நாங்கள் போரை உருவாக்கி தமிழர்களை கொல்லவில்லை! யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்தோம் : கோட்டாபய ராஜபக்ஷ


நாங்கள் போரை உருவாக்கி தமிழர்களை கொல்லவில்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் நாங்கள் செய்தது நாட்டில் நீண்டகாலமாக நடைபெற்ற யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்தது மாத்திரம் தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்லையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கோட்டாபய இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சாதாரண பொதுமக்களை கொன்றது நாங்கள்தான் என வீணாக பழி சுமத்தி தமிழ் மக்களிடத்தில் குற்றவாளிகளாக எங்களை காட்டுவதற்கு போரை தோற்றுவித்தவர்கள் முயற்சிக்கின்றார்கள்.

உண்மையாகவே நாங்கள் போரை உருவாக்குவதற்கு காரணமாக இருக்கவில்லை. அதனை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டில் அமைதி நிலைமையை ஏற்படுத்தியது மாத்திரமே ஆகும்.

எனவே, இவ்விடயத்தில் எம்மீது வீண்பழியே சுமத்தப்படுகின்றது என்பதை மக்களை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

இதேவேளை தேர்தல் நெருங்கும்போது  பெரும்பாலான அரசியல்வாதிகள் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்குவார்கள் ஆனால் வெற்றியடைந்த பின்னர் அவ்விடயம் குறித்து சிந்தித்துக்கூட பார்ப்பதில்லை.

இவைகள்தான் காலம் காலம் இடம்பெற்று வருகின்றது. ஆனால், எமது ஆட்சியில் மக்களின் கோரிக்கைகள் அனைத்துக்கும் உரிய தீர்வு வழங்கப்படும்.

மேலும் மலையகத்தில் கல்வித் தேவை இதுவரையில் முறையாக பூர்த்தி செய்யப்படவில்லை. அத்துடன் அம்மக்கள் பல்வேறு அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு தொடர்ந்து முகம் கொடுத்து வருகின்றனர்.

ஆகையால் அவர்கள் விடயத்திலும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவேன்” என குறிப்பிட்டுள்ளார்.