சகல தரப்பினரின் நம்பிக்கையுடன் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு


நாட்டின் அனைத்து இன மக்களினதும், நம்பிக்கையை வென்றெடுத்து, தமிழர் பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காணும் வல்லமை தமக்கு இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் புந்தை ஒவ்வொரு பக்கமாக மாற்றி மாற்றி காலத்தை வீணடிக்காமல், அனைத்து இன, மத தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடாத்தி அவர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதன் மூலம், தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமென அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்


தமிழர் பிரச்சினைக்கு முன்வைக்கும் தீர்வு திட்டத்தை தென்பகுதி சிங்கள மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்கும் வேட்பாளருக்கே தமது ஆதரவு கிடைக்குமென தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை குறித்து, வினவியபோது, அமைச்சர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிளவுபடாத நாட்டில், அதிகூடிய அதிகாரப்பகிர்வை வழங்குவதென்பதே, 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது, முன்வைக்கப்பட்ட யோசனை ஆகும். இது தமிழர் தரப்பிற்கும், தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது. எனவே, அப்போதைய நிலைப்பாடே, தற்போதும் உள்ளதென அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


யாழ்ப்பாணத்தில் நடைபெறும் என்றபிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சிக்கு நேற்று காலை விஜயம் செய்த அமைச்சர் தினகரன் காட்சிக்கூடத்திற்கும் வருகை தந்தார்.
அதன்போது, கருத்து தெரிவித்த அமைச்சர், சகல மக்களும், யாழ்ப்பாண மக்கள் மாத்திரமன்றி, நாட்டில் உள்ள அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும், நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டுமென்பதே தனது எண்ணமாகுமென்றும் தெரிவித்தார்.

ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் பிரேமதாச ஒற்றையாட்சியின்கீழ் அதி உச்ச அதிகாரப் பகிர்வில், சகல இன மக்களும் சமமான உரிமையை உணர்வு பூர்வமாக அனுபவிக்கும் நிலை தோற்றுவிற்க வேண்டுமென்றார்.


ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், ஐக்கிய தேசிய கட்சி ஒரு ஜனநாயக கட்சி அதில் கருத்து மோதல்கள் காத்திரமாக அணுகப்பட்டு, தீர்மானங்கள் எடுக்கப்படும்.

ஒரு குறிப்பிட்ட தரப்பினரோ, அல்லது தனி நபரோ எடுக்கின்ற தீர்மானத்திற்கு, கட்டுப்படும் நிலமை ஐக்கிய தேசிய கட்சியில் கிடையாது.

கட்சி ஜனநாயகத்தை மறுக்கின்றவர்கள் அல்லது ஜனநாயகத்திற்கு மாறாக செயற்படுகின்றவர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்குள் குழப்பங்கள் காணப்படுகின்றதாக பிரசாரம் செய்கின்றனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் பிரேமதாச நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டத்தின் பிரகாரம், சகலருக்கும் சமமான நீதி கிடைக்க வேண்டுமென்பதுடன், இந்த விடயத்தை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டுமென்றும் உறுதியாக தெரிவித்தார்.

அமைச்சர் பிரேமதாசவுடன், அமைச்சர் எரான் விக்கிரமரட்ன, யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், ஆகியோரும் அமைச்சருடன், பிரசன்னமாகியிருந்தனர். -