ஆசியா பவுண்டேஷனின் ஏற்பாட்டில் பல இலட்சம் பெறுமதியான நூல் தொகுதி அம்பாறை மாவட்ட பல அரச நிறுனங்களுக்கு வழங்கி வைப்பு

பாறுக் ஷிஹான்

கல்முனைப் பிராந்தியத்திலுள்ள பொது நூலகங்களுக்கும் பாடசாலைகளுக்கும் கிடைப்பதற்கரிய பெறுமதி வாய்ந்த நூல்களை ஆசியா பவுண்டேஷன் தொடர்ச்சியாக வழங்கி வருவதன் மூலம் இப்பகுதி மாணவர்களுக்கு அந்நிறுவனம் உன்னத பணியாற்றி வருகின்றது என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

கல்முனை, காரைதீவு, சம்மாந்துறை உள்ளூராட்சி மன்றங்களுக்குட்பட்ட பொது நூலகங்களுக்கும் சில பாடசாலைகளுக்கும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆசியா பவுண்டேஷன் நிறுவனத்தினால் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு  திங்கட்கிழமை (09) மருதமுனை சமூக வள நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமை வகித்து பேசுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஆசியா பவுண்டேஷன் புத்தகங்கள் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் அன்டன் டி.நல்லதம்பி, நிபுணத்துவ ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் முதல்வர் றகீப் மேலும் தெரிவிக்கையில்;

"வாசிப்பு என்பது ஒரு மனிதனை முழு மனிதனாக மாற்றுகின்றது. அந்த அடிப்படையில் ஆசியா பவுண்டேஷன் அனைவரையும் ஊக்குவித்து வருவதுடன் எமது நாட்டின் கல்வித்துறை முன்னேற்றத்திற்காக பாரிய பங்களிப்பு செய்து வருகின்றது. இதற்காக அந்நிறுவனத்தின் புத்தகங்கள் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் அன்டன் டி.நல்லதம்பி கடுமையாக உழைத்து வருகின்றார். எமது பகுதியிலும் அதன் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக நான் அவரிடம் விடுத்த வேண்டுகோளையேற்று கடந்த வருடம் எமது நூலகங்களுக்கும் வாசிக சாலைகளுக்கும் ஜீ.சி.ஈ.சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்புகளுக்கான பெறுமதியான புத்தகங்களை வழங்கியிருந்தது.

இம்முறை எமது பொது நூலகங்களுக்கு மாத்திரமல்லாமல் சில பாடசாலை நூலகங்களுக்கும் மிகப்பெறுமதி வாய்ந்த நூல்களை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தார். இதற்காக அவருக்கும் நிறுவனத்தின் ஆலோசகர் வலீதுக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேவேளை கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பொது நூலகங்களில் நிலவி வருகின்ற குறைபாடுகளையும் தேவைகளையும் கண்டறிந்துள்ளோம். அவற்றை நிவர்த்தி செய்வதற்கு எதிர்காலங்களில் விசேட செயற்றிட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம். அத்துடன் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இணைந்து வாழ்கின்ற பெரிய நீலாவணை மற்றும் இஸ்லாமாபாத் பிரதேசங்களில் புதிதாக நூலகங்களை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

80 மில்லியன் ரூபாவாக இருந்த கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டத்தை இம்முறை 500 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளோம். அதனை அடுத்த ஆண்டு 600 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். இதன் மூலம் நூலகங்களின் குறைபாடுகளையும் தேவைகளையும் நிவர்த்தி செய்வதற்கு எம்மால் முடியுமாக இருக்கும்" என்று குறிப்பிட்டார்

மேலும்   நிந்தவூர் பொது நூலகம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நூலகங்களுக்கும் பெறுமதியான நூல்கள் வழங்கி வைக்கப்பட்டன.