ராஜபக்ஷ தரப்பினரிடம் இனவாதம் மட்டுமே உள்ளது – பிரதமர் குற்றச்சாட்டு



ராஜபக்ஷ தரப்பினரிடம் இனவாதம் மட்டுமே காணப்பட்டுவதாகவும் இவர்களே நாட்டை சீரழித்ததாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

ஏறாவூரில் முன்னாள் முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், “இந்தப் பிரதேசத்திலே மேற்கொள்ளக் கூடிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற பல கூட்டங்களிலே தெளிவாகக் கூறியுள்ளேன். ஏனைய மாவட்ட மக்களைப்போல மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கும் தொழில் வாய்ப்புக்கள் தேவைப்படுகின்றது.

2015ஆம் ஆண்டும் அன்னத்திற்கு வாக்களித்து இன, மத பேதத்தை ஒழித்தோம். ஆனாலும் ராஜபக்ஷகள் தலையெடுத்து இனவாதத்தைக் கொண்டு மீண்டும் நாட்டைச் சீரழிக்க முயற்சிக்கின்றார்கள்.

ஒவ்வொரு விதமாக பல மட்டங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுத்து வருகின்றார்கள். அதேபோன்று தமிழ் மக்களுக்கெதிரான நடவடிக்கைளையும் முன்னெடுத்து வருகின்றார்கள்.

இவர்கள்தான் தலதாமாளிகையைச் சுற்றி இரவு ரேஸ் ஓடியவர்கள். தலதாமாளிகைக்கு குண்டு வீசும் செய்தியைச் சொன்னவர்களும் இவர்கள்தான். அவர்களிடம் கையிருப்பில் இருப்பது இனவாதம் மட்டுமே.

கோட்டாவின் அறிக்கையை முழு நாடும் அறிந்திருக்கின்றது. எமது தேவைபப்பாடு இனவாதமல்ல அமைதியோடும் அபிவிருத்தியோடும் இலங்கையர் என்ற அடையாளத்தோடும் முன்னோக்கிச் செல்லுதல் என்பது மாத்திரமே நமக்கு உள்ளது.

அந்தத் தேவைப்பாட்டைப் பூர்த்தி செய்யக் கூடிய ஆற்றல் சஜித் பிரேமதாசவுக்கு மட்டுமே உள்ளது. எனவே, சஜித்திற்கு வழங்குகின்ற வாக்கு ஒற்றுமைக்காகவும் இலங்கையர் என்ற அடையாளத்துக்காகவும் வழங்கப்படுகின்ற வாக்காகும்.

அதனால் நவம்பர் 16ஆம் திகதி சஜித்துக்கு வாக்களித்து ஒற்றுமையான நாட்டை கட்டியெழுப்புவோம்” என்றார்.