வீதியில் கடமையிலிருந்த பொலிஸாரை மோட்டார் சைக்கிள் மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தர் பலிஅக்கரைப்பற்று சாகாமம் வீதியில் நேற்றுமுன்தினம் இரவு (24) பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது வேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் அட்டாளைச்சேனை 10 ஆம் பிரிவினைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய கலந்தர்லெவ்வை முகம்மது லாபீர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று சாகாமம் வீதியில் இரவுக் கடமைக்காக அமர்த்தப்பட்டிருந்த ஆறுவர் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் ரோந்து நடவடிக்கையில் இரவு 9.45 மணியளவில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அப்பிரதேசத்தில் வேகமாக மோட்டார் சைக்கிள் ஒன்று வருவதைக் கண்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதனை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர்.

இதனை பொருட்படுத்தாத மோட்டார் சைக்கிள் சாரதி குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதுண்டதனால் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை வழங்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த மோட்டார் செலுத்தி வந்த சந்தேக நபர் அவ்விடத்தில் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் அக்கரைப்பற்று பொலிஸாரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டு அவரை நீதி மன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் அம்பாறை தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சமூகமளித்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

இறந்த பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் நேற்று(25) இரவு 8.30 மணியளவில் அந்நாரின் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன், சடலம் இன்று(26) காலை 5 மணியளவில் அட்டாளைச்சேனை பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.