்டாலும் பெறப்பட்ட ஒரு தீர்வாகும். அதனை விட சாதித்தது ஒன்றுமே இல்லை
 • மூன்று சமூகம் வாழும் கிழக்கு மாகாணத்தில் அதுவும் தற்போது சனத்தொகை விகிதத்தில் இரண்டம் நிலைக்கு தள்ளப்பட்ட தமிழ் இனத்திற்கு சாதகமா ஒரு அரசியல் தீர்விற்கு உள்ள சாத்திய கூறுகள் என்ன?
 • அப்படித்தான் ஒரு தீர்வு கிழக்கு மக்களுக்கு கிடைக்கும் என்று வைத்துக்கொள்வோமாயின்  அதனை எவ்வாறு அமுல் படுத்துவது ஏனெனில்  கிழக்கில் முக்கியமாக பல இடங்களில் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் கூடிய இடங்களில் ஒரு சமூகத்தை தொடர்ந்து மற்றைய சமூகம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றது. அதாவது பல பகுதிகளில் நிலத்தொடர்பு அற்ற வகையில் இரு சமூகம்களும் வாழ்கின்றனர் இந்நிலையில் எவ்வாறு அதிகார பகிர்வை வழங்கமுடியும் அல்லது நடைமுறை படுத்தமுடியும். குறிப்பாக ஒரு சமூகத்தின் கட்டுப்பாட்டின் மற்ற சமூகம் வள விரும்பாத நிலையில்.
 • அப்படித்தான் ஒரு அரசியல் தீர்வோ அல்லது அதிகார பகிர்வோ கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்பட்டால் தற்போது உள்ள சனத்தொகை விகிதத்தின் படி எந்தவொரு சமூகத்திற்கும் பெரும்பான்மை இல்லை அத்தோடு சனத்தொகையில் ஏற்படும் மாற்றத்தை பார்க்கும் போது எந்த ஒரு இனமும் பெரும்பான்மையாக மாறுவதற்கு அடுத்த 100 வருடங்கள் தேவை. மேலும் தொடர்ந்து வரும் அரசுகளின் குடியேற்றங்கள் மற்றும் எல்லை மாற்றங்களை பார்க்கும் போது கிழக்கில் ஒரு சமூகம் பெரும்பான்மையாக வருவதை தவிர்ப்பது போலும் உள்ளது
 • இரு சமூகங்கள் ஒன்று சேரும் போது மூன்றாவது சமூகத்தை ஒடுக்கக்கூடிய தன்மையையும் காணக்கூடியாதவும் உள்ளது , இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒரு ஆரோக்கியமான உறவை சமூகங்களுக்கு இடையே ஏற்படுத்தாது .
இவற்றை எல்லாம் பார்க்கும் போது பல இனம் வாழும் கிழக்கில் அரசியல் தீர்வு என்பது தமிழ் மக்களை பொறுத்தளவில் ஒரு கனவாகவும் ஏமாற்றமாகவும் தொடர்வதற்குரிய சந்தர்ப்பங்களே கூடுதலாக உள்ளது. இதனையும் தாண்டியும் ஒரு அரசியல் தீர்வு கிழக்கு மாகாணத்திற்கு  கிடைக்குமாயின் அத் தீர்வானது இங்குள்ள மூன்று சமூகங்களையும் திருப்தியளிக்கக்கூடிய வகையில் எவ்வாறு அமையும். என்பதும் மேலும் அவ்வாறு கிடைக்கும் தீர்வு திட்டத்தை நடைமுறை படுத்தும் போது மூன்று சமூகக்களையும் பாதிக்காத வகையில் நடைமுறை படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் ( வட கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தல் நல்லதொரு உதாரணமாக உள்ளது) இவற்றை எல்லாம் வைத்து யதார்த்த ரீதியாக பார்க்கும் போது ஒரு முறையான தீர்வு கிடைக்குமா என்பது பெரும் கேவிக்குறியாக மாறியுள்ளது

மேலும் அப்படித்தான் இருந்தாலும் இன்னும் எத்தனை வருடங்கள் செல்லும் என்பதும் ஒரு புதிராகவே உள்ளது.

கிழக்கு மாகாணத்தை பொறுத்தளவில் மிக நீண்ட போரின் தாக்கத்தாலும் மற்றும் அபிவிருத்தியில் முற்றாக புறக்கணிக்கப்பட்டதுமான ஒரு சமூகமாக தமிழ் சமூகம் பயணித்துள்ளது . இதன் விளைவாக கிழக்கில் உள்ள தமிழ் சமூகம் மற்றைய இரு சமூகங்களையும் விட கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், மற்றும் அடிப்படை கட்டுமானங்களில் பின் நிலைக்கு தள்ளப்பட்ட ஒரு சமூகமாகவும் மாற்றம் கண்டுள்ளது . இவ் அவலங்களிலிருந்து தமிழ் சமூகம் மீண்டு வருவதற்கும் காலத்தின் கட்டாயத்தை கருத்திற்கொண்டும் அபிவிருத்தியை முன்னிலைப்படுத்துவது மட்டுமல்லாது அவற்றை யதார்த்தபூர்வமாக அடையக்கூடிய வகையில் உறுதியாகவும் செயற் திறனுடனும் கொண்டு செல்லக்கூடிய ஒரு கட்டமைப்பும் அணுகுமுறையும் உள்வாங்கப்படுவதும் இன்றியமையாதகவுள்ளது.

கிழக்கின் அவலம் தொடர்பான எமது கட்டுரைகள்  தொடரும்…….

ஆர்.சயனொளிபவன் & TEAM