பேஸ்புக் ஊடாக சேறுபூசல்கள்,வெறுக்கும் பேச்சுகளுக்கு எதிராக செயற்படுவது தொடர்பில் பேஸ்புக் பிரதானிகளுடன் பேச்சுவார்த்தை


எதிர்வரும் தேர்தல்களில் பேஸ்புக் மற்றும் சமூக வலைத்தளங்களினூடாக வெறுக்கத்தக்க பேச்சுகள் மற்றும் சேறு பூசல்கள் போன்ற தேர்தல் சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படுவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு தலைவருக்கும் பேஸ்புக் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் நேற்று விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.தேர்தல் செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தேல்தல் ஆணைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பேஸ் புக் சமூக வலைத்தள இந்திய மற்றும் இலங்கை பிரதானிகள் கலந்து கொண்டார்கள்.

இது தவிர 25 மாவட்ட தேர்தல் செயலக தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளும் கலந்து கொண்டதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னாயக்க கூறினார்.

உதவி தேர்தல் ஆணையாளர்களுடன் நேற்று முன்தினம் (8) இடம்பெற்ற சந்திப்பிலும் பேஸ்புக் சமூக வலைத்தளங்களினூடாக தேர்தல் சட்டத்தை மீறும் செயல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் முக்கியமாக ஆராயப்பட்டுள்ளது.இது தொடர்பில் பரந்த அளவில் ஆராய்வதற்காக ஊடக நிறுவன பிரதானிகளையும் சந்தித்து கருத்துப் பரிமாறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

18 வேட்பாளர்கள் போட்டி

இதே வேளை, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 18 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிரதான அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 17 பேரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுயாதீனமாகவும் போட்டியிடவுள்ளமை தொடர்பில் அறிவித்துள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். எல்பிட்டி பிரதேச சபை தேர்தல் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் ஆணையாளர்களுக்கிடையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.