கடந்த வாரம் மட்டக்களப்பில் நடந்தது என்ன ? அண்மைக்கால செயற்பாடுகள் ஆரோக்கியமானதா?


ஆர்.சயனொளிபவன் & TEAM 
  • இந்து மயானத்தில் முஸ்லீம் பயங்கரவாதியின்  உடற்பாகங்கள்
  • அரச அதிபர் 
  • மாநகர சபையின் செயற்பாடு 
  • மாவட்டத்தில் உள்ள மூன்று தமிழ் பாராளுமன்ற  உறுப்பினர்களின்…...
  • அதிகரித்து வரும் ஆர்ப்பாட்ட அரசியல் 
  • ஆர்ப்பாட்ட அரசியல் மூலம் எதனை சாதிக்கமுடிந்தது அல்லது சாதிக்கமுடியும்?
  •  பொதுமக்கள், அரசஅதிகாரிகள், அரசியல்வாதிகளை அச்சுறுத்தும்அரசியல்
  • மீண்டும் பழைய நிலைக்கு செல்லும் கிழக்கின் அரசியல் கட்சி

இந்து மயானத்தில் முஸ்லீம் பயங்கரவாதியின்  உடற்பாகங்கள்


கடந்த வாரம் 26.08.19 திங்கள் அன்று மட்டக்களப்பு மாவட்டத்தில்  உள்ள கள்ளியங்காட்டு இந்து மயணத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தில்  மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதலை நடத்திய முஸ்லீம் தற்கொலை தாரியின் உடற்பாகங்களை அடக்கம்செய்த செயலானது மிகவும் மனம் வருந்ததக்க விடயமாகும் மேலும் இதற்கு காரணமாக இருந்தவர்களை கண்டறியவேண்டிய கடமைப்பாடும் பொறுப்பும் மாவட்ட நிர்வாகத்திற்கு உள்ளது என்பதையும் தெளிவாக பதிவுசெய்கின்றோம்.

அரச அதிபர்



மாவட்ட அரச அதிபர்   மாணிக்கம் உதயகுமார் அவர்கள் 28.08.19 புதன்கிழமை அன்று தான் நடாத்திய செய்தியாளர் ஒன்று கூடலில் கூறிய விடயங்களில் இருந்து 

26.08.19 திங்கள் அன்று தமக்கு நீதிமன்றத்தின் முடிவான பயங்கரவாதியின் உடற் பாகங்களை குறுகியகாலப்பகுதிக்குள் புதைக்கவேண்டிய கட்டளை தமக்கு மாவட்ட அரச அதிபர் என்ற ரீதியில் வழங்கப்பட்டதாகவும் தனக்கு வழங்கப்பட்ட உத்தரவை தன்னுடைய உதவியாளர்களின் உதவியுடன் 26.08.19 திங்கள் அன்றே தொலைநகல் ஊடாக மாநகர ஆணையாளர் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் அவர்களுக்கும் அறிவித்ததாகவும் தெரிவித்தார் .

 மேலும் அந்த ஒன்று கூடலிலே பயங்கரவாதியின் உடற் பாகங்கள் அடக்கம் செய்வதற்குரிய காலம் மற்றும் இடம் சம்பந்தமாக தனக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் மேலும் ஒரு முஸ்லீம் பயங்கரவாதியின் உடற் பாகங்களை கள்ளியம்காட்டு இந்து மயானத்தில் அடக்கம் செய்ததனை தாம் வன்மையாக கண்டிப்பதோடு தான் இந்த உடற் பாகங்களை கள்ளியங்காட்டு இந்து மயானத்தில் இருந்து அகற்றுவதற்காக நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தெரிவித்தார் 

அரச அதிபரின் முயற்சியால்  நீதி மன்றத்தை நாடி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் நீதி மன்றமானது  30.08.19 வெள்ளிக்கிழமை அன்று  பயங்கரவாதியின்  உடற்பாகங்கள் கள்ளியங்காட்டு இந்து மயானத்தில் இருந்து அகற்றப்படவேண்டும் என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைய திங்கள் கிழமை ( 02.09.19 ) அன்று தற்கொலை தாரியின் உடற்பாகங்கள் கள்ளியங்காட்டு இந்து மயானத்தில் இருந்து மீளப்பெறப்பட்டுள்ளது.  

மேலும் அரச அதிபரின்  முயற்சியால் இப் பிரச்சினைக்கு சுமூகமான முடிவு காணப்பட்டுள்ளது  என்பதும்  பாராட்ட தக்கவிடயமாகும். 

மாவட்டத்தில் உள்ள மூன்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் 

மட்டக்களப்பு மாவட்டத்தில்  உள்ள மூன்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில்  இருவர் இந்துக்களாகவும் உள்ளனர். அந்த இரு இந்துக்களிலும் ஒருவர் மதகுரு போன்றவகையிலும் அல்லது இந்து மதத்தை பாதுகாக்கும்  ஒருவராகவும் மற்றைய பாராளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியை பிரதிநித்துவபடுத்தும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தும் இவர்கள்  இருவரும் இந்த விடயத்தில் உறங்கிய நிலையில் உள்ளதும் இங்குள்ள  இந்துக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இவற்றுள் மூன்றாவது உறுப்பினரா உள்ளவர் ஒரு மெதடிஸ்த கிறிஸ்தவராக இருந்தும் அவர் தனது பாணியில் அது புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை சம்பந்தமான விடயமா இருந்தாலும் சரி  , சட்ட விரோதமாக மண் அகலும் விடயமாக இருந்தாலும் சரி  , முன்னாள் ஆளுநர் சம்பந்தமான விடயமாக இருந்தாலும் சரி அத்தோடு இந்த விடயத்திலும் தனக்கு உரிய முறையில் இம்முறையும்  பெருந்தொகையான இளைஞர்களோடு சேர்ந்து கல்லடிப்பாலத்தில் பாரிய வீதி மறியல் போராட்டத்தை நிகழ்த்தியுள்ளார்.  இவைதான் இவர்கள் தரப்பில் தமக்கு வாக்களித்த மக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும்.

மாநகர சபையின் செயற்பாடு


மாநகர சபையை பொறுத்தளவில் 27.08.19 செவ்வாய் அன்று இரவு வேளை மாநகர முதல்வர்   தி .சரவணபவன் அவர்கள் ஊடகங்களுக்கு வழங்கிய ஒரு செவ்வியில் தமக்கோ அல்லது தமது சபைக்கோ தெரியப்படுத்தாத  வகையிலும் மற்றும் அனுமதி பெறாத நிலையிலும்  பயங்கரவாதியின் உடற் பாகங்களை  அடக்கம் செய்வதற்கு மாநகர சபைக்கு சொந்தமான கள்ளியங்காட்டு மயானத்தை பயன்படுத்தியது  ஏற்றுகொள்ளமுடியாத ஒரு விடயமாகும் என்றும்  . மேலும் தாமும்  தமது சபை அங்கத்தவர்களை கூட்டி இந்த அத்துமீறிய செயலுக்கு எதிராக என்ன செய்வது என்று முடிவு எடுப்பதாகவும் கூறியதோடு 29.08.19 வியாழன் அன்று தனது சபை அங்கத்தவர்களை  கூட்டி மாநகர  சபையால் இச் செயலுக்கு  எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு மட்டுமல்லாது  நீதி மன்றத்தை நாடி குறிப்பிட்ட உடல் பாகங்களை அகற்றுவதற்காக நடவடிக்கை  எடுப்பது என்றும் தீர்மானமும் எடுக்கப்பட்டது .  மாநகர சபையின் முயற்சி இவ்வாறு இருந்தது. 


அதிகரித்து வரும் ஆர்ப்பாட்ட அரசியல்



மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்  காலமாக நடைபெறும் விரும்பத்தகாத சம்பவங்கள் இம்மாவட்டத்தில் வாழும் சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கையை குழப்புவது மட்டுமல்லாது தமது நோக்கத்தை அடைவதற்காக ஜனநாயக ரீதியான போராட்டம் என்று கூறிக்கொண்டு பெருந்தொகையான இளைஞர்களை ஜனநாயகத்திற்கு முரணான வகையில் வழி  நடாத்தும்  எந்தவொருசெயலும் வரவேற்கத்தக்கதல்ல. 

கடந்த செவ்வாய் இரவு கல்லடி பாலத்தை மறைத்து நடாத்தப்பட்ட பாரிய இளைஞர் போராட்டம் தமது சேவைக் காலத்தில் நேர்மையுடனும் செயற்திறனோடும்  மற்றும்  மாவட்ட மக்களின் நலன்கருதி தமது முழுநேரத்தையும் செலவு செய்யும் மண்ணின் மகிந்தர்களாகிய அரச அதிகாரிகளையும் அச்சுறுத்தும் நிகழ்வுகளாக  உருவெடுத்ததினையும் காணக்கூடியதாகவும் இருந்தது . அந்த வகையிலேயே  கடந்த செவ்வாய் இரவு மட்டக்களப்பு அரச அதிபருக்கு எதிராக அரங்கேறிய நிகழ்வும் அமைந்துள்ளது. 

தமிழ் மக்களை பொறுத்தளவில் ஆர்ப்பாட்ட அரசியலால் சாதித்தது ஒன்றுமேயில்லை அதேவேளை இவ்வாறு இளைஞர்களை தூண்டிவிடுவதை எமது தமிழ் சமூகம் 1970 யில் இருந்து பார்த்த ஒருவிடயமுமாகும்  மேலும் இவ்வாறான  ஆர்பாட்டங்களின் மூலம் பொதுமக்களுக்கு எதாவது நன்மை பயக்கின்றதா   என்று பார்ப்போமானால்   அறவே இல்லை என்றுதான் கூறவேண்டும் அதேவேளை இம் மக்களை பயன்படுத்தும் அரசியல் வாதிகள் எந்த ஒரு வகையிலும் பாதிக்கப்படுவதே இல்லை   மாறாக இவ் அரசியல் வாதிகளின் இருப்பையும் மற்றும் தமது சுகபோக வாழ்க்கையையும் தொடர்வதற்குமான     ஒரு உக்தியுமாகவே இருக்கின்றது   . மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்த அளவில் இவ் வகையான கலாசாரம் தொடர்ந்தும் தொடர்வதற்கான அறிகுறிகளே தற்போது தென்படுகின்றது . 


ஆர்ப்பாட்ட அரசியல் மூலம் எதனை சாதிக்கமுடிந்தது அல்லது சாதிக்கமுடியும்?



கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த பொது மக்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவில் பாதிக்கக்கூடியவகையில் கல்லடிபாலத்தில்  மேற்கொள்ளப்பட்ட வீதி மறியல்  போராட்டம் தீர்வை தந்ததா அல்லது தீர்வை தரும் ஒரே வழியா?
  • குறிப்பாக நல்லாட்சியில் எமது நாட்டில் உள்ள சகல மக்களுக்கும் முற்று முழுதாக நன்மை பயப்பிற்கும் வகையில் கிடைத்த இரு முக்கிய அம்சங்கள் நீதி துறையும் ஜனநாயக பொறிமுறையும் தான் என்று குறிப்பிட்டு கூறக்குடியதாக உள்ளது

நீதி துறையை பொறுத்தளவில்  

    ஜனாதிபதி மைத்திரி  இன்றும் எமது நாட்டின் நிறைவேற்று  அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்தும் கடந்த 26 அக்டோபர் 18 யில் அவரால் மேற்கொள்ளப்பட்ட பாராளுமன்றத்தை கலைக்கும் முயற்சியிற்கு எதிராக  மேல் நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பனது நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும் நீதியானா நீதிமன்ற  தீர்ப்புக்கு கட்டுப்பட்டேயாகவேண்டும் என்பதனை தெளிவாக காட்டியுள்ளது. நீதி மன்றத்தின்  இவ் முடிவானது  எமது நாட்டில்   நீதி துறையானது  100% மும் சுதந்திரத்துடன் இயங்குவதை மீண்டும் ஒரு முறை தெளிவாக காட்டியுள்ளது. இதே போல் தான் ஞானசார தேரரின் விடயத்திலும் நீதி மன்றம் நடந்துள்ளதையும் சுட்டிக்காட்ட .  விரும்புகின்றோம்.  

    நல்லாட்சியில் நீதி துறையும் ஜனநாயகமும் முற்று முழுதாகவும் இயங்கும் இத் தருணத்தில் எமது நாட்டில் நீதிக்கு புறம்பாக ஒரு முடிவு எடுக்கப்படும் போது  அவ் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தின் ஊடாக வெற்றிபெறமுடியும் என்பதில் நாமும்  தற்போது முழு நம்பிக்கை கொண்டுள்ளோம், அந்த வகையிலேயே நீதிமன்றம் விரைவானதும் நீதியானதுமான தீர்ப்பை கள்ளியங்காட்டு மயான விடயத்திலும்   02.09.19 அன்றும்  வழங்கியுள்ளது.   

    இவ்வாறு நீதிமன்றங்களினால் வழங்கப்படும்  தீர்ப்புகளானது  மீண்டும் ஒரு முறை எமது நாட்டில் நீதீயான  ஒரு பொறிமுறை உள்ளது என்றும் மேலும் அப் பொறிமுறையின் ஊடாக அமைதியான முறையில் நீதியை பெறமுடியும் என்பதனையும்  உணர்த்தியுள்ளது.  இந்த வகையில் மக்களுக்கு தூய்மையான முறையில் சேவை செய்யவெண்டும்  என சிந்திக்கும் அரசியல் வாதிகள் தமது மக்களுக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்படும் போதெல்லாம் இப் பொறிமுறையை கடைபுடிப்பதன் மூலம் சரியான தீர்வை பெறமுடியும் என்பதே எமது உறுதியான  கருத்துமாகும்  . 

    மேலும் எமது சகோதர சமூகமும் அவர்களது அரசியலும் அமைதியான ராஜதந்திர முறையில் பல சாதனைகளை தொடர்ந்தும் படைத்துவரும் வேளையில் தமிழ் சமூகமும் அதனுடைய அரசியலும் கடந்த 5 சகாப்தங்களுக்கு முன்பு ஆரம்பித்த  வெற்றியளிக்காத ஆர்ப்பாட்ட அரசியலையே தொடர்வது தமிழ் சமூகத்தை பொறுத்தளவில் அவர்களை மேலும் மேலும் பின் நிலைக்கு தள்ளும் ஒரு துர்பாக்கியமான செயல்  முறையாகும். 

    ஆர்ப்பாட்ட அரசியல் மூலம் அரசியல்வாதிகள் தம்மை நம்பும்  மக்களை உணர்சிவசப்படவைத்து அதன் மூலம் தமது  செல்வாக்கை பெருக்கும் ஒரு யுக்தியும்மாகும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை.

    பொதுமக்கள், அரசஅதிகாரிகள், அரசியல்வாதிகளை அச்சுறுத்தும் அரசியல்

    இச் செயலைவிட தற்போதைய நவீனகாலத்தில் மற்றுமோர் அநாகரிகமான நாகரீகம் உருவெடுப்பதையும் எம்மால் உணரக்கூடியதாவும் இருக்கின்றது அதாவது முகநூல் மற்றும் இணையத்தளம்களில் மிகவும் தர குறைவான முறையிலும் மற்றும் கற்பனையே பண்ணமுடியாத அருவருப்பான சொற்பிரயோகங்களை உபயோகிப்பதும் இந்  நடவடிக்கையானது  ஒரு மிலேச்சத்தனமான செயலாகவே கருதவேண்டியுள்ளது. நவீன ஜனநாயக சமுதாயத்தில் பேச்சு சுதந்திரம் இருக்கின்றது என்று கூறிக்கொண்டு இவ்வாறான சொற்பிரயோகங்களை பாவிப்பது அவர்களின் தன்மையையும் மேலும் அவர்களின் பின்னணியையும்  தெளிவாக தென்படுத்துகின்றது. இத்தகைய செயற்பாடுகள் வரவேற்கதக்கதல்ல 


    அண்மைய காலமாக இப்பகுதியில் உள்ள ஒரு அரசியல் வாதியை பொறுத்தளவில் ஒரு வகையான ஆர்ப்பாட்ட அரசியல் மூலமும், அத்தோடு மக்களுக்கு பீதியை தரக்கூடிய வகையில் தனக்கென ஒரு நிறப்படையை அமைத்து அப்படையின் பிரசன்மமோ அந்த அரசியல் வாதியின் கருத்துக்கு மாறான கருத்துக்களை கொண்டவர்களை அச்சுறுத்தும் பாணியிலும்  அதேபோல் இவ் அரசியல் வாதிக்கு இணங்காத அரச அதிகாரிகள்  பயமுறுத்தமுட்படுவதையும் குறிப்பிட்ட அரசியல் வாதி  மக்கள் பிரதிநிதியாக தெரிவுசெய்யப்பட்ட காலத்தில் இருந்தே  காணக்கூடியதுமான  ஒரு விடயமுமாக  உள்ளது.  இதனைவிட மேலும் இன்னொரு குழுவை அமைத்து அக்குழுவோ  முகநூல் மற்றும் இணைய தளம்களின் ஊடாக அவர்களுக்கு ஒவ்வாத கருத்துக்களை வெளியிடும் பொதுமக்கள், அரச அதிகாரிகள். மற்றும் அரசியல் வாதிகளை மிகவும் இழிவான சொற்பிரயோகம்களின் ஊடாக தாக்குதல்களை நடத்துவதையும் காணக்கூடியதாகவும் உள்ளது . இச் செயல்கள் யாவும் தனி மனிதர்களை ஒரு வகையில் அச்சுறுத்துவது போன்றும்  மற்றும் முற்று முழுதுமாக ஜனநாயத்திற்கும் விரோதமுமான செயலுமாகும். இவை யாவும் சாதாரண மக்களுக்கு பீதியையும் ஏற்படுத்துவது மட்டுமல்லாது ஒரு அசாதாரண சூழ் நிலையையும் உருவாக்கமுற்படுகின்றது. இவ்வாறான செயற்பட்டுகளில் ஈடுபட்ட அரசியல் வாதிகள் சரித்திரத்தில் ஜனநாயக ரீதியாக வெற்றிபெற்றதே கிடையாது, 


    மீண்டும் பழைய நிலைக்கு செல்லும் கிழக்கின் அரசியல் கட்சி



    கடந்த நான்கு வருடகாலமாக அமைதியாக இருந்த மற்றுமோர் அரசியல் கட்சியும்  மேற்குறிப்பிட்ட  அரசியல் வாதிபோல் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முற்படுகின்றனர். இவர்களுடைய ஆர்பாட்டங்களும் சாதாரண மக்களையும், அத்தோடு நேர்மையான அரச அதிகாரிகள் தமது செயற்பாட்டை நியாயமான முறையில் முன்னெடுப்பதற்கும்  அச்சுறுத்தலாகவும் உள்ள அதேவேளையில் மேலும் அதேபோல் ஜனநாயக முறையில் இயங்க முயலும் கட்டமைப்புகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்துவதையும் காணக்கூடியதாகவும் உள்ளது. இக் கட்சியானது கடந்த காலத்தில் மக்களுக்கு பயனளிக்கும் பல திட்டங்களை முன்னெடுத்து சென்றிருந்தாலும் இவர்களுடைய கடந்த கால   செயற்பட்டால் மக்கள் இவர்களை நிராகரித்தும் இருந்தனர் . தற்போது குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தமிழ் மக்களுக்குள்  அதிதிருப்தி அதிகரித்து வரும் இவ் வேளையில் தமது செல்வாக்கை கூட்டுவதற்குரிய முயற்சிகளில் இறங்காமல் மாறாக இவர்களுடைய ஆர்ப்பாட்ட ஜனநாயகமாக ஆரம்பித்துள்ள  செயற்பாடுகள் மூலம்   சாதாரண தமிழ்  மக்களுக்கு  மீண்டும் ஒரு முறை தமது கடந்தகால மறு  பக்கத்தை ஞாபகப்படுத்தமுற்படுகின்றர்களோ என்ற ஐயப்பாடும் எழ  ஆரம்பித்துள்ளது . 
    கடந்த காலத்தில் இக் கட்சியானது பல நன்மைபயக்கும்   முயற்சிகளை மக்களுக்கு செய்திருந்தாலும் தமது தற்போதைய போக்கை மாற்றாவிடில் மீண்டும் ஒரு முறை மக்களால் நிராகரிக்கப்படக்கூடிய நிலையே உருவாகும்.

    கிழக்கில் உள்ள சாதாரண தமிழ் மக்களை பொறுத்த அளவில் இவ்வாறான அதிகரித்துவரும் ஆர்பாட்டங்கள் மற்றும் ஜனநாயக விரோத செயல்களால் விரக்தியடைந்த நிலையிலேயே உள்ளனர். சாதாரண மக்களை பொறுத்த அளவில் அசம்பாவிதமும்  ஆர்பாட்டமும்மற்ற  அமைதியான வாழ்க்கைமுறையையும் அதேவேளை மக்கள் எதிர்பாக்கின்ற அரசியல் வாதிகள் மக்களுக்காக 365 நாட்களுக்கும் சேவை செய்யக்கூடியவர்களாகவும் செயற்திறனுள்ள வகையில் நன்மைபயப்பிக்கக்கூடிய அபிவிருத்தி திட்டங்களை மக்களுக்காக கொண்டுவரக்கூடிய நபர்களை கொண்ட அமைப்பையே விரும்புகின்றனர்.
     இதை விடுத்து ஆடவடித்தன அரசியல் செய்யமுற்படும் அரசியல் வாதிகளோ அல்லது அரசியல் கட்சிகளோ வெற்றிபெற்ற சரித்திரம் கிடையவே கிடையாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் கடந்த ஆட்சியும் எமது கருத்தை உறுதிசெய்யும் வகையில் நல்லதோர்  உதாரணமாக உள்ளது.

    ஆர்.சயனொளிபவன் & TEAM 
    BATTINEWS.COM