ஜனாதிபதி பிரியாவிடை உரை



ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரான பாராளுமன்ற அமர்வு இன்று கூடவுள்ளது. இந் நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பிரியாவிடை உரையை இன்று நிகழ்த்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அது தொடர்பாக இதுவரை தங்களுக்கு அறிவிக்கப்படவில்லை என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க  தெரிவித்தார்.

காலை 10.30மணிக்கு ஆரம்பமாகும் அமர்வில் மூன்று கட்டளைகள் மற்றும் தேசிய புத்தாக்க முகவராண்மை சட்டமூலம் என்பவற்றை அனுமதிப்பது தொடர்பான விவாதம் நடைபெற இருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்தது. பிற்பகல் 1.30முதல் 6.30மணி வரை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஐ.ம.சு.மு முன்வைக்கும் ஒத்திவைப்புவேளை விவாதம் நடைபெறும். ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தரப்பு அரச சொத்துக்களை பயன்படுத்தி தேர்தல் சட்டங்களை மீறுவதாக குற்றஞ்சாட்டி இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 19ஆவது திருத்தத்திற்கு அமைய 3மாதத்திற்கு ஒருதடவை ஜனாதிபதிக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்று உரையாற்ற முடியும். இந் நிலையில் தனது பதவிக்காலம் நிறைவடைய முன்னர் நடைபெறும் இறுதி அமர்வில் அவர் உரையாற்றுவார் என பரவலாக தெரிவிக்கப்படுகிறது. இந் நிலையில் இன்றைய விவாதம் பரபரப்பாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.