A/L பெறுபேறுகள் : அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த சாதனையாளர்கள்


2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், இம்முறை 66 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

நேற்று (31) இரவு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு 281,810 விண்ணப்பதாரர்கள் தோற்றியதுடன், அவர்களில் 176,527 பேர் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்காக விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, 111 விண்ணப்பதாரர்களின் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாகாண ரீதியான பல்கலைக்கழகப் பிரவேசத் தகுதி வீதம்:

மேல் மாகாணம்: 69.42%
வடமேல் மாகாணம்: 68.48%
வட மாகாணம்: 66.91%
கிழக்கு மாகாணம்: 66.32%
தென் மாகாணம்: 65.69%
சப்ரகமுவ மாகாணம்: 64.97%
ஊவா மாகாணம்: 63.53%
மத்திய மாகாணம்: 63.04%
வடமத்திய மாகாணம்: 60.91%


பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றவர்களில் பெரும்பாலானோர் மாணவிகளாவர். இருப்பினும், உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் மாத்திரம் மாணவர்களே அதிகளவில் தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை கலைப்பிரிவில் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை 32.03% ஆகக் குறைவடைந்துள்ளதுடன், உயிரியல், பௌதீகவியல், தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் மாணவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளதாக ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, இம்முறை தேசிய மட்டத்தில் முதலிடங்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் வருமாறு:

உயிரியல் விஞ்ஞானப் பிரிவு:

முதலிடம் - டிலான் சஞ்சன (கொழும்பு றோயல் கல்லூரி)

இரண்டாமிடம் - கிரிஷான் சசிந்து நம்தர (ஹொரணை தக்ஷிலா மத்திய மகா வித்தியாலயம்)

மூன்றாமிடம் - தர்ஷனா கோனேஷ் (திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி)


பௌதீகவியல் (கணித) பிரிவு:

முதலிடம்: தேவேந்தன் திருகுமரன் (கிளிநொச்சி மகா வித்தியாலயம்)

இரண்டாமிடம்: தருஷ கிம்ஹான கம்லத் (குருணாகலை மலியதேவ வித்தியாலயம்)

மூன்றாமிடம்: வினுர பிரசாத் டி மெல் (பாணந்துறை ஸ்ரீ சுமங்கல ஆண்கள் பாடசாலை)