மறைந்த மைகேல் ஜாக்சன் மீது சகோதரர்கள் நால்வர் பாலியல் துஷ்பிரயோகம் குற்றச்சாட்டு !



மறைந்த பாப் இசை நட்சத்திரமான மைகேல் ஜாக்சன் மீது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் மனிதக் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

எட்வர்ட் காஸ்சியோ, டொமினிக் காஸ்சியோ, ஆல்டோ காஸ்சியோ மற்றும் மேரி-நிக்கோல் போர்டே ஆகியோர் சிறுவர்களாக இருந்த காலத்தில் ஜாக்சன் தங்களை பல ஆண்டுகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஜாக்சன் தனது புகழ், செல்வாக்கு மற்றும் செல்வத்தை பயன்படுத்தி குடும்பத்தின் நம்பிக்கையை பெற்ற பின்னர் இந்த துஷ்பிரயோகங்கள் நடந்ததாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் கலிபோர்னியாவில் உள்ள நெவர்லாந்து ராஞ்ச், மேலும் வெளிநாட்டு பயணங்களின் போது ஸ்விட்சர்லாந்தில் எலிசபெத் டெய்லர் இல்லம் மற்றும் இங்கிலாந்தில் எல்டன் ஜான் இல்லம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகளை பெரியவர்களிடமிருந்து தனிமைப்படுத்தி பரிசுகள் மற்றும் பிற சலுகைகள் வழங்கி அவர்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் வழக்கில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 2019 ஆம் ஆண்டு ஹெச்.பி.ஓ வெளியிட்ட ‘Leaving Neverland’ ஆவணப்படம் வெளியாகிய பின்னர், ஜாக்சனின் சொத்து நிர்வாகம் இவர்களுக்கு மௌனம் காக்க ஒப்பந்தம் செய்ய ஆண்டுக்கு சுமார் 690,000 அமெரிக்க டாலர் வழங்க முன்வந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மைகேல் ஜாக்சன் 2009 ஆம் ஆண்டு 50 வயதில் மரணமடைந்தார். வாழ்நாளில் அவர் மீது முன்வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வந்ததுடன், 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கில் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், ஜாக்சனின் சொத்து நிர்வாகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள் இந்த குற்றச்சாட்டுகளை பணத்தைப் பெற முயற்சி மட்டுமே என மறுத்துள்ளனர்.