செங்கலடியில் 45 இலட்சம் ரூபாய் திருட்டு – கைவிரல் அடையாளத்தால் சிக்கிய நபர்!


(செங்கலடி நிருபர் சுபஜன்)

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பிரதான வீதி பதுளை வீதியில்  அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் அண்மையில் இடம்பெற்ற பாரிய திருட்டுச் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தக நிலையத்தில் சுமார் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் களவாடப்பட்டிருந்தன. இது குறித்து ஏறாவூர் பொலிஸார் மற்றும் விசேட பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சம்பவ இடத்திலிருந்து பொலிஸாரால் பெறப்பட்ட கைவிரல் அடையாளங்கள் (Fingerprints) புலனாய்வுப் பிரிவினருக்கு பெரும் உதவியாக அமைந்தன.

சோதனையின் போது, சேகரிக்கப்பட்ட கைவிரல் அடையாளங்கள் ஏற்கனவே பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபரின் அடையாளங்களுடன் ஒத்துப்போனதை அடுத்து பொலிஸார் இந்த அதிரடி கைதை மேற்கொண்டுள்ளனர்.

 மட்டக்களப்பு பெரியநீலாவனை, பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சந்தேகநபர் தற்போது ஏறாவூர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். திருடப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் தற்போதைய நிலை குறித்து தகவல்களைப் பெற பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.