மாத்தளைப் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையொன்றின் அதிபர், மாணவர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாவெல பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், பாடசாலையில் கல்வி பயிலும் 14 வயது மாணவனை குறித்த அதிபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், சந்தேக நபரான அதிபரை கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் அனுப்பப்பட்டிருந்த போதிலும், குறித்த அதிபர் அப் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், குறித்த அதிபர் பல இடங்களில் மறைந்து இருப்பதாக பிரதேச மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, அந்த இடங்களில் பொலிஸார் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதனிடையே, தேடப்பட்டு வந்த அதிபர் இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை மகாவெல பொலிஸில் சரணடைந்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மகாவெல பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.













