மட்டக்களப்பு செங்கலடி நகருக்குள் ஊடுருவிய யானையால் கடைக்கு சேதம்


மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலை, காட்டு யானை ஒன்று நகருக்குள் நுழைந்து கடை ஒன்றை சேதப்படுத்தியுள்ளது.

செங்கலடி கறுத்தப்பாலம் வழியாக நகருக்குள் வந்த யானை, விவசாயப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை உடைத்து அங்கிருந்த அரிசி மூடைகளை சேதப்படுத்தியுள்ளது.

மேலும், அப்பகுதியில் உள்ள மதில்கள், தென்னை மரங்கள் மற்றும் வாழைமரங்களையும் சேதப்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களாக கறுத்தப்பாலம் பகுதியில் தங்கியிருந்த இந்த யானை, சம்பவ தினமான இன்றையதினம் அதிகாலை செங்கலடி–பதுளை வீதியூடாக நகருக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. பின்னர், அப்பகுதி மக்கள் இணைந்து யானையை விரட்டியடித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

மேலும், மாவட்டத்தில் அண்மைக்காலமாக யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக வவுணதீவு, ஆயித்தியமலை, கரடியனாறு, கொக்கட்டிச்சோலை மற்றும் வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவுகளில் யானை தாக்குதலால் பலர் உயிரிழந்துள்ளதுடன், கிராம மக்கள் தினமும் அச்சத்துடன் இரவு நேரத்தை கழித்து வருகின்றனர்.