திருகோணமலையில் பெரும் சோகம்: தந்தையைக் காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் மகாவலி ஆற்றில் மூழ்கி பலி !


திருகோணமலையில் புத்தாண்டு தினத்தில் நீராட சென்றபோது தந்தையின் உயிரைக் காப்பாற்ற சென்று மூன்று மகன்கள் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் சோமாவதிய வனப்பகுதிக்கு உட்பட்ட மஹாவலி ஆற்றில் கடந்த 14 ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளது. மகாவலி ஆற்றின் வெருகல் பாலத்திற்கு அருகில் புத்தாண்டு நீராடச் சென்றிருந்த வேளையில் நீரில் முழ்கிய மூவரின் சடலங்கள் நேற்று முன்தினம் (15) பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தந்தை மற்றும் அவரது நான்கு மகன்கள் புத்தாண்டு தினத்தில் (14) பிற்பகல் ஆற்றில் நீராடச் சென்றபோது தந்தை நீரில் மூழ்கியுள்ளார்.

இந்நிலையில் தந்தையை காப்பாற்ற அவருடைய நான்கு மகன்களும் ஆற்றின் ஆழத்திற்குள் சென்றிருந்த வேளையில் தந்தையும் ஒரு மகனும் உயிர் தப்பிய நிலையில் மற்றைய மூன்று மகன்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர். காணாமல் போனவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கொழும்பில் தொழில் நிமித்தம் தங்கியிருந்த நான்கு மகன்களும் சித்திரை புத்தாண்டுக்காகத் தமது சொந்த ஊருக்கு திரும்பியிருந்தபோதே புத்தாண்டை முன்னிட்டு குடும்பத்தோடு ஆற்றில் குளிக்கச் சென்றிருந்த வேளையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தந்தையைக் காப்பாற்ற ஆற்றில் குதித்து காணாமல் போன மூன்று சகோதரர்களில் இருவரின் உடல்களைப் பின்னர் பிரதேசவாசிகள் மீட்டனர்.