இன்று நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அ.தர்சினி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, சந்தேக நபர்களிடமிருந்து நகைகளைக் கொள்வனவு செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு நகைக்கடை உரிமையாளர்களையும் பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். ஏனைய நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க அவர் ஆணையிட்டார்.
கடந்த மாதம் 20ஆம் திகதி, கொக்கட்டிச்சோலை - நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து வவுணதீவு, கொத்தியாபுலை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் தாய் ஒருவர் உயிருடனும், ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் சடலமாகவும் மீட்கப்பட்டனர். அத்துடன், அந்த இளம் தாயின் 3 வயது சிறுமி கொத்தியாபுலை வயல் பகுதியில் உயிருடன் மீட்கப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் வர்ண ஜயசுந்தரவின் வழிகாட்டலில், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் கண்காணிப்பில், கிழக்கு மாகாண பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்த விசாரணைகளின் அடிப்படையில், வவுணதீவு காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண், அவரது 34 வயதுடைய கணவர், 22 வயதுடைய தம்பி மற்றும் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை வாங்கிய ஊறணி மற்றும் திருகோணமலை வீதியைச் சேர்ந்த இரு நகைக்கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், மயக்க மருந்துகளைப் பெற்றுக்கொடுத்த முச்சக்கர வண்டி சாரதி மற்றும் மருந்துகளை விநியோகித்தவர் ஆகியோரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இவர்களில் மயக்க மருந்துகளைப் பெற்றுக்கொடுத்த முச்சக்கர வண்டி சாரதி ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் இரண்டு நகைக்கடை உரிமையாளர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏனைய சந்தேக நபர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.










.jpg)


