சாதனை படைத்த செங்கலடி மத்திய கல்லூரி: பல்கலைக்கழகம் தெரிவான 45 மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு!


(செங்கலடி நிருபர் சுபஜன்)

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலையத்திற்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரி பாடசாலையில் இருந்து இம்முறை உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 45 மாணவர்களைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

 இந்தச் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்வு இன்று காலை மிக விமரிசையாக நடைபெற்றது.

இன்று காலை செங்கலடி சந்தி பிரதான வீதியில் ஆரம்பமான இந்த வரவேற்பு ஊர்வலம், அப்பகுதியையே விழாக்கோலம் பூணச் செய்தது. பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகிய 45 மாணவர்களுக்கும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அதிதிகள் சூழ பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய இசை முழங்க மாணவர்கள் பேரணியாக பாடசாலைக்கு அழைத்ச் செல்லப்பட்டனர்.

தமது பிள்ளைகளின் இந்த உன்னத வெற்றியைக் கண்டு பெற்றோர்கள் நெகிழ்ச்சியுடன் இந்தப் பேரணியில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலையின் அதிபர் திரு. க.சுவர்ணேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்குடா கல்வி வலையப் பணிப்பாளர் திரு. ரீ.அனந்ரூபன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் கல்குடா கல்வி வலையப் பிரதிப்பணிப்பாளர்கள் , வலையக்கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சாதனை மாணவர்களை வாழ்த்தினர்.

இம்முறை வெளியாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி, செங்கலடி மத்திய கல்லூரி அனைத்துத் துறைகளிலும் சமச்சீரான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

கலை, வர்த்தகம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் தொழிநுட்பவியல் ஆகிய அனைத்துத் துறைகளிலிருந்தும் மொத்தமாக 45 மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளமை பாடசாலைக்கும், அப் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.

இந்த வெற்றியானது ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, மாணவர்களின் கடின உழைப்பு மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என இதன்போது உரையாற்றிய கல்குடா கல்வி வலையப் பணிப்பாளர் திரு. ரீ.அனந்ரூபன் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும் நிகழ்வில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்கள் தங்களது அனுபவங்களை சபை மத்தியில் மகிழ்ச்சியுடன் உருக்கமாக பகிர்ந்தனர்.