(சித்தா)
கொழும்பு புதிய அலை வட்டம் மகளீர் அணியினரால் 2026 அம் ஆண்டு சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட வீரவனிதையர் விருது விழாவில் மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த திருமதி ராதா ஞானரெத்தினம் அவர்களுக்கு 'வீரவனிதையர்' விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 7 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இந் நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். இலங்கை- இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு துறைகளில் சாதனை செய்த 19 மகளீருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. இவர்களில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இவர் ஒருவரே தெரிவு செய்யப்பட்டுள்ளார். என்பது விசேட அம்சமாகும். அத்துடன் மன்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தினால் 2023 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட சர்வதேச மகளீர் தினத்தில் இவருக்கு 'மாண்புறு மங்கை' எனும் விருதும் வழங்கப்பட்டது.
பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சிறப்புப் பட்டதாரியான இவர் தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டமேற் கல்வி டிப்ளோமா பாடநெறியையும் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் கல்வியில் முதுமாணிப் பட்டத்தையும் பூர்த்தி செய்து கொண்டார். ஆரம்பத்தில் 14 வருடங்கள் கலைப்பட்டதாரி ஆசிரியராகவும் அதன்பின்னர் 14 வருடங்கள் மட்/அரசினர் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராகவும், தொடர்ந்து மட்/ ஆசிரியர் மத்திய நிலைய வளவாளராகவும் கடமையாற்றியவர்.
சமய சமுக பணிகளில் ஈடுபாடு கொண்ட இவர் 2020 ஆம் ஆண்டு அகில இலங்கை சைவப்புலவர் பட்டதாரிகள் சங்கத்தில் 'சைவப்புலவர்'எனும் பட்டத்தினையும் 2025 ஆம் ஆண்டு இந்து சமய கலாசார அலுவவல்கள் திணைக்களம் வழங்கிய 'சைவமணி' பட்டத்தினையும் அதே ஆண்டில் தமிழ் நாடு கைலை அறக்கட்டளை வழங்கிய 'சைவசித்தாந்த சுடர்' பட்டத்தினையும் பெற்றுக்கொண்டவர். இவர் அகில இலங்கை சமாதான நீதவான் என்பதுடன்; மட்டக்களப்பு நூற்றாண்டு நட்சத்திரங்கள் அரிமாக் கழகத்தின் ஸ்தாபக உறுப்பினரும் மட்டக்களப்பு தமிழ்ச் சங்க ஆயுட்கால உறுப்பினரும் ஆவார்.
















