இலங்கை ஜனாதிபதி தேர்தல்: பெண்களுக்கு நாப்கின் இலவசம் என்று வாக்குறுதி தந்த சஜித் பிரேமதாஸ



பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கின்களை தனது ஆட்சியில் இலவசமாக வழங்கப் போவதாக, இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அறிவித்திருக்கிறார்.

திவுலப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, இந்த விடயத்தை சஜித் பிரேமதாஸ பகிரங்கமாக கூறியுள்ளார்.

உரிய நாப்கின்களை மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தாமை காரணமாக, பாரிய சுகாதார சீர்கேடுகளுக்கு முகம் கொடுப்பதாக கூறிய சஜித் பிரேமதாஸ மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தக் கூடிய பாதுகாப்பான நாப்கின்கள் வாங்க முடியாத பெண்களுக்கு, அவற்றினை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

இந்த வாக்குறுதி தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளதோடு, அது குறித்த வாதப் பிரதிவாதங்களும் ஆரம்பித்துள்ளன.

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு நாப்கின்களை இலவசமாக வழங்குவேன் என்று, சஜித் பிரேமதாஸ கூறியதை வைத்து, அவரை, Pad Man (பேட் மேன்) என்று, எதிரணியினர் கிண்டல் செய்யத் தொடங்கியுள்ளனர்.

பெருமையுடன் சூடிக் கொள்வேன்: சஜித் பதில்
எவ்வாறாயினும், இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள சஜித் பிரேமதாஸ, 'பேட் மேன் என்கிற லேபிளை பெருமையுடன் சூடிக் கொள்வேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.