மக்களின் சுமையைக் குறைக்க நட்டத்திலும் சலுகை விலையில் எரிவாயு வழங்கப்படுகிறது - அமைச்சர் விஜித்த ஹேரத்


உலகச் சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை சடுதியாக அதிகரித்துள்ள போதிலும், உள்நாட்டு நுகர்வோர் மீதான சுமையைக் குறைக்க அரசாங்கம் பெரும் நட்டத்தைத் தாங்கிக்கொண்டு சலுகை விலையில் எரிவாயுவை வழங்கி வருகிறது. 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை உண்மையில் 985 ரூபாவால் அதிகரித்திருக்க வேண்டிய நிலையில், மக்களின் நலன் கருதி அதனை 775 ரூபாவாக மட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பதில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (7) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகச் சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதே தற்போதைய விலை அதிகரிப்புக்கு முதன்மையான காரணமாகும். சவுதி அராம்கோ விலை குறியீட்டின்படி, கடந்த மார்ச் மாதம் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயுவின் விலை 541.25 டொலராக இருந்தது. ஆனால், ஏப்ரல் மாதத்தில் இது 787.50 டொலராக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் ஆகிய இரு நிறுவனங்களையுமே பாதித்துள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் தரவுகளின்படி, ஒரு எரிவாயு சிலிண்டரின் நேரடி செலவு சுமார் 1,985 ரூபாயால் அதிகரித்துள்ளது. இருப்பினும், பண்டிகைக் காலம் மற்றும் மக்களின் வாழ்க்கைச் செலவுச் சுமையைக் கருத்தில் கொண்டு, முழுமையான செலவையும் மக்கள் மீது சுமத்தாமல் இருக்க அரசாங்கம் தீர்மானித்தது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 775 ரூபாயுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் செலவுகளின் அடிப்படையில் 985 ரூபாவால் அதிகரித்திருக்க வேண்டும். எவ்வாறிருப்பினும் அரச நிறுவனமான லிட்ரோ பெரும் நட்டத்தைத் தாங்கிக்கொண்டு இந்தச் சலுகையை வழங்குகிறது. ஆனால், லாஃப்ஸ் ஒரு தனியார் நிறுவனம் என்பதால், அவர்கள் தங்களின் செலவுகளுக்கு ஏற்ப விலையைத் தீர்மானிக்கிறார்கள்.

இலங்கையில் எரிவாயு இருப்பு வைப்பதற்கான சேமிப்பு வசதிகள் போதியளவு இல்லை என்பதும் ஒரு பெரிய சவாலாக உள்ளது. தற்போது ஜியோ கேஸ் நிறுவனம் மூலம் அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது.

பெரிய கப்பல்களில் கொண்டு வரப்படும் எரிவாயு, முதலில் மாலைதீவில் உள்ள சேமிப்பு நிலையங்களில் இறக்கப்பட்டு, அங்கிருந்து சிறிய கப்பல்கள் மூலம் 3,900 மெட்ரிக் தொன் என்ற அளவில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை இலங்கைக்குக் கொண்டு வரப்படுகிறது.

இவ்வாறு மாலைதீவில் சேமித்து மீண்டும் கொண்டு வருவதால் போக்குவரத்து மற்றும் சேமிப்புக் கட்டணங்கள் கூடுதலாகச் செலவாகின்றன.

இலங்கையிலேயே பெரிய அளவிலான சேமிப்பு வசதிகள் இருந்தால் இந்தச் செலவைக் குறைக்க முடியும். இதற்காக எதிர்காலத்தில் பெரிய சேமிப்பு நிலையங்களை அமைக்கும் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அம்பாந்தோட்டையில் உள்ள லாஃப்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சேமிப்பு நிலையம் ஒரு தனியார் சொத்தாகும். அந்த நிறுவனம் உடன்படிக்கையின்படி 80மூ எரிவாயுவை ஏற்றுமதி செய்யவும், 20மூ உள்நாட்டுச் சந்தைக்கு வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அவசர நிலை ஏற்பட்டால் மட்டுமே அதை அரசாங்கம் பொறுப்பேற்கும். தற்போது அந்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் மூலம் இணக்கப்பாடுகளை எட்ட முயற்சிக்கின்றோம்.

அத்துடன், ஒரு நிறுவனத்தின் சிலிண்டரில் மற்றொரு நிறுவனம் எரிவாயுவை நிரப்புவதில் உள்ள பாதுகாப்பு மற்றும் சட்டச் சிக்கல்கள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது என்றார்