ஆதி திராவிட தமிழர்கள் வழிபட்ட கரடியானாறு குசலானமலை முருகன் ஆலய வருடாந்த திருவிழா


(கல்லடியூர் ஆனந்த்)

கிழக்கிலங்கையின் அனுராதபுரக் காலத்தில் ஆதி திராவிட தழிழர்களால் வழிபட்ட குசலானமலை முருகன் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் 25.08.2019 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி 30.08.2019 வெள்ளிக்கிழமை தீர்த்தோற்சவத்துடன் முடிவடையவிருக்கின்றது.

இவ்வாலயம் மட்டக்களப்பின் கரடியனாறு பதுளை வீதியிலுள்ள கரடியனாறுச் சந்தியிலிருந்து வடக்குப்புறமாக சுமார் ஒன்றரைக் கிலோ மீற்றர் தூரத்தில் அழகிய வயற்பிரதேசத்தில் தொடர் மலைகள் உள்ளடக்கிய மலைக் குன்றிலே அமைந்துள்ளது. இவ்வாலயம் சுமார் 2000 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் (அனுராதபுரக் காலம்) அமைக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றது. இவ்வாலயம் அமைந்துள்ள மலைப் பகுதியில் அரசர்கள் அரசாண்டமைக்கான சான்றுப் பொருட்களை இன்றும் காணலாம். இதற்குச் சான்றாக கற்தூண்கள், அனுராதபுரக் காலக் கற்கள், அரச மாளிகைகள் இருந்தமைக்கான கட்டிட எச்சங்கள் போன்றவை காணப்படுகின்றது. நாக வழிபாடும் இங்கே இருந்துள்ளமையைக் கண்டறியக் கூடியதாய் உள்ளது.

பிராமிக் கல் வெட்டுக்கள் பல இடங்களில் காணப்படுகின்றது. இவை அனைத்தும் ஆராச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது.
மலைக் குன்றில் வற்றாத தீர்த்தக்கேணி ஒன்று உள்ளது. இதற்குரிய நீர் எங்கிருந்து வரட்சியான காலத்திலும் கிடைக்கின்றது என்பது புரியாத புதிராகவே இன்றும் காணக் கிடக்கின்றது. இவ்வாலயத்தின் தல விருட்சமாக கல்லால மரம் மலையில் செழித்து வளர்ந்து நிற்கின்றது. இங்குள்ளவர்களின் கூற்றுப்படி இம்மலையை இன்றும் பூத கணங்கள் ஆட்சி செய்வதாகக் கூறுகின்றார்கள். இதற்கு மிக அண்மையில் கரடியன்; குளம் எனும் பெயரில் குளம் ஒன்றும் காணப்படுகின்றது.


இதன் தொண்மையை அறிந்து இம்மலைப் பிரதேசத்தை தொல்லியல் திணைக்களம் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது. இதனால் இதனை நிர்வகிக்கும் கரடியானாறு பொது மக்கள் எந்தவிதமான நிர்மாண அபிவிருத்திப் பணியையும் செய்ய முடியாத நிலையில் உள்ளார்கள்.

இவ்வாண்டு 25.08.2019 கொடியேற்றத் திருவிழாவை சு. நாகராசா சீ. மேகநாதன் குடும்பமும் 26.08.2019 இரண்டாம் நாள் திருவிழாவை கரடியன்குள பொது மக்களும் அமரர் வீரக்குட்டி குடும்பமும் 27.08.2019 மூன்றாம் நாள் திருவிழாவை வே. பொன்னுத்துரை,  செ. அழகுதுரை,  ஜெ. மயூரன் குடும்பமும் 28.08.2019 நான்காம் நாள் திருவிழாவை செங்கலடி மக்களும், வர்த்தகர்களும் அமரர் சௌந்தரராஜன் குடும்பமும், 29.08.2019 ஐந்தாம் நாள் திருவிழாவை கரடியனாறு பொது மக்களும், வே. பத்மநாதன் குடும்பமும் 30.08.2019 ஆறாம் நாள் தீர்த்தோற்சவப் பெருவிழாவை கரடியனாறு பொது மக்களும் மிகச் சிறப்பான முறையில் செய்வதற்கு எல்லாம் வல்ல குசலானமலை10 குமரன் அருள்பாலித்துள்ளார்.

இவ்வாலயத்தின் பிரதம குருவாகவிருந்து முருகப் பெருமானுக்கு பணிவிடை செய்பவர் சக்தி பூஜா துரந்தர் ஈசான வேத ஸ்த்தோத்திர ஆகம பூசகர் ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ க.கிருபாகரக் குருக்கள் ஆவார். திருவிழாக்காலக் குருக்களாக சிவஸ்ரீ அ. ராமராஜ சர்மா அவர்களும் சிவஸ்ரீ பு. ரவிசர்மா அவர்களும் எம்பெருமானுக்கு பணியாற்றுகின்றார்கள். இவ்வாலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் விசேட தினங்களிலும் பூசைகள் தொடர்ந்து நடைபெறுகின்றது.

இவ்வாலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு வழமைபோன்று இம்முறையும் கல்லடி ஸ்ரீ வேலாயுத சுவாமி ஆலயத்திருந்தும், வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து பாத யாத்திரை மேற்கொள்ள ஒழுங்குகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது. கல்லடி வேலாயுத சுவாமி ஆலயத்திருந்து ஆரம்பிக்கும் பாத யாத்திரையை கல்லடி கதிர்காம யாத்திரிகர் சமூகத்தினால் 25.08.2019 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகவிருக்கின்றது. இதில் கலந்து கொள்ளும் அடியார்கள் கல்லடி ஸ்ரீ வேலாயுத சுவாமி ஆலயம் வந்து இக்குழுவினருடன் இணைந்து கொள்ளலாம்.

இக்குழுவினரும் வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து வருகை தரும் பாத யாத்திரைக் குழுவினரும்,  செங்கலடி பொது மக்கள் வர்த்தக சங்கத்தினருடன் இணைந்து செங்கலடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து குசலான மலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கான கொடிச்சீலையுடன் பாத யாத்திரை மேற் கொண்டு ஆலயம் சென்றடையவிருக்கின்றார்கள்.