தேர்தலுக்கான வேட்புமனு பொறுப்பேற்கும் பணி ஆரம்பம்

2019 ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் சற்று முன்னர் ராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்தில் ஆரம்பமானது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் வேட்புமனுக்கள் பொறுப்பேற்கும் பணி இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமானது. எட்டாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான இந்த வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 9.00 மணியிலிருந்து முற்பகல் 11.00 மணிவரை நடைபெறும். இன்று முற்பகல் 11.30 வரை இது தொடர்பிலான ஆட்சேபனைகளைத் தெரிவிக்க முடியும்.

வேட்புமனுத்தாக்கலை முன்னிட்டு, இன்று காலை 6.00 மணியிலிருந்து தேர்தல் செயலக காரியாலயம் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்த வழங்கப்பட்ட கால எல்லை நேற்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது. ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் அதிகளவிலான வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்திய தேர்தலாக இந்த தேர்தல் அமைய உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் ரசிக பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அங்கீகரிக்கப்பட்ட 19 கட்சிகள், மற்றும் வேறு 3 கட்சிகள் உள்ளடங்கலாக 19 சுயேச்சை வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நாட்டின் மொத்த மக்கள் எண்ணிக்கை 21 மில்லியன். இவர்களுள் 15.6 மில்லியன் வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றிருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இந்த தேர்தலில் புதிதாக வாக்களிப்பதற்காக சுமார் 1 மில்லியன் வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலக வளாகத்திற்குள் மக்கள் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்தடன் இந்தப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

இன்று பிற்பகல் 1.00 மணி வரை ராஜகிரிய சரண மாவத்தை மூடப்பட்டிருக்கும். தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக இலங்கை விமானப்படை தேர்தல் அலுவலகப்பகுதியில் விமான பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இன்று ராஜகிரிய பிரதேசத்தில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படை அடங்களாக 1,700 பொலிசார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.