அடகு வைத்த மோதிரங்களுக்குப் பதிலாக வேறு மோதிரங்கள்! ; நகைகளை மீட்க அரச வங்கிக்குச் சென்றவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி !


அட்டன் – டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் 2024ஆம் ஆண்டு இரு மோதிரங்களை அடகு வைத்த நபர் அதை மீட்பதற்கு இவ்வருடம் சென்றபோது வேறு மோதிரங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து வங்கி அதிகாரிகளுக்கு அறிவித்ததையடுத்து அவர்களும் இதில் தவறு நடந்துள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

எனினும் வேறு நபர்களிடம் மோதிரங்கள் மாறிச் சென்றுள்ளதை அறிந்துகொண்ட வங்கி அதிகாரிகள் அவற்றைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

டிக்கோயா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் 2024 ஜனவரி 30ஆம் திகதி தனதும் தனது மனைவியினதும் மோதிரங்களை அரச வங்கியொன்றில் அடகுவைத்து பணம் பெற்றுள்ளார்.

பின்பு ஒரு வருடம் கழித்து அதற்கான வட்டித்தொகையை கடந்த வருடம் பெப்ரவரி மாதம் செலுத்தியுள்ளார்.

தனது இரு மோதிரங்களையும் மீட்பதற்காக இவ்வருடம் பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி மேற்படி வங்கிக்கு சென்ற அவருக்கு ஒரு வருட வட்டித்தொகையோடு மொத்த கொடுப்பனவை செலுத்திய பின்னர் வங்கி அடகு நகை பெட்டகத்திலிருந்து மோதிரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மோதிரங்களை அவதானித்த குறித்த நபர் அவை தான் அடகுவைத்த மோதிரங்கள் அல்ல என்பதை உணர்ந்து கொண்டுள்ளார். அது குறித்து வங்கி அதிகாரியிடம் தெரிவித்ததையடுத்து நிலைமையை உணர்ந்துகொண்ட வங்கி முகாமையாளர் ஒரு வாரம் கழித்து வரும்படியும் குறித்த மோதிரங்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

தான் செலுத்திய பணத்தையும் அவர் மீளப்பெற்றுக்கொண்டுள்ளார். எனினும் ஒரு வாரம் கழித்து அவர் சென்றபோதும் அவருக்கு மோதிரங்கள் கிடைக்கவில்லை.

தமக்கு இன்னும் காலம் தேவைப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அவர் அட்டன் பொலிஸ் தலைமை காரியாலயத்துக்கு முறைப்பாடு ஒன்றை செய்வதற்காக சென்றுள்ளார். சம்பவத்தை செவிமடுத்த பொலிஸ் அதிகாரி இது குறித்து வங்கியின் பாதுகாப்பு கமராவை சோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

அவர் முறைப்பாட்டை பதிவு செய்யாமல் இரு நாட்கள் கழித்து மீண்டும் வங்கிக் கிளைக்கு சென்ற போது அவரது மோதிரம் வேறு ஒரு நபருக்கு தவறுதலாக சென்று விட்டதாகவும் அவரை தொடர்பு கொண்டு அதை மீண்டும் கொண்டு வந்து தரும்படி தகவல் அனுப்பியுள்ளதாகவும் வங்கி முகாமையாளர் தெரிவித்ததுடன் மனைவியின் மோதிரம் யாருக்கு சென்றுள்ளது என்பது பற்றி தாம் தேடி வருவதாக பதில் அளித்துள்ளார்.

தான் அடகுவைத்த இரண்டு மோதிரங்களின் எடை 5.30 கிராம் என்று கூறும் குறித்த நபர், வங்கி முகாமையாளர் ஒரு மோதிரமே அடகு வைக்கப்பட்டதாக ஒரு கட்டத்தில் கூறியதாகவும் இது தொடர்பில் தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் மோதிரங்கள் கிடைக்காவிட்டாலும் அதன் எடைக்கேற்ப தற்போதைய சந்தை விலைப் பெறுமதியை எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.

அரச வங்கியொன்றில் இவ்வாறான தவறுகள் இடம்பெறுவது குறித்து நகைகளை அடகு வைப்போர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.