பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கைசீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சி.பீ.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக உதவிகளை வழங்குமாறும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையினால், இரத்தினபுரி, பதுளை, கேகாலை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை இன்று மாலை 4.30 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பத்து மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அடைமழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலையினால், 1,480 குடும்பங்களைச் சேர்ந்த 5,415 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையினால் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக நிலையம் தெரிவித்துள்ளது. 3 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளதுடன் மேலும் 122 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. எட்டு இடைத்தங்கல் முகாம்களில் 159 குடும்பங்களைச் சேர்ந்த 619 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.