மீண்டும் ஒரு முறை ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மை சமூகம் இருக்குமா ?

ஆர்.சயனொளிபவன் & TEAM 
  • கொழும்பில் உள்ள முன்னனி ஆங்கில ஊடகங்கள்  சிலவற்றின் கணிப்பு 
  • இரு முன்னணி வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரங்கள் 
  •  தற்போதுள்ள தேர்தல் கள நிலவரம்
  • கோத்தபாயா ராஜபக்ச  அவர்கள் 
  • சஜித் பிரேமதாச அவர்கள்  
  • சிறுபான்மை சமூகத்தின் வாக்குவங்கி ஒரு பார்வை
  • வடக்கு கிழக்கை பூர்விகமாக கொண்ட தமிழ் சமூகம்:-
  • இந்திய வம்சாவளி தமிழ் சமூகம்:
  • முஸ்லிம் சமூகம்:

8 வது ஜனாதிபதி தேர்தலுக்கு இன்றிலிருந்து சரியாக 5 நாட்கள் உள்ள வேளையில் தேர்தல் களமும்  மிகவும் விறு விறுப்பான  நிலையை    அடைந்துள்ளது. முன்னணி வேட்பாளர்களான கோத்தபாயா ராஜபக்சா மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவரில் ஒருவர் ஜனாதிபதியாகுவதற்கு உள்ள சந்தர்ப்பம் அதிகம் உள்ள வேளையில்  ஜேவிபி யின் தலைவர் அனுரா குமார திசாநாயக்கா இத் தேர்தலில்  மூன்றாவது அணி என்ற இடத்தை பிடித்தது மட்டுமல்லாது   ஜனாதிபதி தேர்தல்    சரித்திரத்திலேயே முதல் முறையாக இத் தேர்தலை 2ம் கட்ட வாக்கு கணிப்பிற்கு கொண்டு செல்லும் அளவு  கணிசமான அளவு வாக்குகளை  தம்வசப்படுத்துவார் என்றும் கருதப்படுகின்றது. அதேவேளை சிறுபான்மை சமூகம் மீண்டும் ஒரு முறை ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குமா என்ற கேள்வியும் எழுவதையும் அவதானிக்க கூடியதாகவும் உள்ளது.

முன்னணி வேட்பாளர்களாக கருதப்படும்   கோத்தபாயா, சஜித் ஆகிய  இருவரும் தமது தேர்தல் பிரச்சாரம்கள் ஆரம்பித்த முதல் வாரத்தில் இருந்து இன்று வரை  சிங்கள மக்களின் வாக்கு வங்கியாக கருதப்படும் 1 கோடி அளவிலான வாக்குகளை  மையப்படுத்தியே  தமது தேர்தல் பிரசாரம்களையும் முன்னெடுத்து சென்றுள்ளதையும் பார்க்கக்கூடியதாகவும்  உள்ளது. இந்த விடயத்தை   The Island பத்திரிகையும் தமது கடந்த ஞாயிறு கட்டுரைகளில்  ஒன்றிலும்  குறிப்பிட்டுள்ளது. மேலும் இவ் வாக்கு வங்கியில்  கோட்டபாய அவர்களை பொறுத்த அளவில் 60% அளவிலான வாக்குகளையும்  சஜித் அவர்களை பொறுத்த அளவில் 40% அளவிலான வாக்குகளையும்  பெறுகின்ற சந்தர்ப்பதிலேயே தமது வெற்றி வாய்பிற்க்கான சந்தர்ப்பத்தை உறுதிப்படுத்தி கொள்ளலாம் என்றும் கருதப்படுகின்றது.



சிறுபான்மை சமூகத்தை பொறுத்த அளவில் இத் தேர்தலில் அவர்களால் அழிக்கப்படவுள்ளதாக கருதப்படும் 30 இலட்சத்திற்கும் அதிகமான  வாக்குகள்  ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்குமா என்ற வகையில் பார்க்கும் போது முற்றிலும் இரு வேறு வகையான கருத்துக்களே வெளிவந்த வண்ணம் உள்ளது.

கொழும்பில் உள்ள முன்னனி ஆங்கில ஊடகங்கள்  சிலவற்றின் கணிப்பு 

அந்த வகையில் முதலாவதாக கொழும்பில் உள்ள ஆங்கில பத்திரிகைகளான Daily Mirror - Sunday Times, The Island போன்ற முன்னணி பத்திரிகைகளின் கருத்துப்படி  சிங்கள மக்களின் மத்தியில் பாரிய ஆதரவு கோத்தபாய ராஜபக்சவிற்கே உள்ளது என்றும் ஆனால் தற்போது அந்த வாக்கு வங்கியில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்துள்ளது என்றும் மேலும் தமது தரவுகளை பல்வேறு  உதாரணம்களின் ஊடாகவும் வெளிப்படுத்தி வருகின்றனர் அந்தவகையில் பார்க்கும் போது

  • கம்பஹா மாவட்டம்     16 இலட்சம் அளவிலான பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களையும் நாடளாவிய ரீதியில் கொழும்பு மாவட்டத்திற்கு அடுத்த படியாக  2வது அதிக வாக்காளர்களை கொண்ட  மாவட்டமாகவும் விளங்குகின்றது. மேலும்  குறிப்பாக நாட்டில் இறுதியாக நடைபெற்ற தேசிய ரீதியான 15 தேர்தல்களில் 14 தேர்தல்களில் இவ் மாவட்டத்தில் எந்த அரசியல் கட்சி அதிக வாக்குகளை பெற்றதோ அந்த அரசியல் கட்சியே நாடளாவிய ரீதியில்  வெற்றியையும்  அடைந்துள்ளது. அந்த வகையில் Daily Mirror  கம்பஹா  மாவட்டத்தில் உள்ள பல தேர்தல் தொகுதிகளில் கள நிலவரம் சார்பாக மக்கள் சந்திப்பின் மூலம் ஒரு கணக்கெடுப்பும்  நடத்தியுள்ளது. மேலும் அக்கணக்கெடுப்பானது  பாரிய அளவில் கோத்தபாயா அவர்களுக்கு சாதகமாகவும் அமைந்துள்ளது.
  • இதே போன்றுதான் உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பின்பு குறிப்பாக  நாட்டின் தெற்கு பகுதியில்  உள்ள உல்லாசத்துறை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. அப் பகுதியில் உல்லாச துறையை வாழ்வாதாரமாக கொண்ட பல குடும்பங்கள் பொருளாதார ரீதியாக சொல்லொண்ணா துயரங்களை அனுபவிப்பதையும், அந்தவகையில் இத் தாக்குதலுக்கும், தாக்குதலின் பின்பு உல்லாச துறையை மீள கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பில் உள்ள அரசு  குறிப்பிடத்தக்க வகையில் முயற்சிகளை  மேற்கொள்ளவில்லை என்றும் மேலும் இவை யாவற்றிற்கும்    தற்போதைய அரசு  தான் பொறுப்பு கூறவேண்டும் என்றும் அப் பகுதியில் வாழும் மக்கள் தமது கருத்துக்களை தெரிவிக்கின்றனர் .
  • இதே போன்றுதான் The Island பத்திரிகையும் செயல் வீரன் இறுக்கமான நிர்வாகி என்றும் அந்த  வகையில்  கோத்தபாயா ராஜபக்ஸவிற்கு சிங்கள சமூகத்திடம் கூடுதலான அளவு நம்பிக்கை உள்ளது போன்ற தோணியில் தமது கட்டுரையையும் வரைந்துள்ளது.
  • Daily Mirror இல் D.B.S Jeyaraj எழுதியுள்ள இறுதியான ஒரு கட்டுரையில் கோத்தபாயா விற்கே சிங்கள மக்களின் மத்தியில் பெரும்  ஆதரவு உள்ளதென்றும்   ஆனால் அதேவேளை அவ் ஆதரவு தற்போது சஜித் அவர்களை நோக்கி நகர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். 
இவை கொழும்பில் உள்ள முன்னணி பத்திரிகைகளின் தற்போதைய கணிப்புக்களாகவும் மேலும் இப் பத்திரிகைகள்  கோத்தபாய ராஜபக்ச  அவர்களுக்கு சிங்கள மக்களிடம் பெரும் ஆதரவு உள்ளது போன்ற வகையில்  தமது கருத்துக்களையும் வெளியிட்டுள்ளது  .

இரு முன்னணி வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரங்கள் 

இதுவரை சஜித் பிரேமதாச அவர்களுக்கு பாதகமாக  உள்ள மற்றுமோர் விடயமாக கருதப்படுவது அவரது குழுவினரால் முன்னெடுத்து செல்லப்படும்  தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அந்தவகையில் சஜித் அவர்களின்   மொத்த தேர்தல் பிரசார  நடவடிக்கைகலும்  கோத்தபாய அவர்களுடைய தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு அடுத்த படியாகவே அமைந்துள்ளது  என்றும் பரவலாக பேசப்படுகின்றது . மேலும் அந்த வகையில் பார்க்கும் போது

  • சஜித் அவர்களின்  தேர்தல் விஞ்ஞாபனம் தபால் மூலம் வாக்களிப்பு ஆரம்பமான நாளான 31ம் திகதியே வெளியிடப்பட்டுள்ளது  . அந்த வகையில் பார்க்கும் போது கோத்தபாய  அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் இரு வாரம்களுக்கு முன்பே வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்க விடயமாகும் 
  • இதே  போன்றுதான் சஜித் அவர்களின்  தேர்தல் பிரசார நடவடிக்கைகளை  ஒருங்கமைக்கும் தலைமையகம் கொழும்பில் மூன்று இடம்களில் இயங்குவதாகவும் இதனால் தேர்தல் சம்பந்தமாக  கவனிக்கப்பட வேண்டிய பல முக்கிய விடயம்கள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை என்றும் கூறப்படுகின்றது.
  • மறுபக்கத்தில் கோத்தபாயாவின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு அவரது சகோதரர்களில் ஒருவரான பசில் ராஜபக்ச அவர்கள் பொறுப்பாக இருப்பதாகவும் மேலும் அவர்களது தேர்தல் சம்பந்தமான விடயங்கள்  செவ்வனே முன் எடுத்து செல்லப்படுவதாகவும் கருதப்படுகின்றது 
  • அந்தவகையில் பார்க்கும் போது  குறிப்பாக கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கோத்தபாயா அவர்களை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம்கள் குறிப்பாக மகிந்த மற்றும் கோத்தபாயா  கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு சரியான முறையில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது மட்டுமல்லாது மேலும் இக் கூட்டம்களில்  பல்லாயிரக்கணக்கான மக்களும் கலந்து கொண்டனர். அது மட்டுமல்லாது இவர்களது தேர்தல்  கூட்டம்களுக்கு தேவைப்படும் பல முக்கிய பொருட்கள் கொழும்பில் இருந்து அனுப்பப்படுவதாகவும் கூறப்படுகின்றது . இந்த வகையில் கோத்தபாயா அவர்களின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள்  சம்பந்தமான சகல விடயங்களும் அவர்களது தேர்தல் மத்திய கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து துல்லியமான முறையில்  திட்டமிடப்பட்டு பின்னர் அவை செயற்படுத்த படுவதாகவும்  கூறப்படுகின்றது.
  • இதற்கு மாறாக இதே மட்டக்களப்பு மாவட்டத்தில் சஜித் அவர்களை ஆதரிக்கும் வகையில்  பட்டிருப்பில் செவ்வாய்  அன்று பிரதமர் ரணில் அடங்கலாக  கலந்து கொண்ட  தேர்தல் பிரசார கூட்டத்தில் ஆயிரம் அளவிலான  மக்கள் கூட்டமே கலந்து கொண்டதும் சஜித் அவர்களின் தேர்தல் பிரசார கூட்ட  ஒருங்கமைப்பின் தன்மையை தெளிவாக காட்டுகின்றது.
மேலும் வருகின்ற நாட்களில் சஜித் அவர்களின்  தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்  ஒருங்கமைப்பில் பாரிய மாற்றங்கள் ஏற்படாவிடின்  தமது வேட்பாளரின் தன்மை   மற்றும் தமது வேட்ப்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் என்ன சொல்கின்றது என்பனவற்றை மக்களுக்கு எடுத்து செல்வதற்குரிய சந்தர்ப்பத்தில் இருந்து  தவறியவர்களாகவே  கருதப்படுவர் .

தற்போதுள்ள தேர்தல் கள நிலவரம் 

இரண்டாவதாக  இன்றைய தேர்தல் கள நிலவரத்தை பார்ப்போமாயின் குறிப்பாக இரு முன்னணி வேட்பாளர்களில்

கோத்தபாயா ராஜபக்சா  
  • கோத்தபாயா அவர்களின் தேர்தல் அணுகுமுறை  முற்று முழுதாக பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்கு வங்கியை நம்பியதாகவும் அந்தவகையில்   அவரது தேர்தல் பிரசாரமும்  அனுராதபுரத்தில் நான்கு வாரம்களுக்கு முன்பு ஆரம்பித்தது மட்டுமல்லாது அவர்  சிங்கள மக்கள் மற்றும் பாதுகாப்பு துறையில் உள்ளவர்களின்  பாதுகாவலன், சொல்வதை செய்பவன், பாமர மக்கள் மற்றும் விவசாயிகளின்  வாழ்வாதாரத்தை முன்னேற்ற வந்த செயல் வீரன் மேலும்  உறுதியான ஒரு தலைவர்  என்ற தோணியிலும் இவரது தேர்தல் பிரசாரம்கள் தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லப்படுகிறது 
  • இத் தன்மையை உறுதி செய்யும் வகையில் கோத்தபாய அவர்களின்  குழுவில்  சிங்கள தேசியவாதிகளான விமல் வீர வம்ச, உதய கம்பில்ல ,ஞான தேரர், இரத்தின தேரர் போன்ற அரசியல் வாதிகள் மற்றும் பௌத்த  துறவிகளும் அங்கம் வகிப்பது மட்டுமல்லாது இவர்களே  கோத்தபாயா அவர்களின்  தேர்தல் நடவடிக்கைகளிலும்  முக்கிய பங்கும்  வகிக்கின்றனர் 
  • இவருடைய அணியில் இதுவரை 40 அமைப்புக்கள் இடம்பெறுவதாகவும்  இவற்றுள் 80%திற்கு  மேற்பட்ட அமைப்புகள் சிங்கள தேசியவாதத்தை அடிப்படையாக கொண்ட அமைப்புக்களாகவும் காணப்படுகின்றன.   
  • கோத்தாபாய அவர்களின்  முக்கிய பங்காளிகளாக SLFP உட்பட  விமல் விரவம்சவின் தேசிய முன்னணி, உதய  கம்பிலவின் ஹித்துரு உரிமையா, போன்ற சிங்கள தேசிய  வாதத்தை அடிப்படையாக கொண்ட  அரசியல் கட்சிகளிலும்   பங்காளிகளாகவும்  உள்ளனர்   
  • சிறுபான்மை தமிழ் சமூகத்தை பொறுத்தளவில்  மலையக தமிழ் மக்களை  பிரதிநித்துவபடுத்தும் ஆறுமுகம் தொண்டமானின் இலங்கை தொழிலார் காங்கிரஸ்சும்  அதனை தொடர்ந்து வடக்கு கிழக்கில் உள்ள சிறுபான்மை தமிழ் சமூகத்தின் மாற்று அரசியல் தலைமைகளான வடக்கை பொறுத்தளவில் டக்ளாஸ் தேவானந்தாவின் EPDP யும் ,  கிழக்கை பொறுத்த அளவில் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் - பிள்ளையானின்  TMVP, பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், முன்னாள் பிரதி அமைச்சர் விநயகமூர்த்தி முரளிதரன் ஆகியோரின்  அரசியல் அமைப்புக்களும் 
  • சிறுபான்மை முஸ்லீம் சமூகத்தை பொறுத்த அளவில் சிறிய அளவிலான வாக்கு வங்கிகளை கொண்ட முன்னாள் அமைச்சர்களான அதாவுல்லா, பஷீர் சேகுதா, பைசல் முஸ்தபா, முன்னாள் பிரதி அமைச்சர் மாயோன் முஸ்தபா, ஹசன் அலி, மேற்கு மாகாண ஆளுநர் முஸாமில் . போன்றோரும் கோத்தபாயா அவர்களை ஆதரிக்கின்றனர் 
இவையே கோத்தபாய ராஜபக்சா அவர்களின் வாக்கு வங்கியும்   மற்றும்  அவரை  ஆதரிக்கும் அரசியல் கட்சிகளுமாகும்  . இவற்றில் குறிப்பாக சிறுபான்மை சமூகத்தை பொறுத்த அளவில் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் அமைப்பு ஒன்றே   1 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குவங்கியை   கொண்டதுமாகும்  .


இவற்றை விட குறிப்பாக  கடந்த இரு வாரகாலமாக கோத்தபாய அவர்களின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள்   பெருமளவில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் வாக்குவங்கியை நோக்கியதாகவும்  அமைந்துள்ளது. அந்த வகையில் சிங்கள மக்களின் வாக்கு வங்கியை பெருமளவில் நம்பியிருந்த ராஜபக்ஸக்கள்   அவ்  வாக்குவங்கியில் தற்போது ஏற்பட துவக்கியுள்ள மாற்றத்தை உணர்ந்த  ராஜபக்சா  குழுவினர் மேலும் அந்த மாற்றத்தை ஈடுசெய்யும் வகையில் தமிழ் மக்களின் வாக்குவங்கியை நாடி வருவதாகவும் கருதப்படுகின்றது.


சஜித் பிரேமதாச 

  • சஜித்தின் தேர்தல் பிரசாரத்தை பொறுத்த அளவில்  காலிமுக திடலில் முதலாவதாக இடம்பெற்ற  பிரமாண்ட  தேர்தல் பிரசார கூட்டம் மற்றும் இரு தினங்களுக்கு முன்பு முல்லைதீவில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம்கள்  தவிர்ந்த ஏனைய அனைத்து கூட்டம்களும் இன்று வரை சிங்கள மக்களின் வாக்கு வங்கியை மையப்படுத்தியதாவே அமைந்துள்ளது. 
  • கோத்தபாயா அவர்கள் முன்வைக்கும் ஒவ்வொரு சிந்தனைகளுக்கும் சமநிலை படுத்தக்கூடியவகையில்  சஜித் அவர்களும் மாற்று திட்டம்களையும் முன்வைப்பதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது மேலும் அந்த வகையில் பார்க்கும் போது அவை  நாட்டின் பாதுகாப்பாக இருந்தாலும் சரி, பாமர மக்களின் பொருளாதாரத்தை முன்னெடுக்கும் திட்டமாக இருந்தாலும் சரி. பெண்களின் பாதுகாப்பு, உரிமை மற்றும் பிற நலன்கள் ஆனாலும் சரி சஜித்தின் மாற்று திட்டம்கள் ஒரு படி மேல் உள்ள வகையில் அமைந்துள்ளதையும் பார்க்கக்கூடியதாகவும் உள்ளது.
  • சஜித்தின் பங்காளிகளாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அமைப்பும்  அத்தோடு சிங்கள மக்களின் வாக்கு வங்கியை  அடிப்படையாக கொண்ட கட்சிகள் என்ற வகையில் அமைச்சர் சம்பிக்காவின்  ஹெல உரிமைஜா   மற்றும் சில தொழில் சங்கம்களும் உள்ளன 
  • சிறுபான்மை காட்சிகளை பொறுத்த அளவில் இதுவரை தமிழ் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு   மலையக மக்களை பிரதிநித்துவ படுத்தும் அமைச்சர்களான மனோ கணேசன், திகாம்பரம், ராதாகிருஷ்னன் ஆகியோரை உள்ளடக்கிய தமிழர் முற்போக்கு முன்னணி ஆகிய முன்னனி தமிழ் அரசியல் கட்சிகளும் 
  • முஸ்லீம் சமூகத்தை பொறுத்த அளவில் அமைச்சர் ரவுல்  ஹக்கீமின் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ், அமைச்சர்  ரிசார்ட் பதியூதீனின் இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய முன்னணி  முஸ்லீம் அரசியல் கட்சிகளும் அடங்கும் 
இவையே சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கும் முக்கிய அமைப்புகளாகும்  குறிப்பாக  கடந்த ஒரு வார காலாப்பகுதிகளுக்கு மேலாக சஜித் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமைப்புகளின்  எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரித்து வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது அந்தவகையில் கடந்த சனிக்கிழமை தமிழ் அரசுக்கட்சியின் முடிவும் மேலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா அவர்களின் ஆதரவும் சஜித் அவர்களின் வாக்கு வங்கியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முடிவுகளாகும்.

சந்திரிகா குமாரதுங்க மற்றும் குமார வெள்ளாக்காம ஆகியோரின்  ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட SLFP யின்  மாற்று குழுவின்  சிறிய அளவிலான மகாநாடு ஒன்று கடந்த 5ம் திகதி சுகததாச உள்ளரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டும் இருந்தது மேலும் அவ் மாநாட்டிற்கு கட்சியின் அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் என சுமார் 4,000 அளவிலான மக்கள் கலந்து கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகின்றது. அவ் மகாநாட்டில் பேசிய சந்திரிக்கா குமாரதுங்க   ஜனநாயக விரோத செயலில் ஈடுபடும் ராஜபக்ஸகளுக்கு   எதிராக குரல் எழுப்பியதோடு மட்டுமல்லாது மேலும் அங்கு கூடியிருந்த மக்களிடம் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்ப்பாளர் சஜித் பிரேமதாசாவின் வெற்றிக்காக உழைக்கும் படியும் வேண்டினார்.

தற்போதைய தேர்தல் கள  நிலைமையை பார்க்கும் போது இறுதியாக இரு அணியினரும் சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கியை குறிவைத்தே  தமது  தேர்தல் பிரசாரத்தை நகர்த்துவதையும்  உணரக்கூடியதாகவும் உள்ளது இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது தேர்தல் கள  நிலவரம் சஜித் அவர்களுக்கு சாதகமாக மாறிவருவருவதை நன்கு தெளிவாக உணரத்துகின்றது. ஆனால் இம் மாற்றம்கள் சஜித் அவர்களின் தேர்தலின் வெற்றிக்கு போதுமானதா என்றவிடயம்  கேள்வியாகவே  உள்ளது.

சிறுபான்மை சமூகத்தின் வாக்குவங்கி ஒரு பார்வை

வடக்கு கிழக்கை பூர்விகமாக கொண்ட தமிழ் சமூகம்:-
 தமிழ் சமூகத்தை பொறுத்த அளவில் 2005இல் இருந்தே  ராஜபக்சாக்களுக்கு எதிராக வாக்களிக்கும் தன்மையையே கொண்டுள்ளனர்.  மேலும் இரு முன்னணி  வேட்பாளர்களும் தமிழ் சமூகத்திற்கு பாரிய அளவில் எதனையும் வழங்குவார்கள் என்ற நம்பிக்கையும்    தமிழ் சமூகத்திடம்  அறவே  இல்லை.

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களை பார்ப்போமாயின்  குறிப்பாக வடக்கில் உள்ள தமிழ் மக்களை பொறுத்த அளவில்  அதி முக்கியமனா விடயம்களாக  போர் குற்றம், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள், பொதுமக்களின் காணிகள்  விடுவிப்பு, அரசியல் தீர்வு மற்றும் இறுதியாக அபிவிருத்தி என்ற வகையிலிலேயே அவர்களின் முக்கிய துவத்தை வரிசை படுத்தலாம் அந்த வகையில் இரு வேட்பாளர்களில் கோத்தபாய அவர்கள் மேற்குறிப்பிட்ட பல விடயம்களில் சம்மந்த பட்டிருப்பதால் வழமைக்கு மாறாக இத் தேர்தலில் கூடுதலான வடக்கு வாழ் தமிழ் மக்கள்  வாக்களிப்பில் கலந்து கொள்வது மட்டுமல்லாது சஜித் அவர்களுக்கு தமது வாக்குகளையும் வழங்கலாம் என்றும் கணிக்கப்படுகின்றது.

கிழக்கில் உள்ள தமிழ் மக்களை பொறுத்த அளவில் 30 வருட போரால் பாரிய அளவில் பின்னடைவுகளை பொருளாதாரம் , கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை கட்டுமான வசதிகளிலும் அடைந்தது மட்டுமல்லாது கிழக்கில் வாழும் மற்றைய சமூகம்களை விட மிகவும் பின் தங்கிய நிலைக்கும்   உள்ளாக்கப்பட்டுள்ளனர் . மேலும் வடக்கு போல் அன்றி கிழக்கில் உள்ள தமிழ் மக்களில் கைவிட்டு எண்ணக்கூடிய அளவிலான மக்கள் தொகையே மேற்கத்தைய நாடுகளுக்கும் மற்றும் பெரும் தொகையான இளைஞர்களும்  யுவதிகளும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும்  சென்றதாலும். பொருளாதார ரீதியில்  முற்று முழுதாக தொடர்ந்தும்  வரும் அரசுகளிலேயே தங்கியும் உள்ளனர். இக் காரணம்களினால்  கிழக்கில் உள்ள தமிழ் மக்களை பொறுத்த அளவில் வடக்கில் உள்ள மக்கள்  போல் அன்றி பொருளாதாரத்திற்கே முன்னுரிமை வழங்கவேண்டிய நிலையிலும்  உள்ளனர் .

அந்த வகையில் பார்க்கும் போது கடந்த நான்கு வருடம்களில் கிழக்கில் தமிழ் மக்களை 100%மும்  பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கூட்டமைப்பு பாரிய அளவில் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை முன்னெடுத்து செல்வதற்குரிய  முயற்சிகளில் ஈடுபடாததினாலும்   சிவநேசதுரை சந்திரகாந்தன் பிள்ளையானின் விடுதலை மற்றும் வட  கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தல் என்பன மஹிந்த அவர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளதாலும்   மற்றும்   முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் TMVP  முன்பை விட செல்வாக்கான நிலையில் உள்ளதாலும் மேலும் TMVP கோத்தபாயா ராஜபக்சா அவர்களை ஆதரிப்பதாலும் முன்பு நடந்த தேர்தல்களில் ராஜபக்சாகளுக்கு வழங்கப்பட்ட வாக்குகளை   விட  அதிகமான   அளவு வாக்குகள் கோத்தபாய அவர்களுக்கு அளிக்கப்படுவதற்கான சர்தர்ப்பம்களும்  அதிகமாக உள்ளன.

இந்திய வம்சாவளி தமிழ் சமூகம்:-
இந்திய வம்சாவளி சமூகத்தை பொறுத்த அளவில் ஆறுமுகம் தொண்டமானின் செல்வாக்கு குறிப்பாக கடந்த 15 வருடகாலமாக குறைந்து கொண்டு செல்வதாலும் அதேவேளை அமைச்சர்களான மனோ கணேசன் , பழனி திகாம்பரம், ராதாகிருஷ்ணன் மற்றும் கண்டி பாராளுமன்ற உறுப்பினர் வேலும் குமார் ஆகியோருக்கு பாரிய ஆதரவு உள்ளதாலும் மேலும் அவர்களின் முற்போக்கு முன்னணி சஜித் அவர்களை ஆதரிப்பதாலும் இந்திய வம்சாவளியினரின் 5 இலட்சம் அளவிலான வாக்குகளில்  1 இலட்சத்திற்கும் சற்றும் அதிகமான வாக்குகள் தவிர்ந்த ஏனைய வாக்குகள் அனைத்துமே சஜித் அவர்களுக்கே அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது

முஸ்லிம் சமூகம்:-
குறிப்பாக 2010லிருந்து 2015ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் உள்ள முஸ்லீம் சமூகத்தில்  குறிப்பாக வடக்கு கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழுகின்ற மக்களில் பெரும்பாலானோர் பல கலவரம்கள் உட்பட தொடர் இன்னல்களை எதிர் கொண்ட வகையில் தமது வாழ்க்கையை முன்னெடுத்து சென்றனர். மேற் குறிப்பிட்ட காலப்பகுதியில்  குறிப்பாக பொதுபல சேனையின் திட்டமிட்ட தொடர்  துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகியும் இருந்தனர்.  மேலும் பொது பல சேனை குறிப்பாக கோத்தபாயா ராஜபக்சா  அவர்களின் வழிநடத்தலின்  கீழ் இயங்கிதாகவும் ஒரு கருத்து நிலவுகின்றது, அந்த வகையில் இத் தேர்தலில் முஸ்லீம் சமூகத்தால் அளிக்கப்படவுள்ளதாக கருதப்படும் 14 இலட்சம் அளவிலான வாக்குகளில் கோத்தபாயா அவர்கள் 15% அளவிலான வாக்குகளை மட்டுமே  பெறுவார் என்றும் கருதப்படுகின்றது  .

இத் தேர்தலிலே 30 இலட்சத்திற்கும் அதிகமான சிறுபான்மை சமூகத்தின் வாக்குகள்  அளிக்கப்படலாம்  என்றும் மற்றும் இவற்றில்

  • வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களை பொறுத்தளவில் போர் , போர் காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் உலக போர் விழுமியம்களுக்கு அப்பால் மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் வெள்ளைக்கொடி விவகாரம்   காணாமல் ஆக்கப்பட்டமை போன்ற துர்ப்பாக்கிய விடயம்கள் இடம்பெற்ற போது பொறுப்பு வாய்ந்த பதவியில் இருந்த  ஒருவருக்கு  போட்டியாக உள்ள ஜனாதிபதி வேட்பாளரானா சஜித்   அவர்களுக்கு தமிழ் மக்கள்   பெருமளவில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம்களே மிகவும் அதிகமாக காணப்படுகின்றது. 
  • முஸ்லீம் சமூகத்தை  பொறுத்த அளவில் அமைதியாக வாழ்ந்த  தமது சமூகத்தின் இருப்பையே  இந்த நாட்டில் கேள்விக் குறியாகிய காலப்பகுதியில் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்த ஒருவர் ஜனாதிபதியாக வருவதை தடுக்கும் வண்ணம் முஸ்லீம் சமூகம் முன்பு என்றும் இல்லாத அளவு  தமது  முழு சக்தியையும்  சஜித் அவர்களுக்கு வழங்குவார்    போல் தென்படுகின்றது 
  • இந்திய வம்சாவளி மக்களை பொறுத்த அளவில் ஆறுமுகம் தொண்டமானிற்கு மாற்று தலைமகளாக இருக்கும் அரசியல் தலைகளின் மூலம் பாரிய அளவில் நன்மைகள் தமது சமூகத்தை நோக்கிய வண்ணம் உள்ளதனால் அச் சிறுபான்மை சமூகத்தின்  மிக கூடுதலான அளவு வாக்குகள் சஜித் அவர்களுக்கு வழங்க்கப்படலாம் என்றும் கருதப்படுகின்றது
அந்த வகையில் சிறுபான்மை சமூகத்தின்  75%திற்கும்  அதிகமான  வாக்குகள் சஜித் அவர்களிற்கே வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.


தேர்தல் களம் மாற்றம் கண்டு வருகின்றது  இவ் வேளையில்  இரு முன்னணி வேட்பாளர்களுக்கும் இடையேயானா  நெருக்கமான   போட்டி மேலும்  தேர்தலில் 3வது  அணியாக தென்படுகின்ற  ஜேவிபி    முற்று முழுதாக சிங்கள மக்களின் வாக்கு வங்கியையே நம்பியுள்ளதாலும் அத்தோடு ஜேவிபி யினர்    தம் வசப்படுத்துவார்கள்  என்று கருதப்படும் 5 இலட்சத்திலிருந்து   இருந்து 7 இலட்சம் அளவிலான வாக்குகள் என்பன   சிறுபான்மை சமூகத்தின் வாக்கு வங்கியின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.   அந்த வகையில் சிறுபான்மை சமூகம் ஆகிய நாமும் எவ்வாறாயினும் வாக்களிப்பில் பங்கு கொள்வது மட்டுமல்லாது   இந்த நாட்டில் உள்ள அனைத்து இன  மக்களையும் ஓரளவிற்கேனும் சமனாக நடத்தக்கூடிய  ஜனாதிபதியை தெரிவுசெய்யும்  ஒரு சக்திவாய்ந்த சமூகமாகவும்   மீண்டும் ஒரு முறை விளங்குவோம்  .

ஆர்.சயனொளிபவன் & TEAM