யாழ் விரைவுரையாளர் கொலை வழக்கு - நீதிமன்றின் உத்தரவு


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை வழக்கில் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்தமருத்துவ துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கொலை செய்யப்பட்டார்.

இந் நிலையில் அவரது சடலம் தனங்கிளப்பு பகுதியில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பாக சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

சந்தேகநபர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் இருதரப்பு சட்டத்தரணிகளின் நீண்ட வாதப்பிரதிவாதங்களை ஆராய்ந்த நீதவான் சந்தேகநபர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அத்துடன் இரண்டாம் சந்தேகநபரான விரிவுரையாளரின் மகள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிப்பதற்கான மனநிலையில் உள்ளாரா என்பதை உறுதிப்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் சட்ட வைத்திய அதிகாரிக்கு பணிப்புரை விடுத்தார்.

இந்த விடயத்தில் ஊடகங்களின் செய்தி அறிக்கையிடல் பொறுப்பு வாய்ந்ததாக அமைய வேண்டும் எனவும் நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.